இலங்கை ஒற்றையாட்சி அரசின்

20ஆவது திருத்தச் சட்ட நகல் வரைபு பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பு

கூச்சல் குழப்பங்களுக்கு மத்தியில் சபை அமர்வு
பதிப்பு: 2020 செப். 22 21:56
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: செப். 23 11:10
main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#sl
#parliament
#20th
#bill
இலங்கை ஒற்றையாட்சி அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டத்திற்கான நகல் வரைபு இன்று செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. நகல் புதிய வரைபு தொடர்பாக அரசாங்கத்தரப்புக்குள்ளேயே கருத்து மோதல்கள் உருவாகியிருந்தன. ஆனாலும் நீதியமைச்சர் அலி சப்ரி அந்த நகல் வரைபை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் உத்தரவுடன் சமர்ப்பித்தார். தொடர்ச்சியான எதிர்ப்புகளுக்கு மத்தியில் 20ஆவது திருத்தச் சட்டத்திற்கான நகல் வரைபு இன்று காலை சபாநாயகர் அலுவலகத்தில் வைத்து சபாநாயகர் மகிந்த யாப்பா அபயவர்த்தனவிடம் கையளிக்கப்பட்டது. அதேவேளை குறித்த நகல் வரைப்பு மக்கள் அபிப்பிராய வாக்கெடுப்புக்கு விடப்பட வேண்டுமெனக் கோரி உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
 
சட்டத்தரணி இந்திக்க கால்லகே இந்த மனுவை இன்று பகல் தாக்கல் செய்துள்ளார். மேலும் மனுக்கள் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படுமென எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

நீதியமைச்சர் அலி சப்பரி 20ஆவது திருத்தச் சட்டத்திற்கான நகல் வரைபை சமர்ப்பித்த நில மணி நேரங்களில் உயர் நீதிமன்றத்தில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதேவேளை, வரைபைச் சமர்ப்பித்தபோது எதிர்த்தரப்பு உறுப்பினர்கள் கூச்சல் குழப்பங்களில் ஈடுபட்டனர். தமது மேசையில் இருந்த புத்தகங்களைத் தூக்கி எறிந்தனர். அரச தரப்பு எதிர்த்தரப்பு உறுப்பினர்களிடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டது.

தமது ஆசனங்களில் இருந்து எழுந்த உறுப்பினர்கள் சபை நடுவாக நடந்து வந்து உரக்கச் சத்தமிட்டனர். திருத்த வரைபுக்கு எதிராக எழுதப்பட்ட வாசகங்கள் அடங்கிய சுலோக அட்டைகளையும் கைகளில் ஏந்தி இருந்தனர்.

இந்த வரைபு ஜனநாயகத்துக்கு விரோதமானது என்றும் கருத்துச் சுதந்திரத்திற்கு ஆபத்தானதென்றும் எதிர்த்தரப்பு உறுப்பினர்கள் மேலும் சத்தமிட்டனர். ஆனாலும் கூச்சல் குழப்பங்களைப் பொருப்படுத்தாது அமைச்சர் அலி சப்ரி வரைபச் சமர்ப்பித்தார். தமிழரசுக் கட்சி, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர்கள் அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்தனர்.

பாராளுமன்றத்தில் நகல் வரைபைச் சமர்ப்பிப்பது தொடர்பாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுடன் நேற்றுத் திங்கட்கிழமை இரவு ஸ்ரீலங்கப் பொதுஜனப் பெரமுனக் கட்சி உறுப்பினர்களும் மூத்த அமைச்சர்களும் கலந்துரையாடியிருந்தனர். பிரதமர் மகிந்த ராஜபக்ச இந்த வரைபை சமர்ப்பிக்க வேண்டுமெனக் கேட்டகப்பட்டபோதும் அதற்கு அவர் விரும்பவில்லையென உள்ளகத் தகவல்கள் கூறுகின்றன.

இதேவேளை, சென்ற 3ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைவாகவே திருத்த வரைபு நாடாளுமன்ற நிகழ்ச்சி நிரலில் இணைக்கப்பட்டுள்ளது. ஆனால் பிரதமர் மகிந்த ராஜபக்ச அமைத்த குழுவின் அறிக்கையில் கூறப்பட்டிருந்த திருத்தங்கள் எதுவுமே குறித்த வரைபில் சேர்க்கப்படவில்லை.

ஆனால் குழுவின் திருத்தங்கள் வரைபில் இணைக்கப்பட்டு மீண்டும் புதிய வர்த்தமானி வெளியிடப்படுமென அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் கெகலிய ரம்புக்வெல கூறியிருந்தார். சென்ற 15ஆம் திகதி குழு அறிக்கையைச் சமர்ப்பித்திருந்தது.

ஆனால் 18ஆம் திகதி வெளியிடப்பட்ட பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 3ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி இதழ் இணைக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் இன்று சமர்ப்பிக்கப்பட்ட அந்த வரைபு தொடர்ச்சியாக ஏழு நாட்கள் விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்படவுள்ளது. விவாதத்தின்போது முன் வைக்கப்படும் திருத்தங்கள் எற்றுக்கொள்ளப்படுமென நீதியமைச்சர் அலி சப்ரி கூறியபோதும் திருத்தங்கள் எதுவும் சேர்த்துக் கொள்ளப்படும் நிலை இல்லையென ஜனாதிபதி செயலகத் தகவல்கள் கூறுகின்றன.

அதேவேளை, புதிய வரைபுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யவுள்ளதாக சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது.

அவ்வாறு வழக்குத் தாக்கல் செய்யப்பட்டால் மூன்று வாரங்களின் பின்னரே உயர் நீதிமன்றத் தீர்ப்பு வழங்கப்படும் அதன் பின்னரே குறித்த வரைபு பாராளுமன்றத்தில் அங்கீகரிப்பதற்கான வாக்கெடுப்பை நடத்துவதா இல்லையா என்பது குறித்து தீர்மானிக்கப்படும்.

20ஆவது திருத்தச் சட்டத்திற்கான நகல் வரைபு சர்வஜன வாக்கெடுப்பின் மூலம் மக்கள் கருத்தறியாமல் அமுல்படுத்தப்படுவதைத் தடுக்குமாறு கோரி உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலத்துடன் குறித்த நகல் வரைபு நிறைவேற்றப்பட்டாலும் சர்வஜன வாக்கெடுப்பின் மூலம் மக்கள் அபிப்பிராயங்கள் பெறப்பட வேண்டுமென்பதை நீதியரசர்கள் அரசாங்கத்துக்கும் நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதிக்கும் அறிவிக்க வேண்டுமெனக் குறித்த மனுவில் கூறப்பட்டுள்ளது.