ஜெனீவா மனித உரிமைச் சபை அமர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில்

இலங்கைப் படையினரைக் காப்பாற்றப் புதிய சட்டம்- பீரிஸ் அறிவிப்பு

ஈழத்தமிழர் விவகாரத்தைத் தமது தேவைக்காகக் கையாளும் வல்லரசு நாடுகளுக்குச் செருப்படி
பதிப்பு: 2021 மார்ச் 02 16:45
புலம்: யாழ்ப்பாணம், ஈழம்
புதுப்பிப்பு: மார்ச் 02 20:36
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lk
#government
ஜெனீவா மனித உரிமைச் சபையில் இலங்கை தொடர்பான விவாதம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் இலங்கை ஒற்றையாட்சி அரசின் படையினர் போர்க்குற்றங்களில் ஈடுபடவில்லை என்றும் சர்வதேச ரீதியாக எழுந்துள்ள போலியான குற்றச்சாட்டுக்களில் இருந்து இலங்கைப் படையினரைக் காப்பாற்றப் புதிய சட்டங்களை உருவாக்கவுள்ளதாகவும் அமைச்சர் பேராசிரியர் பீரிஸ் தெரிவித்திருக்கின்றார். முப்படையினரையும் காப்பாற்றக்கூடிய முறையில் நாடாளுமன்றத்தில் புதிய சட்டங்களை உருவாக்கவுள்ளதாகவும் தற்போதைய நிலையில் போதிய சட்டங்கள் இல்லையென்றும் அமைச்சர் பேராசிரியர் பீரிஸ் தெரிவித்திருக்கின்றார்.
 
பொறுப்புக்கூறல் விடயத்தில் இருந்து இலங்கை தவறியுள்ளதால் சர்வதேச நீதிமன்றத்திற்குப் பாரப்படுத்த வேண்டுமென மனித உரிமைச் சபையின் ஆணையாளர் உறுப்பு நாடுகளுக்குப் பரிந்துரைத்துள்ள நிலையில், போர்க்குற்றத்தில் படையினர் ஈடுபடவேயில்லையென அமைச்சர் பேராசிரியர் பீரிஸ் நேற்றுத் திங்கட்கிழமை கூறியிருக்கின்றார்.

அதுவும் கல்வி அமைச்சராகப் பதவி வகிக்கும் நிலையில் கல்வித்துறை பற்றிய விடயங்களைச் செய்தியாளர் மாநாட்டில் தெரிவிக்காமல், சர்வதேச விவகாரம் தொடர்பாகவே பீரிஸ் கருத்து வெளியிட்டிருக்கிறார்.

இலங்கை விவகாரம் தொடர்பாக சர்வதேச நாடுகள் அழுத்தங்களைக் கொடுத்துக் கொண்டிருக்கும் நிலையில் சர்வதேச நாடுகளின் கூற்றுக்களை பொய்யாக்கும் வகையில் அமைச்சர் பேராசிரியர் பீரிஸ் கருத்து வெளியிட்டிருப்பது எந்தப் பின்னணியில் என்ற கேள்விகள் எழுகின்றன.   அமெரிக்கா, பிரித்தானியா, இந்தியா போன்ற நாடுகள் இலங்கைக்குக் கடும் அழுத்தம் கொடுத்துவந்தாலும், இந்தோ- பசுபிக் பாதுகாப்பு விவகாரத்தில் இலங்கையைத் தங்கள் பக்கம் எடுக்கும் நோக்கிலேயே இந்த வல்லாதிக்க செயற்பட்டு வருவதாக ஈழத்தமிழர் தரப்பு குற்றம் சுமத்தி வருகின்றது.

ஆனாலும் இந்த வல்லாதிக்க நாடுகளையே பொய்யர்களாக மாற்றும் நகர்வுகளை இலங்கை துணிவோடு மேற்கொண்டு வருகின்றது.

