தமிழர் தாயகம்

வடமாகாணத்தில் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் அவலம்

யாழ்ப்பாணத்தில் 37பேர் நிர்க்கதி
பதிப்பு: 2020 டிச. 03 20:08
புதுப்பிப்பு: டிச. 10 00:11
main photo main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
தமிழர் தாயகம் வடமாகாணத்தில் புரவி புயல் தாக்கத்தினால் பெருமளவு மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். போரினால் பாதிக்கப்பட்டு மீள் குடியேறிய மக்களே கூடுதலாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர். யாழ்ப்பாண மாவட்டத்தில் 37ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆரம்ப மதிப்பீடுகள் கூறுகின்றன. யாழ். மாவட்டத்தில் தற்போதுவரை ஒன்பதாயிரத்து 346 குடும்பங்களைச் சேர்ந்த 31 ஆயிரத்து 703 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவின் உதவிப் பணிப்பாளர் என்.சூரியராஜா கூறுகிறார். பாதிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கை மேலும் அதிகமாக இருக்கலாமெனவும் முழுமையான மதிப்பீடுகள் செய்யப்படவில்லை என்றும் அவர் கூறினார்.
 
யாழ். மாவட்டத்தில் தற்போது 32 இடைத்தங்கல் முகாம்கள் அமைக்கப்பட்டு 879 குடும்பங்களைச் சேர்ந்த மூவாயிரத்து 189 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர். கடும் காற்றினால் 48 வீடுகள் முழுமையாகவும், ஆயிரத்து 826 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

யாழ். மாவட்டத்தில் பருத்தித்துறை, சண்டிலிப்பாய் மற்றும் நல்லூர் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ளவர்களே அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் கூறுகின்றனர்.

அதேவேளை, தென்மராட்சி கொடிகாமம் நாகநாதன் வீதியில் தேங்கி நின்ற வெள்ளத்தில் வீழ்ந்து கிடந்த குடும்பஸ்தர் ஒருவரை மீட்டு, வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தவசிகுளம் கொடிகாமம் பகுதியைச் சேர்ந்த 28 வயதான மகாலிங்கம் மகேஷ் என்பவரே இவ்வாறு உயிரிழந்தவராவார். சம்பவம் தொடர்பாக கொடிகாமம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

புரவி புயல் காரணமாக வடமாகாணத்தின் பல இடங்களிலும் பெய்த கடும் மழையினால், வீதிகள், ஒழுங்கைகள் அனைத்திலும் வெள்ளம் நிறைந்து காணப்படுகிறது. இதனால் வழமையான போக்குவரத்து நடவடிக்கைகளும் தடைப்பட்டுள்ளன. மக்களின் இயல்பு வாழ்ககையும் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது.

இதேவேளை, வங்காள விரிகுடாவில் உருவாகிய புரேவி புயல் காரணமாக வவுனியா மாவட்டத்தில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மக்கள் பலர் வீடுகளை இழந்துள்ளனர்.

மேலும் நெடுங்கேணி பிரதேச வைத்தியசாலைக்குள் வெள்ளநீர் உட்புகுந்துள்ளதுடன், வைத்தியசாலையின் மதிலும் உடைந்து விழுந்துள்ளது.

வவுனியா வடக்கில் அனைத்து குளங்களும் முழுகொள்ளளவை எட்டியநிலையில் மேலதிக நீர் வெளியேறிவருவதாக மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் உதவி ஆணையாளர் தெரிவித்தார்.

நெடுங்கேணி பட்டிக்குடியிருப்பு குளம் முழு கொள்ளளவை எட்டி மேலதிக நீர் குளத்தின் அணைக்கட்டு வழியாக வெளியேறுவதாக தெரிவித்தார். குறித்த குளத்தில் உடைவு ஏற்படாமல் இருக்க இராணுவத்துடன் இணைந்து பராமரிப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்துவருவதாகவும் ஆணையாளர் மேலும் தெரிவித்தார்.

மன்னார் மாவட்டத்தில் புரவி புயலினால் இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த 3 ஆயிரத்து 843 பேர் இதுவரை வரை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் கூறுகின்றனர்.