இலங்கை ஒற்றையாட்சி அரசுக்கு எதிராக வடமாகாணம் கிளிநொச்சி

இரணைதீவில் மூன்றாவது நாளாகவும் போராட்டத்தில் ஈடுபடும் மக்கள்

சடலங்கள் அடக்கம் செய்யப்படுவதற்குக் கடும் எதிர்ப்பு
பதிப்பு: 2021 மார்ச் 05 09:23
புலம்: கிளிநொச்சி, ஈழம்
புதுப்பிப்பு: மார்ச் 06 01:39
main photo main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lk
#tamil
இலங்கைத் தீவில் கொவிட் நோய் தொற்றினால் மரணமடைபவர்களை தமிழர் தாயகப் பிரதேசமான கிளிநொச்சி மாவட்டம் இரணைதீவிலேயே அடக்கம் செய்தல் வேண்டும் என்பதில் விடாப்பிடியாக உள்ள நிலையில் அதனை ஆட்சேபித்து இன்று வெள்ளிக்கிழமை மூன்றாவது நாளாகவும் இரணைதீவு மக்கள் எதிர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர். இலங்கையில் கொவிட் காரணமாக இறப்பவர்களை இரணைதீவில் அடக்கம் செய்வதற்கான அமைச்சரவை தீர்மானமொன்றை கடந்த செவ்வாய் இலங்கை அரசாங்கம் எடுத்திருந்தது.
 
இந்த நிலையில் இரணைதீவைச் சேர்ந்த தமிழ் மக்கள் சென்ற புதன்கிழமை காலை முழங்காவில் இரணைமாதா நகரில் ஒன்று கூடி தமது பாரம்பரிய தாயகமான இரணைதீவில் கொவிட் தொற்றினால் மரணமடைந்த முஸ்லிம் ஜனாசாக்களை அடக்கம் செய்வதற்கு இலங்கை அரசாங்கம் எடுத்திருந்த முடிவைக் கண்டித்து எதிர்ப்பு போரட்டமொன்றினை முன்னெடுத்திருந்தனர்.

மேலும் இரணைதீவிற்கு பொறுப்பான பங்குத்தந்தை வண.பிதா மடுத்தீன் பத்திநாதன் தலைமையில் நடைபெற்ற நேற்றைய போராட்டத்தில் நூற்றுக்கணக்கான இரணைதீவு மக்கள் கலந்துகொண்டு சடலங்களை தமது தீவில் புதைக்கும் அரசின் முடிவைக் கண்டித்து மாபெரும் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர். இன்றும் போராட்டம் தொடருகின்றது.

எனினும் இலங்கை அரசாங்கம் கொரோனா நோயினால் மரணமடையும் முஸ்லிம்களின் ஜனாசாக்களை இரணைதீவில் அடக்கம் செய்வதற்கான நடவடிக்கைளை தொடர்ந்தும் முன்னெடுத்து வருவதுடன் இரணைதீவில் சடலங்களை அடக்குவது தொடர்பான செயற்பாட்டு ஒழுங்குகள் அடங்கிய மூன்று பக்கங்கள் கொண்ட சுற்றுநிரூபத்தையும் கடந்த 3ம் திகதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் கையொப்பத்துடன் வெளியிட்டுள்ளது.

இந்த நிலையில் சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்ட குறித்த சுற்றுநிரூபத்தில் அடக்கம் செய்வதற்கான இடமாக இரணைதீவின் பெயர் குறிப்பிடப்பட்டு அதனை ஊடகங்கள் வாயிலாக அறிந்து கொண்ட இரணைதீவு மக்கள் மேலும் ஆக்ரோசம் அடைந்த நிலையில் இலங்கை அரசின் முடிவிற்கு கண்டனம் தெரிவித்து இன்று வியாழன் இரண்டாவது நாளாகவும் தமது எதிர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர்

மேலும் இன்றைய ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட மக்கள் இலங்கை அரசானது சடலங்களை இரணைதீவில் அடக்கம் செய்யும் தான்தோன்றித் தனமான தனது முடிவை உடன் கைவிடல் வேண்டும் எனத் தெரிவித்ததுடன் சடலங்களை அடக்கம் செய்யும் தனது முடிவில் அரசாங்கம் மாற்றம் செய்யாதுவிடின் தமது போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை கொரோனாவினால் உயிரிழப்போரின் சடலங்களை கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள இரணைதீவில் அடக்கம் செய்வது தொடர்பில் இலங்கை அரசாங்கம் கடுமையான விமர்சனங்களுக்கு முகம் கொடுத்துள்ளதாகத் தென்னிலங்கைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ சுமந்திரன் எஸ்.சிறிதரன், செல்வம் அடைக்கலநாதன் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் உட்பட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் மற்றும் சஜீத் பிரேமதாச தலைமையிலான ஜக்கிய மக்கள் சக்தி கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க உட்பட பெரும் எண்ணிக்கையான அரசியல் பிரமுகர்களும் சிவில் அமைப்பினரும் இரணைதீவில் முஸ்லிம் ஜனாஸாக்களை அடக்குவதற்கு அரசாங்கம் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் குறித்து தமது பலத்த கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.