மலையகத் தமிழ் மக்கள் வாழும்

கொட்டகலையில் இராணுவ முகாம்- பெயர்க்கல் நாட்டப்பட்டது

மக்களை வெளியேறுமாறும் அறிவுறுத்தல்
பதிப்பு: 2020 ஒக். 05 21:42
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: ஒக். 05 23:24
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lka
#gotabayarajapaksa
இலங்கை ஒற்றையாட்சி அரசின் நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரங்கள் தீவிரமாக இடம்பெற்ற காலத்தில் கொட்டகலை பகுதியில் இராணுவ முகாம் ஒன்றை அமைக்க ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாகக் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. ஆனால் தற்போது அங்கு 581 ஆவது படைப்பிரிவின் தலைமையகம் அமைக்கப்படுவதற்கான பெயர்க் கல் நாட்டப்பட்டுள்ளது. மலையகத் தமிழ் மக்கள் அதிகமாக வாழும் கொட்டகலைப் பிரதேசத்தில் அமைக்கப்படவுள்ள முகாமில் சுமார் 300 இராணுவத்தினர் தங்கவுள்ளதாகவும் இதனால் சுற்றுப்பறங்களில் உள்ள குடும்பங்களை வேறு இடத்திற்குச் செல்லுமாறும் இராணுவம் கூறியுள்ளது.
 
இராணுவ முகாம் அமைக்கப்படவுள்ள குறித்த காணியைக் குத்தகைக்கு எடுத்தவர் ஹட்டன் நீதிமன்றத்தில் வழங்குத் தொடுத்துள்ளார். வழக்கு விசாரணைகளில் பிரதிவாதிகள் தரப்பில் நகர அபிவிருத்தி அதிகாரசபையும் இராணுவத்தினரும் முன்னிலையாகியுள்ளனர்.

நகர அபிருத்தி அதிகாரசபை அதிகாரிகள் இராணுவத்தின் சார்பில் நீதிமன்றத்தில் முன்னிலையாகியதால், இந்த வழக்கைத் தொடர்ந்து விசாரணை செய்ய முடியாதென நீதிமன்றம் கூறியுள்ளது.

ஆனாலும் எதிர்வரும் 29ஆம் திகதி காணி உரிமையாளர் சார்பில் ஆட்சேபனைகளை முன்வைக்குமாறு நிதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

எனினும் குறித்த காணியில் இராணுவ முகாம் அமைப்பதற்கான ஏற்பாடுகள் இடம்பெறுவதாக பிரதேச மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

சென்ற முதலாம் திகதி வியாழக்கிழமை குறித்த இராணுவப் படைப்பிரிவின் பெயர்க்கல் ஹட்டன் -தலவாக்கலை பிரதான வீதிக்கு அருகில் நாட்டப்பட்டுள்ளது.

தலைமையகம்- 581 ஆவது படைப்பிரிவு எனவும் பெயரிடப்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் கூறுகின்றனர்.

இதேவேளை, குறித்த இடத்தில் இராணுவத்தினர் எந்த விதமான அனுமதியுமின்றி அத்துமீறி அங்குள்ள கட்டிடங்களுக்குள் குடியேறியுள்ளதாகவும் பிரதேச மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

இராணுவ முகாம் அமைக்கப்படுவதற்குப் பிரதேசத்தைச் சேர்ந்த அரசியல்வாதிகள் சிலரும் உடந்தையாக இருப்பதாக பிரதேச மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

அதேவேளை, குறித்த பகுதி அனர்த்த முகாமைத்துவ நிலையமாக உருவாக்கப்பட்ட இருப்பதால் இது குறித்து மக்கள் அச்சமடையத் தேவையில்லையென இராணுவ உயர் அதிகாரிகள் கூறுகின்றனர்.

சமீபத்தில் காலமான ஆறுமுகன் தொண்டமானின் மகன் ஜீவன் தொண்டமான், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளராகப் பதவி வகிப்பதுடன் கோட்டாபய ராஜபக்சவின் அரசாங்கத்தில் இராஜாங்க அமைச்சராகவும் பதவி வகிக்கின்றார்.

ராஜபக்சக்களை மையப்படுத்திய ஸ்ரீலங்காப் பொதுஜனப் பெரமுன அரசாங்கத்தின் முக்கிய பங்காளிக் கட்சியான இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், கொட்டகலையில் இராணுவ முகாம் அமைக்கப்படுகின்றமை தொடர்பாக எந்தவொரு கருத்தையும் இதுவரை வெளியிடவில்லை.

மனோ கணேசன் உள்ளிட்ட ஏனைய சில மலையத் தமிழ் அரசியல்வாதிகள் இதற்கு எதிர்ப்பு வெளியிட்டாலும், இராணுவ முகாம் அமைப்பதைத் தடுப்பதற்கான எதிர்ப்புச் செயற்பாடுகள் எதிலுமே ஈடுபடவில்லையென பிரதேச மக்கள் கூறுகின்றனர்.