இலங்கைப் படையினரால்

கொழும்பில் தமிழ் இளைஞர்கள் வெள்ளை வானில் கடத்தப்பட்ட வழக்கு ஒத்திவைப்பு

நீதிபதியின் இடமாற்றத்தால் எழுந்த சிக்கல்
பதிப்பு: 2020 செப். 23 22:03
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: செப். 23 22:30
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lka
#tamil
#genocide
இலங்கை ஒற்றையாட்சி அரசின் படையினரால் வடக்குக் கிழக்கு மற்றும் கொழும்பு ஆகிய பிரதேசங்களில் பல தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டுக் காணாமல் ஆக்கப்பட்டிருந்தனர். குறிப்பாக போர்க்காலத்தின்போது கொழும்பில் தமிழ் இளைஞர்கள் உள்ளிட்ட பதினொருபேர் வெள்ளைவானில் கடத்தப்பட்டுக் காணாமல் ஆக்கப்பட்ட வழக்கு விசாரணை கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் தொடர்ச்சியாக இடம்பெற்றது வருகின்றது. இந்த நிலையில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற விசாரணையின்போது எதிர்வரும் டிசம்பர் மாதம் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இநத வழக்கை விசாரணை செய்து வந்த நீதிபதி ரங்க திஸாநாயக்கா இடமாற்றம் செய்யப்பட்டதால் விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
 
குறித்த வழக்குத் தொடர்பான ஆவணங்களை வாசித்து அறிந்துகொள்ள தனக்குக் கால அவகாசம் தேவையெக் கூறிய புதிய நீதிபதி பிரியந்த லியனகே விசாரணையை டிசம்பர் மாதம் 2ஆம் திகதி வரை ஒத்திவைத்தார்.

கோட்டாபய ராஜபக்ச ஸனாதிபதியாகப் பதவியேற்ற காரணத்தினாலேயே குறித்த நீதிபதிக்கு இடமாற்றம் வழங்கப்பட்டிருக்கலாமெனக் காணாமல் ஆக்கப்பட்ட இளைஞர்களின் உறவினர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

2008, 2009ஆம் ஆண்டுகளில் கொழும்பு கொட்டாஞ்சேனை மற்றும் தெஹிவளை ஆகிய பிரதேசங்களில் ஐந்து தமிழ் மாணவர்கள் உட்பட 11 பேர் வெள்ளைவானில் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்டிருந்தனர்.

இலங்கைப் படையினரே காரணம் என்று உறவினர்கள் அப்போது குற்றம் சுமத்தியிருந்தனர். பாதுகாப்புப் படை முன்னாள் தலைமை தளபதியான அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன, கடற்படையைச் சேர்ந்த முன்னாள் தளபதி அட்மிரல் வசந்த கரன்னாகொட, முன்னாள் கடற்படைப் பேச்சாளர் கமாண்டர் டி.கே.பி தஸநாயக்க மற்றும் கடற்படையின் புலனாய்வுப் பிரிவிலுள்ள அதிகாரிகள் என 16 சந்தேகநபர்கள் பெயர் குறிப்பிடப்பட்டிருந்தனர்.

இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த கடற்படையின் புலனாய்வுப் பிரிவு அதிகாரி லெப்டின்ன கமாண்டர் சந்தன பிரசாத் ஹெட்டியாராச்சியை மறைத்து வைத்து வெளிநாட்டிற்கு அனுப்பிய குற்றச்சாட்டு பாதுகாப்புப் படை தலைமை அதிகாரியாகப் பதவி வகித்திருந்த முன்னாள் கடற்படை தளபதியான ஓய்வுபெற்ற அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன மீது சுமத்தப்பட்டிருந்தது.

இந்த நிலையில் இது தொடர்பான வழக்கு விசாரணை கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் இன்று நடைபெற்றது. விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த லெப்டினன் கமாண்டர் சந்தன பிரசாத் ஹெட்டியாராச்சி, நீதிமன்றில் இன்று முன்னிலையானார்.

போலிக் கடவுச்சீட்டு மற்றும் அடையாள அட்டை விவகாரம் தொடர்பாக இவர்மீது விசாரணைகள் தொடர்ந்த நிலையில் அவை குறித்த விசாரணை அறிக்கை குற்றப் புலனாய்வப் பிரிவினரால் நீதிமன்றில் சமர்பிக்கப்பட்டிருந்தது.

மைத்திரி- ரணில் அரசாங்கத்தின்போது கலகொட அத்தே ஞானசார தேரர் மீதான விசாரணை, மத்திய வங்கி ஊழல் விசாரணை ஆகிய பல முக்கியமான வழக்குகளை விசாரித்த நீதவான் ரங்க திஸாநாயக்கவே வெள்ளை வான் கடத்தல் வழக்கையும் விசாரணை செய்துவந்தார்.

இந்நிலையில் அவருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டு கொழும்பு மேல் நீதிமன்ற நீதவானாகப் பதவி வகித்திருந்த பிரியந்த லியனகே, கொழும்பு கோட்டை நீதவானாக சமீபத்தில் இடமாற்றம் செய்யப்பட்டிருந்தார்.

இந்த வழக்கு விசாரணை தொடர்பான செய்திகளைச் சேகரிக்க ஊடகவியலாளர்கள் கடந்த காலங்களில் நீதிமன்றத்திற்கு வருவது வழமை. ஆனால் கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னர் இந்த வழக்கு விசாரணை குறித்த செய்திகளைச் சேகரிக்க ஊடகவியலாளர்கள் வருவதில்லையென நீதிமன்றத் தகவல்கள் கூறுகின்றன.