அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர்

ரிஷாட் பதியுதீன் கைது செய்யப்படுவார? சரணடைவாரா?

இலங்கைப் பொலிஸார் கொழும்பு. மன்னார் வீடுகளுக்கு அனுப்பப்பட்டனர்
பதிப்பு: 2020 ஒக். 13 23:24
புலம்: மன்னார், ஈழம்
புதுப்பிப்பு: ஒக். 13 23:36
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lka
#muslims
#rishad
#bathiudeen
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர், முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இன்று செவ்வாய்க்கிழமை நள்ளிரவு அல்லது நாளை புதன்கிழமை அதிகாலை கைது செய்யப்படலாமென இலங்கைக் குற்றப் புலனாய்வுப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஆனால் ரிஷாட் பதியுதீன் நாளை புதன்கிழமை கொழும்பு கோட்டை நீதிமன்றத்தில் தனது சட்டத்தரணியோடு சரணடைவாரென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. குற்றப் புலனாய்வுப் பொலிஸார் அவரைக் கைது செய்யவதற்கு முன்னர் ரிஷாட் பதியுதீன் நீதிமன்றத்தில் சரணடைவாரென்றும் அந்த வட்டாரங்கள் கூறுகின்றன.
 
அமைச்சராகப் பதவி வகித்திருந்தபோது, பொது நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியமை, தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளில் தேர்தல் விதிகைள மீறியமை போன்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் அவரைக் கைது செய்யவதற்கான அனுமதியை வழங்குமாறு கோரி, குற்றப் புலனாய்வுப் பொலிஸார் கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தனர்.

ஆனால் குறித்த மனுவின் பிரகாரம் அவரைக் கைது செய்ய முடியாதென நீதிமன்றம் இன்று பிற்பகல் நிராகரித்தது. ஆனாலும் இலங்கைச் சட்ட மா அதிபர் திணைக்களம் நீதிமன்றத்திற்கு வழங்கிய அறிவுறுத்தல்களின் பிரகாரம் பிடியாணையின்றி ரிஷாட் பதியுதீனைக் குற்றப் புலனாய்வுப் பொலிஸார் கைது செய்ய முடியுமென நீதிமன்றம் இன்று மாலை அனுமதி வழங்கியது.

இதனையடுத்து கொழும்பு, மன்னார் ஆகிய பிரதேசங்களில் உள்ள ரிஷாட் பதியுதீனுடைய இல்லத்திற்கு ஆறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தைச் சேர்ந்த ஆறு பொலிஸ் குழுக்கள் அனுப்பியுள்ளது.

ரிஷாட் பதியுதீன் தற்போது எங்கு தங்கியுள்ளாரெனத் தெரியவில்லை என்றும் கொழும்பு, மன்னார் ஆகிய பிரதேசங்களில் உள்ள அவருடைய வீடுகளிலும் அவருடை உறவினர்கள், நண்பர்கள் வீடுகளிலும் பொலிஸார் தேடுதல் நடத்தி வருவதாகக் கூறப்படுகின்றது.

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி நடைபெற்ற உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலுடன் தொடர்புள்ளதாக பௌத்த குருமார் குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தனர்.

ஆனால் அப்போது விசாரணை நடத்திய குற்றப் புலனாய்வுத் திணைக்களம், ரிஷாட் பதியுதீன் மீது குற்றங்கள் எதுவுமில்லையென நீதிமன்றத்தில் அறிவித்திருந்தனர்.

ஆனால் 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 19ஆம் திகதி ஜனாதிபதியாகக் கோட்டாபய ராஜபக்ச பதவியேற்றதும் ரிஷாட் பதியுதீனைக் கைது செய்ய வேண்டுமென பௌத்த குருமார் அழுத்தம் கொடுத்திருந்தனர். இந்த நிலையில் அவருடைய சகோதரர் றியாத் பதியுதீன் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.

இவ்வாறான நிலையில் றியாத் பதியுதீனுக்கும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கும் தொடர்பில்லையெனக் கூறி சென்றவாரம் விடுதலை செய்யப்பட்டிருந்தார். இந்தத் தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு முன்னிலையில் ரிஷாட் பதியுதீனும் பல தடவைகள் வாக்குமூலங்களை வழங்கியிருந்தார்.

இந்தவொரு நிலையிலேயே 2015- 2019ஆம் ஆண்டுகளில் அமைச்சராகப் பதவி வகித்தபோது ரிஷாட் பதியுதீன் பொது நிதியை முறைகேடாகப் பயன்படுத்தினார் என்றும் தேர்தல் விதிமுறைகளை மீறிச் செயற்பட்டிருந்தார் எனவும் குற்றம் சுமத்தப்பட்டு ரிஷாட் பதியுதீனைக் கைது செய்ய குற்றப் புலனாய்வுப் பொலிஸார் நீதிமன்ற அனுமதியைப் பெற்றிருக்கின்றனர்.

ஆனால் இந்தக் கைது நடவடிக்கை அரசியல் பழிவாங்கல் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் நேரடியாகக் குற்றம் சுமத்தியுள்ளது.