இந்தோ பசுபிக் பிராந்திய அரசியல்

இலங்கையில் அமெரிக்கா, சீனா கருத்து மோதல்- தூதரகம் அறிக்கை

சீன ஆதிக்கம் தொடர்பாக புதுடில்லியில் அமொிக்கா. இந்தியா உரையாடல்
பதிப்பு: 2020 ஒக். 26 23:48
புலம்: யாழ்ப்பாணம், ஈழம்
புதுப்பிப்பு: ஒக். 28 17:58
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lka
#tamil
இந்தோ – பசுபிக் பிராந்தியத்தில் அமெரிக்க இந்தியப் பாதுகாப்பு ஒத்துழைப்புத் தொடர்பாக இந்தியாவிற்குப் பயணம் செய்துள்ள அமெரிக்கப் பாதுகாப்பு செயலாளர் மார்க் எஸ்பர் (Mark Esper) இந்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ( Rajnath Singh) ஆகியோர் கலந்துரையாடியுள்ளனர். புதுடில்லியில் இன்று திங்கட்கிழமை இந்த உரையாடல் இடம்பெற்றுள்ளது. தென் மற்றும் பசுபிப் பிராந்தியங்களில் பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் சீனாவின் செயற்பாடுகளினால் தென் பசுபிக் பிராந்தியக் கடலோரத்தில் கண்காணிப்புக் கப்பல்களை நிரந்தரமாக நிலைகொள்ளச் செய்வது தொடர்பாக அமெரிக்கா கவனம் செலுத்தி வருகின்றமை தொடர்பாகவும் இந்த உரையாடலில் இருவரும் விரிவாகப் பேசியுள்ளனர்.
 
அமெரிக்காவும் இந்தியாவும் இணைந்து பாதுகாப்பு ஒத்துழைப்புகளை மேலும் அதிகரிப்பது குறித்தே இந்த உரையாடலில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டதாக அமெரிக்க்ச் செய்தி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.

இந்தோ- பசுபிக் பிராந்தியத்தில் அமெரிக்காவும் இந்தியாவும் ஒரே மாதிரியான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளமை தொடர்பாகவும், அதனடிப்படையில் பிராந்திய பாதுகாப்புச் செயற்பாடுகளை இரு நாடுகளின் கடற்படையும் கூட்டாக மேற்கொள்வது குறித்தும் இந்த உரையாடலில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவின் பாதுகாப்புத் திட்டங்கள் மற்றும் பாதுகாப்புச் சார்ந்த பொருளாதார விடயங்களில் அமெரிக்கா நிறுவனங்கள் முதலீடு செய்ய வேண்டுமென இந்திய பாதுகாப்பு துறை அமைச்சர் இந்த உரையாடலின் போது ராஜ்நாத் சிங் வேண்டு கோள்விடுத்துள்ளார். அதனை ஏற்றுக் கொண்ட அமெரிக்கப் பாதுகாப்புச் செயலாளர் மார்க் எஸ்பர், அமெரிக்க முதலீட்டாளர்கள் புதுடில்லிக்கு வருகை தருவார்களென நம்பிக்கை வெளியிட்டார்.

இதேவேளை, எதிர்வரும் நவம்பர் மாதம் மலபாரில் இடம்பெறவுள்ள கடற்படைகளின் கூட்டு ஒத்திகையில் இந்தியாவும் அவுஸ்திரேலியாவும் இணைந்து செயற்படவுள்ளதை அமெரிக்காவின் இராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பியோ பாராட்டியுள்ளார். இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் இந்தியப் பாதுகாப்பு உயர் அதிகாரிகளை இன்று சந்தித்து உரையாடியபோதே அவர் இவ்வாறு பாராட்டியுள்ளார்.

இதேவேளை, நாளை செவ்வாய்க்கிழமை புதுடில்லியில் இடம்பெறவுள்ள 2-2 எனப்படும் கூட்டுச் செயற்பாடுகள் குறித்த சந்திப்பில் அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொமியோ, அமெரிக்கப் பாதுகாப்புச் செயலாளர் மார்க் எஸ்பர் ஆகிய இருவரும் கலந்து கொள்வர். இந்தோ- பசுபிக் பிராந்திய நலன்கள் குறித்தே இந்த சந்திப்பில் இருவரும் விளக்கமளிக்கவுள்ளனர்.