சீனாவில் உள்ள இலங்கைத் தூதுவர் பாலித கோகண்ண பீஜிங்கில் உள்ள சீனாவுக்கு ஆதரவான நாடுகளின் பிரதிநிதிகளைச் சந்தித்து மனித உரிமைச் சபை அமர்வில் இலங்கைக்கு ஆதரவாகச் செயற்படுமாறு கோரியிருக்கிறார்.

சீன அரசும் இலங்கைக்கு ஆதரவாகப் பகிரங்கமாகச் செயற்பட்டு வரும் நிலையில், சீனாவின் ஆதரவோடு ஈழத்தமிழ் மக்கள் மீதான இன அழிப்பு மற்றும் போர்க்குற்றங்கள். மனித குலத்துக்கு எதிரான குற்றங்களுக்கான சர்வதேச விசாரணைப் பொறிமுறையை முற்றாகவே நீக்கம் செய்யும் நகர்வுகளை இலங்கை மேற்கொண்டு வருகின்றமை பகிரங்கமாகிறது.

இதனையே அமைச்சர் பேராசிரியர் பீரிஸின் கருத்து எடுத்துக்காட்டுகின்றது. இலங்கைப் படையினரைச் சர்வதேச விசாரணைப் பொறிமுறையில் இருந்து காப்பாற்ற இலங்கையில் போதிய சட்டங்கள் இல்லை என்றும் புதிய சட்டங்களை உருவாக்க வேண்டுமெனவும் அமைச்சரினால் வெளியிடப்பட்ட தகவல், மனித உரிமைச் சபையில் இலங்கை தொடர்பாக நிறைவேற்றப்படவுள்ள தீர்மானத்திற்குச் சவாலாகவே அமையும் எனக் கூறலாம்.

அதாவது எவருடைய அழுத்தங்களுக்கும் இலங்கை அடிபணியாது என்பதும் சீனாவின் உதவியே இலங்கைக்குப் போதுமானதென்ற துணிச்சலான தொனியும், வல்லாதிக்க நாடுகளுக்கு பெரும் செருப்படியாகும்.

ஆனால் ஈழத்தமிழர் விவகாரத்தை வெறுமனே ஒப்பாசாரத்துக்காக மனித உரிமைச் சபையில் உச்சரிக்கும் அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் இந்தியா போன்ற வல்லாதிக்க நாடுகளுக்கு இலங்கையின் ஜனநாயகப் பண்பற்ற இந்த அணுகுமுறை தெரியாததல்ல. இந்த இக்கட்டான பூகோள அரசியலைப் பயன்படுத்தத் தவறியது யார்? தமிழ்த்தேசியக் கட்சிகளின் மனட்சாட்சிக்கு இது தெரியாததல்ல. 

தமிழ்த்தேசியக் கட்சிகள் ஒன்றிணைந்து மனித உாிமைச் சபையிடம் கையளித்த பொது ஆவணம் இன அழிப்புக்கான சர்வதேச நீதியை அழுத்தம் திருத்தமாகவும் ஒரே வாக்கியத்திலும் கோரியிருந்தால், சிங்கள ஆட்சியாளர்கள் நிலைதடுமாறியிருப்பர். சா்வதேச நாடுகளும்  இலங்கையின் தாளத்துக்கு ஆடிக்கொண்டிருக்கும் நிலையில் இருந்து சற்று மாறியிருக்கும்.

ஆனால் காலனித்துவ ஆட்சியின் விசுவாசம், தமிழ்த்தேசியக் கட்சிகளின் பிரநிதிகளை அடிபணிய வைத்திருக்கிறது. இலங்கை ஒற்றையாட்சி அரசின் படைகளைக் காப்பாற்றப் புதிய சட்டம் உருவாக்க வேண்டும் என்ற அமைச்சர் பீரிஸின் கருத்து தமிழ்த்தேசியக் கட்சிகளின் மனச்சாட்சியை உலுக்கியிருக்க வேண்டும்.