வடமாகாணம் யாழ்

காங்கேசன்துறையில் இருந்து இந்தியாவுக்குக் கப்பல் சேவை- யாழ் அரச அதிபர் தகவல்

இந்திய மத்திய அரசின் கட்டுப்பாட்டில் வைத்திருக்கவே பாண்டிச்சேரி வரை சேவை
பதிப்பு: 2021 மார்ச் 03 12:43
புலம்: யாழ்ப்பாணம், ஈழம்
புதுப்பிப்பு: மார்ச் 03 23:55
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lk
#tamil
தமிழ் மக்களின் தாயக பூமியான வடமாகாணம் யாழ் காங்கேசன் துறையிலிருந்து இந்தியாவிற்கான பயணிகள் கப்பல் சேவையை இவ்வருட நடுப்பகுதியில் ஆரம்பிப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசன் கூர்மைச் செய்தித் தளத்திற்கு தெரிவித்தார். இந்தியா பாண்டிச்சேரி மாநிலம் காரைக்காலில் இருந்து இலங்கையின் வட மாகாணம் காங்கேசன்துறை வரையான பயணிகள் கப்பல் போக்குவரத்தை மேற்கொள்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் நேற்று இந்திய தலைநகர் புதுடில்லியில் கைச்சாத்திடப்பட்டது.
 
இந்தியத் துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழி அமைச்சின் கீழ் செயல்படும் துறைமுகங்கள் தொடர்பான "சாகர் மால" அபிவிருத்தி கூட்டுத்தாபனத்திற்கும் இலங்கை - இந்திய கப்பல் பயணிகள் தொடர்பான அமைப்பொன்றுக்குமிடையிலேயே குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம் புதுடில்லியில் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இது குறித்து யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசனிடம் கூர்மை செய்தித் தளம் வினவிய பொழுதே அவர் மேற்படி தகவலைத் தெரிவித்தார்.

யாழ் அரசாங்க அதிபர் க. மகேசன் இது தொடர்பில் மேலும் தெரிவித்ததாவது,

இலங்கை - இந்திய பயணிகள் கப்பல் சேவையை காங்கேசன்துறை துறைமுகம் ஊடாக மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பே ஆரம்பிக்கப்பட்டுவிட்டது. இது தொடர்பில் சட்டரீதியாக இரண்டு நாடுகளுக்கும் இடையில் மேற்கொள்ளவேண்டிய பணிகள் தற்பொழுது நிறைவு பெற்றுள்ளது.

மேலும் காங்கேசன்துறை துறைமுகத்திற்கு ஏலவே வர்த்தக ரீதியில் சரக்கு கப்பல்கள் வந்து செல்லும் நிலையில் பயணிகள் கப்பல் இங்கு தரித்துச் செல்வதற்கும் போதிய வசதிகள் உண்டு. எனினும் கப்பல் பயணிகளுக்கான பிரத்தியேக இறங்கு முனையம் கங்கேசன்துறை துறைமுகத்தில் இல்லாததினால் அதனை நிறுவுவதற்கு இலங்கை துறைமுக அதிகார சபை விரைவில் நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளது.

அத்துடன் கப்பல் பயணிகளுக்கான அடிப்படை வசதிகளுடன் கூடிய நவீன உட்கட்டமைப்புகளையும் காங்கேசன்துறை துறைமுகத்தில் நிறுவுவதற்கான பூர்வாங்கப் பணிகளும் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளது.

மேலும் குறித்த காரைக்கால் - காங்கேசன்துறைப் பயணிகள் கப்பல் சேவையில் ஈடுபடுத்துவதற்கு பொருத்தமான தனியார் கப்பல் நிறுவனங்களிடம் இருந்து, உரிய திட்ட முன்மொழிவை இலங்கை துறைமுக அதிகார சபை விரைவில் கோரவுள்ளதாகவும் அதன் பின்னர் தகுதி வாய்ந்த நிறுவனத்தின் கப்பலைச் சேவையில் ஈடுபடுத்தவுள்ளதாகவும் யாழ் அரசாங்க அதிபர் க.மகேசன் கூர்மைக்கு மேலும் தெரிவித்தார்.

இந்த வகையில் அனைத்து நடவடிக்கைகளும் எதிர்வரும் மூன்று மாதங்களுக்குள் பூர்த்தியானால் இவ் வருட நடுப்பகுதியில் இந்திய- இலங்கை பயணிகள் கப்பல் சேவைகளை ஆரம்பிக்க கூடிய சாத்தியம் உள்ளதென யாழ் அரச அதிபர் மேலும் தெரிவித்தார்.

இந்திய மத்திய அரசின் மேற்பார்வையிலேயே பாண்டிச் சேரி யூனியன் பிரதேசம் அமைந்துள்ளது. இதனாலேயே பாண்டிச்சேரி ஊடாக இந்தக் கப்பல் சேவை ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக அவதானிகள் கூறுகின்றனர். சிங்கள ஆட்சியாளர்களைத் திருப்திப்படுத்தும் நோக்கில் இந்திய மத்திய அரசு இவ்வாறு செயற்படுவதாகவும் கூறப்படுகின்றது.

இந்தச் சேவையை தமிழ் நாட்டு அரசின் கட்டுப்பாட்டில் அல்லது தமிழ் நாட்டு நேர ஒழுங்கில் நடத்த இலங்கை ஒற்றையாட்சி அரசு விரும்பியிருக்க வாய்ப்பில்லை. இதனால் இந்திய மத்திய அரசின் ஆளுகைக்குள் இருக்கும் பாண்டிச்சேரி தெரிவு செய்யப்பட்டிருக்கலாமெனக் கூறப்படுகின்றது.