வடமாகாண

முஸ்லிம் மாணவர்களுக்காகப் புத்தளத்தில் அமைக்கப்பட்ட பாடசாலைகள் வடமேல் மாகாணத்திற்கு மாற்றம்

பெரும் அநீதியெனப் பெற்றோர் கவலை- இனவாதச் செயல் எனவும் கண்டனம்
பதிப்பு: 2021 பெப். 17 10:11
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: பெப். 17 11:30
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lka
#gotabayarajapaksa
தமிழர் தாயகமான வட மாகாணத்தில் வாழும் தமிழ்பேசும் முஸ்லிம் மாணவர்களுக்காகப் புத்தளத்தில் ஆரம்பிக்கப்பட்டு வடக்கு மாகாண கல்வித் திணைக்களத்தினால் நிர்வாகிக்கப்பட்ட ஆறு பாடசாலைகளும் அதன் ஆளனியினரும் வட மேல் மாகாண கல்வித் திணைக்களத்திற்கு முற்றாக் கையளிக்கப்பட்டுள்ளதாக வட மாகாண கல்வித் திணைக்களத்தின் உயர் அதிகாரியொருவர் கூர்மைச் செய்தித் தளத்திற்குத் தெரிவித்தார். மேற்படி பாடசாலைகளைப் புத்தளத்தில் புதிதாக அமைத்து அதனை சுமார் 15 வருடங்களுக்கு மேலாகப் பராமரித்ததிற்கு வட மாகாண கல்வி திணைக்களத்தினால் பல கோடி ரூபா பணம் செலவிடப்பட்டதாக அந்த உயர் அதிகாரி கூர்மைச் செய்தித் தளத்திற்குச் சுட்டிக்காட்டினார்.
 
தனது பெயரை வெளியிட வேண்டாம் எனக் கூறி இத்தகவல்களை வெளியிட்ட இ்ந்த அதிகாரி இதுபற்றி மேலும் தெரிவித்ததாவது

கடந்த 1990 ஆம் ஆண்டு வட மாகாணத்தில் ஏற்பட்ட யுத்த சூழ்நிலை காரணமாக மன்னார், யாழ்ப்பாணம், முல்லைத்தீவு ஆகிய வட மாகாண மாவட்டங்களைச் சேர்ந்த முஸ்லிம் குடும்பங்கள் புத்தளம் மாவட்டத்திற்கு இடம்பெயர்ந்து அம் மாவட்டத்தின் பல பகுதிகளிலும் வசித்து வந்தனர்.

இந்த நிலையில் குறித்த முஸ்லிம் குடும்பங்களைச் சேர்ந்த பெரும் எண்ணிக்கையான மாணவர்கள் புத்தளம் மாவட்டத்தின் பல பகுதிகளிலும் உள்ள பாடசாலைகளில் தமது கற்றல் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

அரசியல் லாபம் கருதி புத்தளம் பாடசாலைகளில் கல்வி கற்கும் வட மாகாண முஸ்லிம் மாணவர்களுக்கென பிரத்தியேகப் பாடசாலைகளை அமைப்பதற்குச் சில முஸ்லிம் அரசியல்வாதிகள் திட்டமிட்டனர்.

இதையடுத்து அன்றைய மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தில் அமைச்சராக இருந்த றிஸாட் பதியூதீன் தனது அரசியல் செல்வாக்கைப் பிரயோகித்து அப்போதைய வட மாகாண ஆளுநரின் உதவியுடன் இடம்பெயர்ந்த வடபுல முஸ்லிம் மாணவர்களுக்கென புதிய பாடசாலைகளை அமைப்பதற்கு முயற்சிகளை மேற்கொண்டிருந்தார்.

இதற்கமைய புத்தளத்தின் பாலாவி, கரம்பை, தம்பபண்ணி, தில்லையடி, கண்டக்குடா, கல்பிட்டி ஆகிய இடம்பெயர்ந்த முஸ்லிம் மக்கள் அதிகமாக வசிக்கும் பகுதிகளில் பிரத்தியேகமாக ஆறு புதிய பாடசாலைகள் இடம்பெயர்ந்த மாணவர்களுக்காக அமைக்கப்பட்டது. மேலும் வட மாகாணக் கல்வித் திணைக்களத்தின் கட்டுப்பாட்டில் உள்ள மன்னார் வலய கல்வி பணிமனைக்குரிய ஆசிரியர், அதிபர் ஆளனியினர் மற்றும் கல்விச்சாராப் பணியாட்கள் தொகுதியினரும் குறித்த புதிய பாடசாலைகளில் கடமையில் ஈடுபடுத்தப்பட்டனர்.

மேலும் மன்னார் வலயக் கல்விப் பணிப்பாளரின் நேரடிக் கட்டுப்பாட்டிற்குள் மேற்படி ஆறு பாடசாலைகளும் இயக்கப்பட்டதுடன் குறித்த பாடசாலைகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களின் மாதாந்த வேதனம் உட்பட ஏனைய சேமநலன்கள் தொடர்பான அனைத்துப் பணிகளும் மன்னார் வலயக் கல்விப் பணிமனை ஊடாகவே மேற்கொள்ளப்பட்டது.

அத்துடன் வட மாகாணக் கல்வித் திணைக்களத்தின் வருடாந்த நிதி ஒதுக்கீட்டில் பல மில்லியன் ரூபா பெறுமதியில் புத்தளம் மாவட்டத்தில் இயங்கிய குறித்த ஆறு பாடசாலைகளுக்கும் நிரந்தரமான புதிய கட்டிடங்கள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளும் கட்டம் கட்டமாகக் உருவாக்கிக் கொடுக்கப்பட்டது.

மகிந்தவின் ஆட்சிக் காலத்தில் வன்னி மாவட்டத்தைப் பிரதிநிதிப்படுத்தும் சில முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களின் பன்முகப்படுத்தப்பட்ட பாதீட்டு நிதியிலும் பல நிலையான அபிவிருத்தி வேலைகள், குறித்த ஆறு பாடசாலைகளிலும் மேற்கொள்ளப்பட்டது.

மன்னார், மடு கல்வி வலையங்களில் கடுமையான ஆசிரியர் வெற்றிடங்கள் மற்றும் வகுப்பறைக் கட்டிடங்கள் உட்பட பல குறைபாடுகள் நிலவிய சூழ்நிலையிலும் அதனை நிவர்த்தி செய்யாமல் தென் இலங்கை மாவட்டமான புத்தளத்தில் உள்ள குறித்த ஆறு பாடசாலைகளுக்கும் அரசியல் காரணங்களுக்காக வட மாகாண சபையினால் பெருமளவான நிதி செலவிடப்பட்டது.

மேலும் 2009 இறுதி யுத்தத்தின் பின்னர் புத்தளத்தில் வசித்த முஸ்லிம் குடும்பங்கள் மன்னார் மாவட்டத்தில் உள்ள தமது பூர்விக பகுதிகளில் மீள்குடியேறியதுடன் தமது பிள்ளைகளை மன்னார் மாவட்டத்தில் உள்ள பாடசாலைகளிலும் இணைத்துக் கொண்டனர்.

இந்த நிலையில் இடம்பெயர்ந்த மாணவர்களுக்காக புத்தளம் மாவட்டத்தில் இயக்கப்பட்ட பாடசாலைகளின் பெளதீக வளங்களை மட்டும் புத்தளம் கல்வி திணைக்களத்திற்கு கையளித்துவிட்டு அங்கு பணியாற்றிய ஊழியர்கள் அனைவரையும் மீண்டும் மன்னார் பாடசாலைகளுக்கு இடமாற்றம் செய்வதற்கு வட மாகாண கல்வித் திணைக்களத்தினால் பல தடவைகள் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது.

எனினும் தனது அரசியல் நலனுக்காக றிஸாட் பதியூதின், குறித்த முயற்சிகளுக்கும் தொடர்ச்சியாக தடை ஏற்படுத்தியதாகத் பெயர் குறிப்பிட விரும்பாத அவ்வதிகாரி கூர்மைக்கு மேலும் தெரிவித்தார். மேலும் தற்பொழுது மேற்படி ஆறு பாடசாலைகளும் அதில் பணியாற்றிய மன்னார் கல்வித் திணைக்களத்தின் ஆளனியினரும் வட மேல் மாகாணக் கல்வித் திணைக்களத்திற்கு நிரந்தரமாக கையளிக்கப்பட்டுள்ளதாக அந்த அதிகாரி மேலும் தெரிவித்துள்ளார்.

மேலும் யுத்தத்தினால் கடும் பாதிப்படைந்த மன்னார் மாவட்டத்தில் இயங்கும் மடு மற்றும் மன்னார் கல்வி வலயங்களில் நூற்றுக்கணக்கான ஆசிரியர் வெற்றிடங்கள் நிலவுவதுடன் பல பாடசாலைகள் உரிய கட்டிட வசதிகள் இன்றி பல குறைபாடுகளுடன் இயங்கி வருகிறது.

இச் சூழ்நிலையில் புத்தளம் மாவட்டத்தில் உள்ள குறித்த ஆறு பாடசாலைகளும் அங்கு பணியாற்றிய 140 ற்கும் மேற்பட்ட ஆசிரியர்களும் முற்று முழுதாக வடமேல் மாகாண கல்வி திணைக்களத்திற்கு தாரை வார்க்கப்பட்டதினால் வட மாகாணத்திற்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதுடன் இந்த நடவடிக்கைகள் அனைத்திற்கும் பின்னனியில் நின்ற குறித்த அரசியல்வாதி தமிழ் பேசும் மக்கள் வாழும் வட மாகாண கல்வி சமூகத்திற்கு பெரும் துரோகம் இழைத்துள்ளதாகவும் அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.

அதேவேளை இச் செயற்பாடு இனவாதச் செயல் என்று பெற்றோரும் முஸ்லிம் கல்வி அதிகாரிகள் பலரும் குற்றம் சுமத்தியுள்ளனர்.