இலங்கை ஒற்றையாட்சி அரசின் அடக்கு முறைகளுக்கு எதிராக நடைபெறவுள்ள

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை போராட்டத்திற்கு முஸ்லிம் மக்கள் ஆதரவு

கடும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதாகக் குறிப்பிட்டு ரிஷாட் அறிக்கை
பதிப்பு: 2021 பெப். 02 22:57
புலம்: மட்டக்களப்பு, ஈழம்
புதுப்பிப்பு: பெப். 03 01:47
main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lka
#tamil
#genocide
ஈழத்தமிழ் மக்களுக்கு எதிரான இலங்கை அரசாங்கத்தின் தொடர்ச்சியான அடக்குமுறை மற்றும் சிங்களக் குடியேற்றங்கள், புத்தர் சிலை வைத்தல் போன்ற ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்கும் எதிராக பொத்துவிலிலிருந்து பொலிகண்டி வரை ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவு வழங்குமாறு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் கோரிக்கை விடுத்துள்ளார். தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்துள்ள இந்தப் பாரிய ஆர்ப்பாட்டம் மற்றும் நடைபவனிப் போராட்டத்திற்குப் பூரண ஒத்துழைப்பை முஸ்லிம் மக்கள் வழங்க வேண்டுமென அவர் கேட்டுள்ளார். நாளை புதன்கிழமை ஆரம்பித்து எதிர்வரும் ஆறாம் திகதி சனிக்கிழமை வரை போராட்டம் நடைபெறவுள்ளது.
 
இந்தப் போராட்டத்தில் கலந்துகொள்ளக்கூடாதென கிழக்கு மாகாணத்தில் உள்ள பொது அமைப்புகள், மற்றும் ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட பலருக்கு பொலிஸார் தடை உத்தரவு பிறப்பித்துள்ளனர். மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் உள்ள பொது அமைப்புகளின் பிரதிநிதிகளுக்கே நீதிமன்றத்தின் மூலம் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட உறுப்பினர் சாணக்கியனுக்கு நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை பொலிஸார் தடையுத்தரவு பிறப்பித்திருந்தனர். இன்னும் பலருக்கு நீதிமன்றத் தடையுத்தரவு பிறப்பிக்கப்படலாமென எதிர்பார்க்கப்படுகின்றது.

இவ்வாறானதொரு நிலையிலேயே ரிஷாட் பதியுதீன் முஸ்லிம் மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இது தொடர்பாக ரிஷாட் பதியுதீன் இன்று செவ்வாய்க்கிழமை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தமிழ், முஸ்லிம் மக்களுக்கு எதிராக இலங்கை அரசாங்கம் குறிப்பாக கோட்டாபய ராஜபக்ச அரசாங்கம் தொடர்ச்சியான அடக்குமுறைகளை மேற்கொண்டு வருகின்றது. நில ஆக்கிரமிப்பு, திட்டமிட்ட குடியேற்றம், தொல்பொருள் என்ற போர்வையில் தமிழ், முஸ்லிம் சமூகங்களின் பூர்வீக வாழிடங்களை ஏப்பமிடல், பேரினவாத அழுத்தங்களுக்கு அடிபணியும் அரசின் போக்குகள் மற்றும் ஜனாஸா எரிப்பு என்பவற்றை முஸ்லிம் மக்களும் கண்டிக்க வேண்டும்.

இந்த அரசாங்கத்தினால் முஸ்லிம் சமூகமும் இன்று பல அச்சுறுத்தல்களை எதிர்கொள்கின்றது. ஆகவே தமிழ்ச் சகோதரர்களினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்தப் போராட்டத்திற்கு முஸ்லிம் சமூகமும் தமது ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என ரிஷாட் பதியுதீன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.