இன அழிப்புத் தொடர்பாகத் தமிழ்த்தேசியக் கட்சிகள் கோரவுள்ள நிலையில்

இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் கோட்டாபயவுடன் மூடிய அறைக்குள் உரையாடல்

கொழும்பில் தமிழ்த் தலைவர்களையும் சந்திக்கவுள்ளார்
பதிப்பு: 2021 ஜன. 06 21:26
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: ஜன. 07 11:50
main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lka
#tamil
#genocide
கொழும்புக்கு வருகை தந்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், இலங்கை ஒற்றையாட்சி அரசின் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுடன் மூடிய அறை ஒன்றுக்குள் சுமார் ஒரு மணி நேரத்துக்கும் அதிகமாகக் கலந்துரையாடியுள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற இந்த சந்திப்பில் இருவரும் தனியாகவே பேசியதாக ஜனாதிபதி செயலகத் தகவல்கள் கூறுகின்றன. கோட்டாபய ராஜபக்சவுடன் ஜெய்சங்கர் கலந்துரையாடினாரென ஜனாதிபதி செயலகம் செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. ஆனால் என்னென்ன விடயங்கள் பேசப்பட்டது என்பது தொடர்பாக விரிவாகக் கூறப்படவில்லை. சமகால நிலமைகள் குறித்து இருவரும் பேசியதாக அந்தச் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது. நாளை வியாழக்கிழமை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை ஜெய்சங்கர் சந்திக்கவுள்ளார்.
 
எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனீவா மனித உரிமைச் சபையின் அமர்வு நடைபெறவுள்ள நிலையில், இலங்கை அரசின் இன அழிப்புத் தொடர்பான சர்வதேசக் குற்றவியல் விசாரணை நடத்த வேண்டுமென தமிழ்த் தேசியக் கட்சிகள் கோருவதற்கான ஏற்பாட்டு முயற்சியில் ஈடுபட்டுள்ளவேளையில், இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கொழும்புக்கு வந்துள்ளமை தொடர்பாகப் பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன.

இவ்வாறான நிலையில், கொழும்பில் இயங்கும் மாற்றுக் கொள்கை மையத்தின் பணி்ப்பாளர் பாக்கியசோதி சரவணமுத்துவின் ஏற்பாட்டில் இன்று புதன்கிழமை மாலை தமிழ்த்தேசியக் கட்சிகளின் தலைவர்களுடன் ஜெனீவாவைக் கையாள்வது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. இரவு விருந்துபசாரமும் வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனையை அபிவிருத்தியை இந்தியாவுக்கு வழங்குவது தொடர்பாக பேசுவதற்காகவே ஜெய்சங்கர் கொழும்புக்கு வருகை தந்துள்ளதாக சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி, ஜே.வி.பி ஆகிய கட்சிகள் குற்றம் சுமத்தியுள்ளன.

மூடிய அறைக்குள் இருந்து கோட்டாபய ராஜபக்சவும் ஜெய்சங்கரும் இன்று முற்பகல் பேசிய விடயங்கள் தொடர்பாக வெளிப்படுத்தப்பட வேண்டுமென ஜே.வி.பி உறுப்பினர் விஜித கேரத் கோரியு்ள்ளார்.

இன்று பிற்பகல் நாடாளுமன்றத்தில் இது தொடர்பாக அனுரகுமார திஸாநாயக்க எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த பிரதமர் மகிந்த ராஜபக்ச. கொழும்புத் துறைமுக கிழக்கு முனைய அபிவிருத்தியை இந்தியாவுக்கு வழங்கவில்லை என்று உறுதியாகக் கூறினார்.

அதேவேளை, அரசியலமைப்பிற்கான 13 ஆவது திருத்தத்திற்கு அமைவாக அதிகாரப்பரவலாக்கத்தை நடைமுறைப்படுத்துவதற்கான கடப்பாட்டை இலங்கை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும் என ஜெய்சங்கர் கொழும்பில் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

இலங்கைக்கான இருநாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நேற்றுச் செவ்வாய்கிழமை கொழும்புக்கு வந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரும் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தனவும் இணைந்து இன்று புதன்கிழமை இலங்கை வெளிவிவகார அமைச்சில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தினர்.

இதன்போது ஜெய்சங்கர் இவ்வாறு கூறியுள்ளார். செய்தியாளர்களிடம் அவர் மேலும் கூறியதாவது-

இந்தியாவின் மிகநெருங்கிய பங்காளரான கொழும்பிற்கான விஜயத்துடன் 2021 ஆம் ஆண்டை ஆரம்பிப்பது குறித்து மிகுந்த மகிழ்ச்சியடைகின்றேன். கொரோனா வைரஸ் பரவலால் இரு நாடுகளும் ஒரேவிதமான சவால்களுக்கு முகங்கொடுத்துள்ள நிலையிலேயே நான் இங்கு வருகை தந்திருக்கிறேன். கொவிட் - 19 பரவலின் பின்னரான ஒத்துழைப்பு நடவடிக்கைகள் தொடர்பிலும் இந்தியாவிடமிருந்து தடுப்பு மருந்தைப் பெற்றுக்கொள்வது குறித்தும் ஆராய்ந்தோம்.

பரஸ்பர நம்பிக்கை அடிப்படையில் இலங்கையுடனான நல்லுறவை மென்மேலும் வலுப்படுத்திக்கொள்வதில் இந்தியா எப்போதும் அக்கறை கொண்டிருக்கிறது. இந்திய வணிகங்கள் இலங்கையில் முதலீடு செய்வதில் ஆர்வம் காண்பித்து வருகின்றன.

மேலும் இலங்கையின் நீண்டகால நல்லிணக்க செயற்பாடுகளையும் இனங்களுக்கு இடையிலான அமைதியை நிலைநாட்டுவதற்கான அனைத்து மக்களையும் உள்ளடக்கிய அரசியல் கொள்கையையும் இந்தியா ஊக்குவிப்பதுடன் அவற்றை அடைந்துகொள்வதற்கான ஒத்துழைப்புக்களையும் இந்தியா வழங்கும்.

ஒருமித்த நாட்டிற்குள் தமிழ்மக்களின் அபிலாசைகளாக நீதி, அமைதி, சமத்துவம், கௌரவம் ஆகியவை உறுதி செய்யப்பட்ட வேண்டும். அரசியலமைப்பிற்கான 13 ஆவது திருத்தம் உள்ளடங்கலாக அர்த்தமுள்ள அதிகாரப்பரவலாக்கத்தை வழங்குவதற்கான அரசாங்கத்தின் கடப்பாடுகளும் இதற்குள் உள்ளடங்குகின்றன என்று அந்தச் செய்தியாளர சந்திப்பில் ஜெய்சங்கர் இவ்வாறு கூறினார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களை நாளை வியாழக்கிழமை சந்திக்கவுள்ள ஜெய்சங்கர், கஜேந்திரகுமார் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி ஆகிய கட்சிகளை சந்திப்பாரா இல்லையா என்பது குறித்து எதுவுமே கூறப்படவில்லை.