பௌத்த தீவிரவாதக் கட்சியான தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர்

விமல் வீரவன்ச மகிந்த ராஜபக்சவை தலைமைப் பதவியில் இருந்து மாற்ற வேண்டுமென்கிறார்

அரசாங்கத்துக்குள் முரண்பாடு அதிகரிப்பு
பதிப்பு: 2021 பெப். 10 19:03
புலம்: யாழ்ப்பாணம், ஈழம்
புதுப்பிப்பு: பெப். 12 09:36
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lk
#government
சிறிலங்கா பொதுஜனப் பெரமுன அரசாங்கத்துக்குள் முரண்பாடுகள் எதுவும் இல்லையென அமைச்சர் டொன்ஸ்ரன் பெர்ணான்டோ தெரிவித்தார். சிறிலங்கா பொது ஜனப் பெரமுனக் கட்சியில் அங்கம் வகிக்கும் விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணியோடு கருத்து வேறுபாடுகள் இல்லை எனவும் விமல் வீரவன்ச கூறிய தனிப்பட்ட கருத்துக்கள் அரசாங்கத்துக்குள் பிரச்சனைகளை உருவாக்கவில்லையெனவும் அமைச்சர் டொன்ஸ்ரன் கூறினார்.
 
சிறிலங்கா பொதுஜனப் பெரமுனக் கட்சியின் தலைமைப் பொறுப்பை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் வழங்க வேண்டுமென விமல் வீரவன்ச கூறியமை தொடர்பாக சிறிலங்கா பொதுஜன பெரமுனக் கட்சியின் மூத்த உறுப்பினர்கள் பலரும் விசனம் வெளியிட்டிருந்தனர்.

விமல் வீரவன்ச மன்னிப்புக் கோர வேண்டுமெனவும் சாகர காரியவசம் கோரிக்கை விடுத்திருந்தார். ஆனால் அவ்வாறு மன்னிப்புக் கோர வேண்டிய தேவையில்லையென விமல் வீரவன்ச கூறியிருந்தார். 2015 ஆம் ஆண்டு மகிந்த ராஜபக்சவை மூன்றாவது முறையாகவும் ஜனாதிபதியாக்கப் பாடுபட்டமை தவறு என மக்கள் கூறினால் தான் மன்னிப்புக் கோருவதாகவும் விமல் வீரவன்ச கூறியிருந்தார்.

இதனால் அரசாங்கத்துக்குள் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளதாக சிங்கள இணையத்தளச் செய்திகளில் வெளியானதோடு சிங்கள சமூக வலைத் தளங்களும் அவ்வாறு பதிவிட்டிருந்தன.

இது தொடர்பாக கொழும்பில் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட அமைச்சர் ஜொன்ஸ்ரன் பெர்ணாண்டோ, ராஜபக்ச குடும்பத்தோடு விமல் வீரவன்சவுக்குப் பிரச்சனையில்லையெனக் கூறினார்.

ஆனால் விமல் வீரவன்சவுக்கும் மகிந்த ராஜபக்சவுக்கும் இடையே முரண்பாடுகள் அதிகரித்துள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்துகின்றன. கொழும்புத்துறைமுகத்தின் கிழக்கு முனையை இந்தியாவிடம் கையளிப்பது தொடர்பாகவும் கோட்டாபய ராஜபக்சவுக்கும் மகிந்த ராஜபக்சவுக்கும் இடையே முரண்பாடுகள் இருப்பதாகவும் எதிர்க்கட்சிகள் தெரிவிக்கின்றன.

அதேவேளை ராஜபக்ச அரசாங்கத்துக்குள் முரண்பாடுகள் இருப்பதாக அமைச்சர் டளஸ் அழகபெருமா சமீபத்தில் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.