இந்தோ பசுபிக் பிராந்தியத்தி்ல் வலுப் பெறும் சீன ஆதிக்கம்

கொழும்புக்கு அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் கூறப்போவது என்ன?

மிலேனியம் சவால்கள் கூட்டுத்தாபன ஒப்பந்தம் குறித்தும் உரையாடல்
பதிப்பு: 2020 ஒக். 25 21:46
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: ஒக். 28 17:55
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lka
#gotabayarajapaksa
தென்பசுபிக் பிராந்தியத்தில் கடலோரக் கண்காணிப்புக் கப்பல்களை நிரந்தரமாக நிலை கொள்ளச் செய்வது குறித்து அமெரிக்கா அவசரமாக ஆராய்ந்து வரும் நிலையில், அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பியோ, அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் மார்க்ஸ் எஸ்ப்ர் ஆகியோர் நாளை திங்கட்கிழமை ஆசியாவுக்கான பயணத்தை ஆரம்பிக்கவுள்ளனர். நாளை மறுதினம் 27ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இலங்கைக்கு வரவுள்ள இருவரும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பிரதமர் மகிந்த ராஜபக்ச ஆகியோர் உள்ளிட்ட உயர்மட்ட அரசியல் பிரதிநிதிகளையும் சந்தித்து உரையாடவுள்ளனர்.
 
அமெரிக்காவில் ஜனாதிபதி தேர்தல் நவம்பர் மூன்றாம் திகதி நடைபெறவுள்ள நிலையிலும் அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பரவலினால் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளின் மத்தியிலும் ஆசிய நாடுகளுக்கான அவசரப் பயணம் தொடர்பாகக் கேள்விகள் எழுந்துள்ளன.

தென் மற்றும் மேற்குப் பசுபிராந்தியங்களில் பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் சீனாவின் நடவடிக்கைகளை எதிர்கொள்வதற்காக அமெரிக்கா அப்பகுதியில் தனது கடலோர காவல்படையின் ரோந்துகப்பல்களை ஈடுபடுத்தவுள்ளதாக வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ரொபேர்ட் ஓ பிரையன் தெரிவித்திருந்தார்.

இவ்வாறானதொரு நிலையிலேயே இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ, அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் மார்க்ஸ் எஸ்ப்ர் ஆகியோரின் ஆசிய நாடுகளுக்கான பயணங்களுக்கு வெள்ளை மாளிகை ஏற்பாடு செய்துள்ளது.

அமெரிக்க வல்லரசு, பசுபிக்கிற்கான சக்தி என வர்ணித்துள்ள ரொபேர்ட் ஓ பிரையன் சீனாவின் அதிகாரபூர்வமற்ற, ஒழுங்குபடுத்தப்படாத மீன்பிடி நடவடிக்கைகள் இந்தோ- பசுபிக் பிராந்தியத்தில் உள்ள ஏனைய நாடுகளுக்கு அச்சுறுத்தல் எனக் கூறியுள்ளார்.

அத்துடன் பிராந்தியப் பொருளாதார வலயங்களில் செயற்படும் கடற்கலங்களை துன்புறுத்தும் செயற்பாடுகள் என்றும் அமெரிக்காவின் இறைமைக்கும் பசுபிக் பிராந்திய அயல்நாடுகளின் இறைமைக்கும் ஆபத்தையும் ஸ்திரத்தன்மை அற்ற நிலையையும் உருவாக்குமெனவும் ரொபேர்ட் ஓ பிரையன் குற்றம் சுமத்தியுள்ளதாக ஏபி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேற்கு பசுபிக் பிராந்தியத்தில் சீனாவின் மோசமான செயற்பாடுகள் தொடர்பாக அமெரிக்கப் பாதுகாப்பு செயலாளர் மார்க்ஸ் எஸ்ப்சர், கடந்த ஜுலை மாதத்தில் பட்டியலொன்றை வெளியிட்டிருந்தார்.

வியட்நாம் நாட்டின் படகொன்றை சீனக் கடற்படை மூழ்கடித்ததெனவும், மலேசியாவின் எண்ணெய் வாயுக்கப்பல்களுக்குச் சீனா இடையூரு விளைவிப்பதாகவும் மார்க்ஸ் எஸ்ப்சரு குற்றம் சுமத்தியிருந்தார்.

இவ்வாறானதொரு நிலையிலேயே சீனாவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சரும் சீன கம்யூனிசக் கட்சியின் மத்திய குழுவின் முக்கியஸ்தருமான யாங் யிசி தலைமையிலான தூதுக்குழு இந்த மாத முற்பகுதியில் இலங்கைக்கு அவசரமாக வந்து சென்றிருந்தது.

அதற்கு அடுத்தவாரம் அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ அவசரமாக இலங்கைக்கு வருவாரென கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகம் கூறியிருந்தது.

ஆனாலும் அவருடைய வருகையில் தாமதம் ஏற்பட்டிருந்தது. இந்த நிலையில் நாளை திங்கட்கிழமை ஆசியாவுக்கான பயணத்தை ஆரம்பிக்கும் மைக் பொம்பியோ மார்க்ஸ் எஸ்ப்ர் ஆகியோர் செவ்வாய்க்கிழமை கொழும்புக்கு வரவுள்ளனர்.

வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்த்தவின் அழைப்பிலேயே இந்தப் பயணம் இடம்பெறுவதாக இலங்கை வெளியுறவு அமைச்சு இன்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.

இலங்கைக்கு உதவி வழங்கும் அமெரிக்காவின் மிலேனியம் சவால்கள் கூட்டுத்தாபனத்தின் ஒப்பந்தத்தில் (Millennium Challenge Cooperation) (MCC) இலங்கை கைச்சாத்திடுவது மற்றும் இந்தோ- பசுபிக் பிராந்தியத்தில் அமெரிக்க, இந்திய, இலங்கை மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளின் கூட்டுச் செயற்பாடுகள் பற்றியும் பேசப்படுமென உள்ளகத் தகவல்கள் கூறுகின்றன.

கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதுவர் அலெய்னா ஆங்கில செய்திப் பத்திரிகை ஒன்றுக்கு வழங்கியிருந்த நேர்காணலில் இலங்கை மீதான சீனாவின் செயற்பாடுகள் தொடர்பாக மோசமான விமர்சித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.