இலங்கை ஒற்றையாட்சி அரசின் தொல்பொருள் ஆராய்ச்சித் திணைக்கள அபகரிப்பு-

குருந்தூர் மலையில் இராணுவத்தின் ஒத்துழைப்புடன் புத்தர்சிலை வைத்தார் அமைச்சர் விதுர

தமிழ் மக்கள் வழிபட்ட ஆதிசிவன் அய்யனார் ஆலயமும் உடைக்கப்பட்டு பௌத்த அகழ்வு ஆராட்சிப் பணிகளும் ஆரம்பம்
பதிப்பு: 2021 ஜன. 20 17:15
புலம்: முல்லைத்தீவு, ஈழம்
புதுப்பிப்பு: ஜன. 20 23:43
main photo main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lka
#tamil
#genocide
தமிழர் தாயகப் பகுதிகளில் இலங்கை ஒற்றையாட்சி அரசின் சிங்கள மயமாக்கல் தொடர்ச்சியாக நடைபெற்று வருவதாக தமிழ்த்தேசியக் கட்சிகள் மற்றும் பொது அமைப்புகள் குற்றம் சுமத்தி வரும் நிலையில், தமிழர் தாயகமான வடமாகாணம் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள குருந்தூர் மலைப் பகுதியில் புத்தர் சிலை ஒன்று வைக்கப்பட்டுள்ளது. இலங்கை இராணுவத்தின் பாதுகாப்புடன் கோட்டபாய ராஜபக்ச அரசாங்கத்தின் அமைச்சர்கள் உயர் அதிகாரிகள் கொழும்பில் இருந்து சென்று புத்தர் சிலையை அமைத்துள்ளதாகவும் பௌத்த அகழ்வு ஆராய்ச்சிப் பணிகள் அங்கு ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பிரதேச மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர். அமைச்சர்கள் வருவதற்காகக் குறித்த பகுதியில் உள்ள வீதிகள் அவசர அவசரமாக சீரமைக்கப்பட்டதென்றும் மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
 
தமிழ் மக்களுக்குச் சொந்தமான புராதன ஆதிசிவன் அய்யனார் ஆலயம் அமைந்துள்ள வயல் நிலங்கள் காணிகள், உள்ளடங்கிய குமுளமுனை தண்ணிமுறிப்பு குருந்தூர் மலை மற்றும் மணலாறு படலைக்கல்லுப் பகுதி ஆகிய இடங்களில் இரண்டு புராதன பௌத்த விகாரைகள் இருந்தமைக்கான தொல்லியல் சிதைவுகள் காணப்படுவதாகத் தெரிவித்தே, இராணுவத்தின் ஒத்துழைப்புடன் இலங்கை ஒற்றையாட்சி அரசின் தொல்லியல் திணைக்களம் அகழ்வு ஆராய்ச்சி பணிகளை அங்கு ஆரம்பித்துள்ளது.

முற்று முழுதாக பௌத்த சிங்களவர்களை உள்ளடக்கிய இலங்கைத் தொல்லியல் திணைக்களம், குருந்தூர் மலையில் மிகப்பெரிய விகாரை ஒன்றை எதிர்காலத்தில் அமைக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

இதற்கான அகழ்வு ஆராய்ச்சிப் பணிகளை இராணுவத்தினர் புடைசூழ இலங்கைத் தேசிய மரபுரிமைகள், அருங்கலைகள் மற்றும் கிராமிய சிற்பக்கலைகள் மேம்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க ,மற்றும் தொல்லியல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் அனுர மானதுங்க மற்றும் தொல்லியல் அமைச்சின் செயலாளர் முல்லைத்தீவுப் படைகளின் தளபதி ஜெகத் ரத்நாயக்க ஆகியோர் பௌத்த ஆகம முறைப்படி பிரித் ஓதி ஆரம்பித்து வைத்தனர்.

இதன்போது புத்தர்சிலை ஒன்று குருந்தூர்மலை பகுதிக்கு கொண்டுவரப்பட்டு வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டு அகழ்வாராய்ச்சி நடவடிக்கைகள் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன.

மணலாறு படலைகல்லு என்னும் பகுதியிலும் கல்யாணிபுர என்னும் மற்றும் ஒரு விகாரை சிதைவுகள் காணப்படுவதாக தெரிவித்து சென்ற 18 ஆம் திகதி அங்கும் தொல்லியல் அகழ்வாராய்ச்சி பணிகள் முன்னெடுக்கபட்டுள்ளன.

இலங்கை இராணுவத்தின் 59 ஆவது படைப்பிரிவின் 591 ஆவது பிரிகேடினால் ஏற்பாட்டுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. இராணுவத்தினரின் கொடிகள் குருந்தூர் மலை சூழ நாட்டபட்டு நூற்றுக்கணக்கான இராணுவம் மற்றும் பொலிஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.

குருந்தூர் மலையிலிருந்து அருகிலுள்ள குமுளமுனை கிராமம் வரைக்கும் இலங்கைப் படையினர் ஆயுதங்களுடன் குவிக்கப்பட்டு இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

இதன் போது கருத்து தெரிவித்த இராஜாங்க அமைச்சர்,

இந்தப் பகுதியில் குருந்தாசேவ புராதன விகாரை ஒன்று இருந்ததாக 1932 இல் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது என்றார். இது ஒரு தொல்லியல் பிரதேசம் இங்கே இருக்கும் தொல்லியலை பாதுகாக்க வேண்டியது தொல்லியல் திணைக்களத்தின் கடமை என்றும் கூறினார்.