இதேவேளை, புதுடில்லியில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடல்களில் இந்தோ- பசுபிக் பிராந்தியத்தில் சீனாவின் ஆதிக்கம் மற்றும் இலங்கை மீதான சீனாவின் பொருளாதாரத் திட்டங்கள் பற்றியே அதிகளவு பேசப்பட்டதாக புதுடில்லித் தகவல்கள் கூறுகின்றன.

அமெரிக்காவும் இந்தியாவும் இணைந்து இலங்கை அரசாங்கத்துடனான இராஜதந்திர உறவுகளை மேலும் வலுப்படுத்தி அதன் மூலம் சீனாவின் ஆதிக்கத்தைக் குறைப்பது தொடர்பாகவும் கவனம் செலுத்தப்பட்டதாகப் புதுடில்லி உயர்மட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேவேளை, இலங்கையில் சீன அரசும் அதன் நிறுவனங்களும் மேற்கொண்டு வரும் பொருளாதார அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பாக விமர்சனம் செய்து கொச்சைப்படுத்த அமெரிக்காவுக்கு உரிமையில்லையென கொழும்பில் உள்ள சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது. தேவையின்றி அமெரிக்கா தலையிடுவதாகவும் சீனத் தூதரகம் இன்று திங்கட்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் பகிரங்கமாகக் குற்றம் சுமத்தியுள்ளது.

அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பியோ, அமெரிக்கப் பாதுகாப்புச் செயலாளர் மார்க் எஸ்பர் ஆகியோர் ஆசியாவுக்கான சுற்றுப் பயணத்தை இன்று திங்கட்கிழமை ஆரம்பித்துள்ள நிலையில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அதுவும் இந்தியத் தலைநகர் புதுடில்லியில் அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பியோ, அமெரிக்கப் பாதுகாப்புச் செயலாளர் மார்க் எஸ்பர் ஆகிய இருவரும் இந்தோ- பசுபிக் பிரந்தியப் பாதுகாப்புத் தொடர்பாகவும் இலங்கை மீதான சீனாவின் ஆதிக்கம் குறித்தும் பேசியுள்ள நிலையில் இந்த அறிக்கை கொழும்பில் உள்ள ஊடகங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க இராஜாங்க செயலாளரின் இலங்கைக்கான விஜயம் குறித்த செய்தியாளர் மாநாட்டில், அமெரிக்காவின் தலைமைப் பிரதி உதவி இராஜாங்க செயலாளர் டீன் தொம்சன், சீன- இலங்கை உறவுகள் தொடர்பாகப் பகிரங்கமாக விமர்சித்துள்ளாரென அந்த அறிக்கையில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

சீன- இலங்கை உறவுகள் தொடர்பான விடயத்தில் அமெரிக்கா தலையிடுவதையே டீன் தொம்சனின் அந்தக் கருத்து வெளிப்படுத்துவதாகவும், கொழும்பில் உள்ள சீனத் தூதரகம் வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில் விபரிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் வெளிவிவகாரக் கொள்கையில் மாற்றங்கள் செய்யப்பட வேண்டுமென டீன் தொம்சன் கூறுகிறார். ஆனால் இலங்கையுடன் சீனா 1950ஆம் ஆண்டு ரப்பர், அரிசி ஒப்பந்தத்தில் கைச்சாதிட்டதென்றும் இலங்கையோடு இராஜதந்திர உறவுகள் ஆரம்பமாவதற்கு முன்னரே இரு நாடுகளும் பொருளாதாரச் செயற்பாடுகளில் ஈடுபட்டதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஆகவே டீன் தொம்சன் வெளியிட்டுள்ள கருத்துக்கள் இராஜந்திர நெறிமுறைகளின் அடிப்படைகளை வெளிப்படையாக மீறியுள்ளதென்றும் இலங்கை மக்களின் உண்மையான நண்பன் சீனா எனவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பியோ, அமெரிக்கப் பாதுகாப்புச் செயலாளர் மார்க் எஸ்பர் ஆகியோர் கொழும்புக்கு வருகை தந்து, சீனாவுடனான உறவைக் கைவிடுமாறு இலங்கையை மிரட்டி அடிபணிய வைக்கும் முயற்சியை சீனா வன்மையாகக் கண்டிப்பதாகவும் அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது.