வடமாகாணம் மன்னார் நானாட்டான் பிரதேசத்தில்

ஆக்கிரமிக்கப்பட்டுள்ள கட்டுக்கரைக் குளத்தை மீட்குமாறு கோரிக்கை

35 ஆயிரம் கால்நடைகள் பாதிப்பு
பதிப்பு: 2021 பெப். 18 16:19
புலம்: மன்னார், ஈழம்
புதுப்பிப்பு: பெப். 19 02:14
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lk
#tamil
தமிழர் தாயகமான வடமாகாணம் மன்னார் மாவட்டம் நானாட்டான் பிரதேச செயலக பிரிவில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள கட்டுக்கரைக்குளம் மேய்ச்சல் நிலத்தை மீட்பதற்கு துரித நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு நானாட்டான் பிரதேச சபையின் தலைவர் திருச்செல்வம் பரஞ்சோதி கோரிக்கை விடுத்துள்ளார். முருங்கன் கட்டுக்கரைக்குளத்தின் உட்பகுதியில் உள்ள புல் அறுத்தான் கண்டல், கருக்காக்குளம், கட்டைக்காடு ஆகிய நானாட்டான் பகுதி மக்களின் கால்நடை மேய்ச்சல் நிலங்களே இவ்விதம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நிலையில் அதனை மீட்டுத்தருமாறு அவர் தெரிவித்துள்ளார்.
 
நானாட்டான் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் சென்ற செவ்வாய்க்கிழமை நானாட்டான் பிரதேச செயலாளர் மாணிக்கவாசகர் சிறீஸ்கந்தகுமார் தலைமையில் நடைபெற்றவேளையே பிரதேச சபைத் தலைவர் மேற்படி கோரிக்கையை விடுத்துள்ளார்.

மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் மற்றும் திணைக்களத் தலைவர்கள் அரச உயர் அதிகாரிகள் கலந்து கொண்ட மேற்படி பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் பொழுதே நானாட்டான் பிரதேச சபையின் தவிசாளர் திருச்செல்வம் பரஞ்சோதி குறித்த வேண்டுகோளை முன்வைத்துள்ளார்.

அவர் தனது கோரிக்கையில் மேலும் தெரிவித்ததாவது

நானாட்டான் பிரதேச செயலகப் பிரிவில் வாழும் தமிழ் மக்கள் விவசாயத்தையும், கால்நடை வளர்ப்பையுமே தமது அடிப்படை வாழ்வாதாரமாகக் கொண்டுள்ளனர். இவ்வகையில் நானாட்டான் பகுதியில் தமிழ் மக்களுக்கு சொந்தமாக சுமார் 35 ஆயிரம் கால்நடைகள் உள்ளன.

வருடாந்தம் நவம்பர், டிசம்பர் மாதங்களில் ஆரம்பிக்கப்படும் பெரும் போக நெற்செய்கை பெப்ரவரி, மார்ச் மாதங்களில் அறுவடையுடன் நிறைவுறுகிறது. இந்த மூன்று நான்கு மாதகாலப்பகுதிகளில் நானாட்டான் பகுதி விவசாயிகள் தமது கால்நடைகளுக்கான உரிய மேய்ச்சல் தரை இல்லாததினால் மிகுந்த கஷ்டத்தினை எதிர்நோக்குகின்றனர்.

கடந்த 1972 ம் ஆண்டு காலப் பகுதியில் நானாட்டான் பகுதி மக்களின் கால்நடை மேய்ச்சலுக்காக நீர்பாசனத் திணைக்களத்தின் அனுமதியுடன் முருங்கன் கட்டுக்கரைக்குளத்தின் உட்பகுதியில் புல் அறுத்தான் கண்டல், கருக்காக்குளம், கட்டைக்காடு எனும் இடங்களில் சுமார் 200 ஏக்கர் விஸ்தீரணத்தில் மேய்ச்சல் காணி ஒதுக்கப்பட்டிருந்தது.

பெரும்போக நெற்செய்கை மேற்கொள்ளப்படும் காலங்களில் கட்டுக்கரைகுளத்தின் நீரேந்துப் பகுதியான இப்பிரதேசத்தில் எவ்வித தடங்கலும் இன்றி நானாட்டான் பகுதி தமிழ் மக்கள் தமது கால்நடைகளை மேய்ச்சலுக்கு விட்டுவந்தனர்.

எனினும் கடந்த காலங்களில் நிலவிய யுத்த சூழ்நிலையினால் இப்பகுதியை மேய்ச்சல் நிலமாகப் பயன்படுத்த முடியாத நிலை இவர்களுக்கு ஏற்பட்டது. பின்னர் யுத்தம் நிறைவுற்று 2010 ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் நீர்பாசனத் திணைக்களத்திற்கு சொந்தமான மேற்படி மேய்ச்சல் தரவையை செல்வாக்குடைய சிலர் சட்டவிரோதமாக ஆக்கிரமித்து உரிமை கோரி வருகின்றனர்.

இதனால் நானாட்டான் பகுதி விவசாயிகள் தமது கால்நடைகளுக்கு உரிய மேய்ச்சல் தரவையின்றி பெரும் சிரமத்திற்கு தொடர்ந்து முகம் கொடுக்கின்றனர். அத்துடன் தாம் மேற்கொள்ளும் வேளாண்மையை கால்நடைகளிடமிருந்து பாதுகாக்க முடியாது திண்டாடுகின்றனர். இச்சமயங்களில் விவசாய செய்கைகள் மேற்கொள்ளப்படாத மன்னார் மாவட்டத்தின் வேறுபகுதிகளுக்குத் தமது கால்நடைகளை எடுத்துச் செல்லவேண்டிய இக்கட்டான நிலையை நானாட்டான் மக்கள் எதிர்நோக்குகின்றனர்.

மேலும் நானாட்டான் பிரதேச செயலக பிரிவில் வளர்க்கப்படும் அனைத்து கால்நடைகளையும் மேய்ச்சலுக்கு உட்படுத்தக்கூடிய போதுமான நிலப்பரப்புடைய கட்டுக்கரைகுளம் உட்பகுதியில் புற்தரவைகளை கொண்டுள்ள நிலப்பரப்பை சட்டவிரோதமாக பலர் ஆக்கிரமித்துள்ள நிலையில் இது குறித்து பல தடவைகள் முறையிட்டும் எவ்வித நடவடிக்கைகளையும் தொடர்புடைய அதிகாரிகள் மேற்கொள்ளவில்லை எனத் தவிசாளர் மேலும் குறிபிட்டுள்ளார்.

மேலும் குறித்த மேய்ச்சல் தரவைக் காணியை ஆக்கிரமித்தவர்களிடம் இருந்து அதனை மீட்பதற்கு நடவடிக்கை எடுக்காவிட்டால் நானாட்டான் தமிழ் மக்கள் பரம்பரை பரம்பரையாக மேற்கொண்டு வந்த கால்நடை வளர்ப்பைக் கைவிடவேண்டிய துர்பாக்கிய நிலை ஏற்படும் என நானாட்டான் பிரதேச சபைத் தலைவர் திருச்செல்வம் பரஞ்சோதி குறித்த பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் மேலும் தெரிவித்துள்ளார்.