குருந்தூர் மலைப் பகுதியில் காலகாலமாகத் தமிழ் மக்கள் வழிபட்டு வந்த புராதன ஆதிசிவன் அய்யனார் ஆலயம் ஒன்று இருந்தது. அங்கு குமுளமுனை, தண்ணிமுறிப்பு கிராம மக்கள் சென்று பொங்கல் பொங்கி வழிபாடுகளில் ஈடுபட்டும் வந்திருந்தனர்.

ஆனால் சென்ற 17 ஆம் திகதி குருந்தூர் மலைப் பகுதிக்குள் சென்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் அவ்வாறான ஆலயம் அங்கு இல்லாது உடைத்து அழிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் குருந்தூர் மலையில் இருந்த சூலம் ஒன்று இடம் தெரியாது உடைத்து எறியப்பட்டுள்ளது அங்கிருந்த ஆலய சின்னங்கள் அனைத்தும் காணாமல் ஆக்கப்பட்டுள்ளது.

சென்ற 17 ஆம் திகதி கிராம மக்களின் முறைப்பாட்டின் பேரில் பாராளுமன்ற உறுப்பினர்கள் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் , செல்வராசா கஜேந்திரன் , செல்வம் அடைக்கலநாதன், வினோ நோகராதலிங்கம் ஆகியோர் இந்த பகுதிக்கு பார்வையிடுவதற்க்காக சென்றிருந்த நிலையில், இராணுவத்தினரும் தொல்லியல் திணைக்கள சிங்கள அதிகாரிகளும் தடைகளை ஏற்படுத்திய நிலையில் மிக நீண்ட வாய்தர்க்கத்தை அடுத்து பாராளுமன்ற உறுப்பினர்கள் மாத்திரம் உட்செல்ல அனுமதிக்க பட்டிருந்தனர்.

அந்த இடத்துக்குச் செய்தி சேகரிக்கச் சென்ற பிரதேச ஊடகவியலாளர்களுக்கு அனுமதியும் மறுக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் சென்ற 18 ஆம் திகதி அமைச்சர் வருகை தந்திருந்த நிலையில் கொழும்பிலிருந்து வருகை தந்திருந்த ஊடகவியலாளர்களுக்கு அனுமதிகள் வழங்கப்பட்டிருந்தது.

ஆனால் இந்த விடயத்தைச் சுட்டிக்காட்டி பிரதேச ஊடகவியலாளர்கள் தொல்லியல் திணைக்களத்திடம் கேள்வி எழுப்பியதால், பிராந்திய ஊடகவியலாளர்களும் இறுதியில் அனுமதிக்கபட்டனர்.

இருந்த போதிலும் அகழ்வாராய்ச்சிப் பணி இடம்பெறும் குருந்தூர் மலையின் உட் பகுதியில் காணப்பட்ட படையினர் பிரதேச ஊடகவியலாளர்களை 'நீங்கள் தமிழா எனக் கேட்டு வெளியே செல்லுமாறு பணித்ததோடு ஊடகவியலாளர்களை புகைப்படங்களையும் எடுத்து அச்சுறுத்தினர்.

அகழ்வுப் பணிகளுக்காக குருந்தூர் மலையில் நின்ற பல நூற்றுக்கணக்கான காட்டு மரங்கள் அறுத்து வீழ்த்தப்பட்டுள்ளன. அமைச்சரின் வருகைக்காக பல மாதங்களாக குன்றும் குழியுமாகக் காணப்பட்ட தண்ணிமுறிப்பு குளத்துக்கு செல்லும் வீதி, வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் மாகாண பொறியியலாளரின் உத்தரவின் பேரில் இரண்டு நாட்களில் அவசர அவசரமாக செப்பனிடப்பட்டிருந்தது.

பல வருடங்களாக இந்த வீதியை செப்பனிட்டுத் தருமாறு தண்ணிமுறிப்பு குளத்தின் கீழ் விவசாயம் செய்துவரும் விவசாயிகள் அரசாங்கத்திடம் கோரிக்கைவிடுத்தும், செப்பனிடப்படாத வீதி அமைச்சர் வருகைதந்து விகாரையின் தொல்லியல் பணிகளை ஆரம்பித்து வைப்பதற்காக அவசர அவசரமாக செப்பனிடப்பட்டதாக கிராம மக்கள் குற்றம் சாட்டினர் .

குருந்தூர் மலை இடம் தொடர்பில் ஒட்டுசுட்டான் பொலிஸாரால் தாக்கல் செய்திருந்த வழக்கில் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றால் 2018 இல் ஆக்கபட்ட கட்டளை ஒன்றில், அங்கே உள்ள தமிழ் மக்களுக்குச் சொந்தமான ஆலயத்தில் மக்கள் வழிபடலாம் என்றும் எந்தவிதமான கட்டுமானங்களையும் இரு சாராரும் செய்ய முடியாது என்றும், தொல்லியல் திணைக்களம் மாத்திரம் ஆய்வுகளை செய்யலாமெனவும், வேறு தரப்பினர் ஆய்வுகளை செய்ய முடியாது ஆனால், தொல்லியல் ஆய்வுகளை செய்வதாக இருந்தால் யாழ் பல்கலைகழகத் தொல்லியல் துறையின் பங்களிப்போடு மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாறானதொரு நிலையில் இராணுவத்தினர் நூற்றுக்கணக்காக குவிக்கப்பட்டு இராணுவமே தொல்லியல் ஆய்வுகளை செய்வதுபோல தமது கொடிகளை நாட்டி தொல்லியல் ஆய்வு என்ற பேரில் பௌத்த விகாரையை நிர்மாணித்துத் தமிழ் மக்களுக்கு சொந்தமான பிரதேசத்தை சிங்கள மயபடுத்த தீவிர முயற்சி மேற்கொள்ளப்படுகின்றதா என பிரதேச தமிழ் மக்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.