இலங்கை ஒற்றையாட்சி அரசின் அடக்கு முறைகளுக்கு எதிராக

பொலிகண்டி நோக்கி பொத்துவில் பிரதேசத்தில் நடைபவனி ஆரம்பம்

முஸ்லிம் மக்கள் உட்பட பெருந்திரளான மக்கள் கொட்டும் மழையிலும் பங்கேற்பு-
பதிப்பு: 2021 பெப். 03 22:58
புலம்: அம்பாறை, ஈழம்
புதுப்பிப்பு: பெப். 04 21:41
main photo main photo main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lka
#tamil
#genocide
ஈழத் தமிழர் தாயகத்தின் பொத்துவில் பிரதேசத்தில் இருந்து பொலிகண்டி வரையான தொடர் போராட்டம் இன்று புதன்கிழமை ஆரம்பித்துள்ளது. கிழக்கு மாகாணம் அம்பாறை பொத்துவில் பிரதேசத்தில் ஆரம்பித்த நடைபவனிப் போராட்டம், இன்று திருக்கோவில் பிரதேசத்தில் நிறைவடைந்துள்ளது. நாளை வியாழக்கிழமை அங்கிருந்து மீண்டும் ஆரம்பித்து வவுனியா மன்னார் வழியாக யாழ்ப்பாணம் பொலி கண்டிப் பிரதேசத்தில் நிறைவடையவுள்ளது. தமிழ்த்தேசியக் கட்சிகள், பொது அமைப்புகள், சமயத் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் இந்த நடைபவனிப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
 
கொட்டும் மழைக்கு மத்தியிலும் இலங்கை இராணுவத்தினர் பொலிஸார் ஆகியோரின் அடக்கு முறைகள் அச்சுறுத்தல்கள், நீதிமன்றத் தடையுத்தரவுகளுக்கு மத்தியிலும் இந்த நடைபவனிப் போராட்டம் இடம்பெற்றது.

சிவில் அமைப்பின் ஏற்பாட்டில் இந்த தொடர் போராட்டம் இடம்பெறுவதோடு இந்தப் போராட்டத்திற்கு சகல தமிழ்த் தேசியக் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புக்களும் முழுமையான ஆதரவினை வழங்கியுள்ளனர்.

தமிழ், முஸ்லிம் மக்களின் நில அபகரிப்பு, அரசியல் கைதிகளை விடுதலை செய்தல், காணாமல் ஆக்கப்பட்டோர் விடயம், முஸ்லிம்களின் உடல்கள் தகனம் செய்யப்படுவது, மலையக மக்களின் ஆயிரம் ரூபாய் சம்பளம் உள்ளிட்ட பல்வேறு காரணிகளை முன்னிறுத்தியே இந்த நடைபவனிப் போராட்டம் ஆரம்பமாகியுள்ளது.

இந்த போராட்டத்தில் முஸ்லிம் மக்களும் கலந்துகொண்டனர். தமிழ்ச் சகோதரர்களின் இந்த அறவழிப் போராட்டத்திற்கு முஸ்லிம் மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென ரிஷாட் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அறிக்கை வெளியிட்டிருந்தது.

இதேவேளை பொத்துவில் பிரதேசம் முழுவதிலும் இராணுவத்தினர் குவிக்கப்பட்டு இராணுவ வலயமாக பொத்துவில் நகர் மாற்றப்பட்டுள்ளது. பொத்துவிலிற்கு செல்லும் வீதிகளிலும் இராணுவத்தினர் குவிக்கப்பட்டு சோதனை நடவடிக்கைகளும் விசாரணைகளும் இடம்பெற்றன.

கிழக்கு மாகாணத்தின் வேறு சில பகுதிகளில் திடீர் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன, சோதனைச்சாவடியைக் கடப்பவர்கள் வழிமறிக்கப்பட்டு நீதிமன்றத்தினால் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டவர்கள் தொடர்பாக தீவிர விசாரணைகள் இடம் பெறுகின்றன.

ஆனால் இலங்கை ஒற்றையாட்சி அரசின் அடக்கு முறைக்குப் பயப்படமாட்டோமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட உறுப்பினர் சாணக்கியன் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.

கொவிட் 19 நோய்ப் பரவல் தடுப்புச் சட்டங்களைக் காரணம் கூறி, பொலிஸார் போராட்டத்தைத் தடுக்க முற்பட்டதாகவும் சுகாதார விதிமுறைகளுக்கு ஏற்பவே போராட்டம் இடம்பெறுவதாகவும் சாணக்கியன் கூறினார்.