தியாகி திலீபன் உயிர் நீத்த நினைவு நாளில் இலங்கை ஒற்றையாட்சி அரசின்

அடக்குமுறைக்கு எதிரான போராட்டத்தில் மக்கள் பற்கேற்றனர்

யாழ் இந்தியத் துணைத் தூதரகத்துக்கு முன்பாகப் போராட்டத்தை நடத்தியிருக்கலாமெனவும் தெரிவிப்பு
பதிப்பு: 2020 செப். 26 23:09
புலம்: யாழ்ப்பாணம், ஈழம்
புதுப்பிப்பு: செப். 26 23:56
main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lka
#tamil
#genocide
ஈழத் தமிழ் மக்களுக்கு எதிராக கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள அடக்குமுறைகளை இலங்கை ஒற்றையாட்சி அரசு நிறுத்தவேண்டும் என்று கோரி ஒன்றிணைந்த தமிழ்தேசியக் கட்சிகளால் முன்னெடுக்கப்பட்ட அடையாள உணவு தவிர்ப்புப் போராட்டம் சாவகச்சேரி சிவன் ஆலய முன்றலில் இன்று சனிக்கிழமை காலை 9 மணி தொடக்கம் மாலை நான்கு மணி வரை இடம்பெற்றது. இலங்கைப் படையினரின் பெரும் நெருக்குவாரங்கள், அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் இடம்பெற்ற போராட்டத்தில் நூற்றுக்கனக்கான மக்கள் கலந்துகொண்டனர். யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் பலரும் போராட்டத்தில் பங்கேற்றனர்.
 
தியாகி திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுக்குத் தடைவித்த இலங்கை ஒற்றையாட்சி அரசின் யாழ் நீதிமன்றம் அந்தத் தடையை மேலும் 14நாட்களுக்கு நீடித்திருந்தது. ஆனால் நீதிமன்றத் தடையையும் பொருத்தபடுத்தாமல் சாவகச்சேரி சிவன் ஆலய முன்றலில் இடம்பெற்ற போராடடத்தில் மக்கள் கலந்துகொண்டனர்.

பொலிஸாரும் இராணுவத்தினரும் சாவகச்சேரி நகரில் குவிக்கப்பட்டு அச்சுறுத்தல் விடும் செயற்பாடுகளிலும் ஈடுபட்டனர். அதேவேளை, போராட்டத்தில் பங்குகொள்ள அங்கு வந்த யாழ் பல்கலைக்கழக மாணவர்களைப் பொலிஸார் தடுக்க முற்பட்டபோது, மூத்த சட்டத்தரணி என்.சிறிகாந்தா பொலிஸாருக்கு விடயத்தை எடுத்துக் கூறினார். இதனால் மாணவர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

தொண்டமனாறு செல்வச்சந்நிதி ஆலயத்தில் இந்தப் போராட்டத்தை நடத்த திட்டமிட்டிருந்த போதும் வல்வெட்டித்துறைப் பொலிஸார் நேற்று வெள்ளிக்கிழமை பருத்தித்துறை நீதிமன்றில் மனுத் தாக்கல் செய்து தடை விதித்திருந்தனர்.

இந்த நிலையிலேயே அரசின் அடக்குமுறைகளுக்கு எதிரான அடையாள உணவு தவிர்ப்புப் போராட்டம் சாவகச்சேரி சிவன் ஆலய முன்றலில் இடம்பெற்றது.

தமிழ் மக்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள அடக்குமுறைகளை அரசு நிறுத்தவேண்டும் என்று கோரி ஒன்றிணைந்த தமிழ் தேசியக் கட்சிகளால் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் வெற்றியென மக்கள் கூறுகின்றனர்.

இராணுவ அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் தமிழ்த்தேசியக் கட்சிகள் ஒன்று சேர்ந்து இந்தப் போராட்டத்தை முன்னெடுத்தனர். ஆனால் இந்தப் போராட்டத்தை யாழ்ப்பாணத்தில் உள்ள இந்தியத் துணைத் தூதரகத்துக்கு முன்பாக நடத்தியிருக்கலாமென சிவில் சமூகப் பிரதிநிதியொருவர் கூர்மைச் செய்தித் தளத்திடம் கூறினார்.

தியாகி திலீபன். இந்திய இலங்கை அரசுகளிடம் நீதி கேட்டுப் போராடியவர் என்பதால் அந்தப் போராட்டத்தைத் தமிழ்த்தேசியக் கட்சிகள் இந்தியத் துணைத் தூதரகத்துக்கு முன்பாக நடத்தியிருக்க வேண்டுமெனவும் அந்தப் பிரதிநிதி கருத்து வெளியிட்டார்.

யாழ் இந்தியத் துணைத் தூதரகம் நடத்துகின்ற விருந்துபசாரங்களில் பங்குகொள்ளும் தமிழ்த்தேசியக் கட்சிகள், அந்தத் தூதரகத்துக்கு முன்பாகப் போராட்டத்தை நடத்தியிருந்தால், இந்திய- இலங்கை அரசுகளின் போக்குகளில் குறைந்தபட்ச மாற்றங்களை உருவாக்கியிருக்கலாமெனவும் அந்தப் பிரதிநிதி கூர்மைச் செய்தித் தளத்திற்குத் தெரிவித்தார்.