இலங்கை ஒற்றையாட்சி அரசின் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள

தமிழ் அரசியல் கைதிகள் உருக்கமான வேண்டுகோள்

உண்ணாவிரம் இருந்து நோயைத் தேடியதைத் தவிர வேறெதுவுமே இல்லையெனவும் கவலை
பதிப்பு: 2020 டிச. 09 22:11
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: டிச. 09 23:59
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lka
#tamil
#genocide
இலங்கையில் உள்ள சிறைச்சாலைகளில் இடநெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், சிறைச்சாலைகளுக்குள் கொரோனா தொற்று பரவுமென ராஜபக்ச அரசாங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆனால் இடநெருக்கடிக்குத் தீர்வு காணும் திட்டங்கள் எதுவுமே அரசாங்கத்திடம் இருப்பதாகத் தெரியவில்லையென பிரதான எதிர்க்கட்சியான ஜே.வி.பி குற்றம் சுமத்தியுள்ள நிலையில், கொழும்பு மகசீன் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் தமது விடுதலைக்கு உதவிபுரியுமாறு இலங்கை ஒற்றையாட்சி அரசின் பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் அவசரக் கோரிக்கை விடுத்துள்ளனர். செய்தி ஊடகங்களுக்கு இன்று புதன்கிழமை இரவு அனுப்பியுள்ள மின் அஞ்சலில் இவ்வாறு கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
 
மகர சிறைச்சாலையில் சிறைக்காவலர்களினால் நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் எட்டுக் கைதிகள் கொல்லப்பட்டும் மேலும் 25பேர் படுகாயமடைந்துள்ள நிலையில், தமிழ் அரசியல் கைதிகளாகிய தங்களின் நிலை எதிர்காலத்தில் என்னவாக இருக்கும் என்ற தொனியில் அந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையின் முழுமையான விபரம் வருமாறு-

இலங்கையில் உள்ள சிறைச்சாலைகளில் ஏற்பட்டிருக்கின்ற நெருக்கடி நிலைமையினையடுத்து, ஜனாதிபதியின் ஆலோசனைக்கமைய அரசாங்கம் சில நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக அறிய முடிகிறது.

அந்த வகையில் தகுந்த பொறிமுறையை இனங்கண்டு, சிறைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள சுமார் 8000 கைதிகளை விடுவிப்பதற்கும் மரண தண்டனை மற்றும் ஆயுள்தண்டனைக் கைதிகளின் தண்டனைக் காலத்தை வரையறுப்பதற்குமான முன்னாயத்தங்களை மேற்கொண்டிருப்பதாக சிறைத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் தமிழ் அரசியல் கைதிகள் விடயம் தொடர்பாகக் கரிசனை காட்டத் தொடங்கி இருக்கின்றார்கள்.

அதற்கு சாதகமான இந்த சந்தர்ப்பத்தில் அனைத்து தரப்பினரும் இனம், மதம், கட்சி, அரசியல், பிரதேச வேறுபாடுகளை ஒருபுறம் வைத்துவிட்டு மனித நேயத்திற்கு மதிப்பளித்து கொள்கையளவில் ஒன்றுபட்டு, எமது விடுதலைக்கு வழி சமையுங்கள் என வினயமுடன் வேண்டுகிறோம்.

இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக சிறையே வாழ்க்கை என சீரழிந்து கொண்டிருக்கும் அரசியல் கைதிகளாகிய நாம் உயிரை மட்டுமே கையில் பிடித்துக்கொண்டு நிகழ் காலத்தைக் நகர்த்துகிறோம். இலங்கையில் தேர்தல்கள் வருகின்ற போதும், ஆட்சியதிகாரங்கள் மாறுகின்றபோதும் எங்களது சிறைவாழ்வுக்கு விடிவு பிறக்குமென கண்ட கனவுகள் எல்லாம் கானல் நீராகிப் போனது. விடுதலையை வலியுறுத்தி நாம் உணவு தவிர்ப்பில் ஈடுபட்டபோதெல்லாம் மறந்த வாக்குறுதிகளும், தீராத நோய்களுமே எமக்கு மிஞ்சிப் போனது.

இதுவரை தொற்றா நோய்களால் பாதிக்கப்பட்டு எம்மோடு சிறையிருந்த பத்திற்கும் மேற்பட்ட அரசியல் கைதிகள் சிறைக்குள்ளேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்கள். அது தவிர சிறை வன்முறைகளின்போது நூற்றுக்கணக்கான தமிழ் அரசியல் கைதிகள் படுகொலை செய்யப்பட்டிருக்கின்றார்கள்.

