வடமாகாணம்

மன்னாரில் மன்னர்கால நாணயக் குற்றிகள் மீட்பு

இலங்கைப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டதால் சந்தேகம்
பதிப்பு: 2020 செப். 23 22:43
புலம்: மன்னார்,ஈழம்
புதுப்பிப்பு: செப். 23 23:16
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
ஈழத் தமிழர்களின் தாயகமான மன்னார் − நானாட்டான் பிரதேசத்தில் இருந்து மீன் மற்றும் வாள் சின்னங்கள் பொறிக்கப்பட்ட சுமார் 1904 நாணயக் குற்றிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. கண்டெடுக்கப்பட்ட நாணயக் குற்றிகள் பாண்டிய மன்னர்களின் காலத்திற்கு சொந்தமானவையாக இருக்கலாம் மன்னார் செயலக தமிழ்த் தொல்லியல் அதிகாரிகள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர். மன்னார் நானாட்டான் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட வடக்கு வீதியிலேயே மீன் மற்றும் வாள் சின்னங்கள் பொறிக்கப்பட்ட நாணயக் குற்றிகள் மற்றும் சட்டி, பாணை, ஓட்டுத் துண்டு போன்ற தொல்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
 
குறித்த காணியின் உரிமையாளரால் புதிய வீடு அமைப்பதற்கு என அத்திவாரம் தோண்ட முற்பட்டபோதே குறித்த நாணயங்கள் உள்ளிட்ட தொல்பொருட்கள் மீட்கப்பட்டதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

தொல்பொருட்கள் மீட்கப்பட்டமை தொடர்பாக நானாட்டான் பிரதேச சபையின் உப தவிசாளருக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து உப தவிசாளர் குறித்த விடயம் தொடர்பாக முருங்கன் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் கவனத்திற்கு கொண்டுவந்தார் அதனையடுத்து மீட்கப்பட்ட குறித்த நாணயக் குற்றிகள் முருங்கன் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

இந்த நாணயக் குற்றிகள் அனைத்தும் மன்னார் நீதிமன்றத்தின் ஊடாக தொல்பொருள் தினைக்களத்திற்கு கையளிக்கப்படவுள்ளது. இந்த நடவடிக்கைகளில் இலங்கைத் தொல்பொருள் திணைக்களத்தின் மன்னார் செயலக அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். ஆனாலும் முருங்கன் பொலிஸாரிடம் குறித்த நாணயக் குற்றிகள் ஒப்படைக்கப்பட்டமை தொடர்பாகப் பிரதேச மக்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

தமிழ் மன்னார்கள் யாழ்ப்பாணம், வன்னி இராஜ்ஜியங்களை ஆண்டபோது பயன்படுத்திய நாணயங்கள், புராதனச் சின்னங்கள் பற்றிய அடையாளங்கள் மன்னார் பிரதேசத்தில் இருப்பதாக தொல்லியல் ஆராட்சியில் ஈடுபடும் தமிழ் மாணவர்கள் ஏற்கனவே கூறியிருக்கின்றனர்.

இது பற்றிய மேலதிக ஆய்வுகள் செய்யப்பட வேண்டுமென தொல்லியல் பேராசிரியர்களான பத்மநாபதன், புஸ்பரெட்ணம் ஆகியோரும் கூறியிருக்கின்றனர். பழம்பெரும் சைவ ஆலயம் இருந்தமைக்கான அடையாளம் ஒன்றை யாழ் பல்கலைக்கழகத்தில் தொல்லியலியல்துறையில் கலாநிதிப் பட்டப்படிப்பை மேற்கொண்ட மாணவர் ஒருவர் கடந்த ஆண்டு கண்டுபிடித்திருந்திருந்தனர்.

அதேவேளை, மன்னார் வடக்கு வீதியில் கண்டுபிடிக்கப்பட்ட தொல்பொருட் சின்னங்கள் பௌத்த சமயத்துக்குரியதென்றோ அல்லது சிங்கள மன்னர்கள் பயன்படுத்தியதென்றோ கூறப்படும் நிலை ஏற்படுவதைத் தவிர்க்க வேண்டியது தமிழ் தொல்லியலாளர்களின் பொறுப்பு.

கொழும்பை மையமாகக் கொண்ட தொல்பொருள் ஆராட்சித் திணைக்களத்தின் கீழ் வடக்குக் கிழக்கில் உள்ள தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் செயற்படுகின்றமை சிக்கலானதொரு விவகாரம்தான். ஆனாலும் அந்த பௌத்த இனவாத நெருக்கடிகளையும் தாண்டி தமிழ் மக்களின் மரபுரிமைச் சின்னங்களைப் பாதுகாக்க வேண்டிய கடமை தமிழ் அதிகாரிகளுக்கு இருக்க வேண்டுமென்றே தமிழ் மக்கள் எதிர்பார்க்கின்றனர்.