தற்போது உயிர்க்கொல்லித் தொற்று நோயான கொவிட் 19 சிறைக் கொத்தணியாக மாறி ஆயிரக்கணக்கான கைதிகளை அச்சுறுத்துவதுடன், சில உயிர்களையும் பலிகொண்டிருக்கின்றது.

எமது குடும்ப உறவுகள் உழைக்கும் கைகளை இழந்து நெருக்கடிகளைச் சந்தித்துக் கொண்டிருக்கின்றார்கள். எமது பிள்ளைகள் தந்தையரின் பாசத்திற்காக ஏங்கித் தவிக்கின்றார்கள். வயதான பெற்றோர் தமது இறுதிக்காலத்திலாவது 'என் பிள்ளை கொள்ளியிட உயிரோடு வருவானா?' என கண்ணீரோடு காத்திருக்கிறார்கள். எனவே சந்தர்ப்பச் சூழ்நிலைகளின் காரணிகளால் சிறை வைக்கப்பட்டுள்ள எமது விடுதலைக்கு வழி சமைக்க அனைவரும் முன்வாருங்கள்.

இன்று சிறைகளில் வாடுகின்ற நாம் சுகபோகமாக வாழத்தெரியாமல் சிக்குப்பட்டுப் போயிருப்பவர்கள் அல்ல. எமது சொந்த சுயநல லாபத்திற்காகச் செயற்பட்டு சிறையேகியவர்களுமல்ல என்பதைத் தயவு செய்து சற்றுப் புரிந்து கொள்ளுங்கள்.

மூன்றரை கால யுத்தம் முடிவுறுத்தப்பட்டு, 12 ஆயிரம் முன்னாள் போராளிகள் விடுவிக்கப்பட்டு தசாப்தமொன்று கடந்துள்ள நிலையிலும்கூட, 20 வருடங்களாகச் சிறையிருக்கும் எமது விடுதலை வாசல் திறக்கப்படவில்லை என்பது பெருந் துக்கமல்லவா?

எனவே சர்வமதத் தலைவர்கள், சிவில் சமூகச் செயற்பாட்டாளர்கள் மனித உரிமை ஆர்வலர்கள் சமூக நல அமைப்புக்கள் என அனைத்துத் தரப்புக்களும் அரசியல் கைதிகளான எமது விடுதலை விடயத்தில் தத்தமது மனிதாபிமானத்தை வெளிப்படுத்த வேண்டும்.

இலங்கை அரசியலமைப்பின் பிரகாரம் சிறைக்கைதிகளின் விடயத்தில் தீரமானம் எடுக்கும் அதிகாரம் ஜனாதிபதியிடமே இருக்கின்றது. அந்த வகையில் 'ஜனாதிபதியின் ஆலோசனைக்கமைய விடுதலை செய்யப்படுவோர்' பட்டியலுக்குள் தமிழ் அரசியல் கைதிகளையும் உள்வாங்குமாறு, அரசியல் அமைப்புக்களும் சிவில் அமைப்புக்களும் தனித்தனியான கருணை மனுக்களை ஜனாதிபதியின் கவனத்திற்கு முன்வைக்க வேண்டும் என நாம் எதிர்பார்க்கின்றோம்.

இதன்மூலம் எமக்கும் சமூகத்துடன் இணைந்து வாழ ஒரு சந்தர்ப்பம் கிடைப்பதுடன் எம்மைப் பிரிந்து நித்தமும் துன்பங்களை அனுபவித்துக் கொண்டிருக்கும் எமது உறவுகளின் கண்ணீருக்கும் ஒரு முடிவு கிட்டும் என எதிர்பார்க்கிறோம்.

இலங்கையில் தமிழ் அரசியல் கைதிகள் என எவருமே இல்லையென அமைச்சரவையின் இணைப் பேச்சாளர் உதய கம்பன்வில நேற்றுச் செவ்வாய்க்கிமை கூறியிருந்தார்.

இலங்கையில் அரசியல் கைதிகள் என எவரும் இல்லை என்பதே கோட்டாபய ராஜபக்ச அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ற தொனியில் அமைச்சர் செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளித்தபோதே அவ்வாறு தெரிவித்திருந்தார்.