வடமாகாணம் கிளிநொச்சி இரணைதீவில்

சடலங்களை அடக்கம் செய்வதற்கு எதிராக ஏழாவது நாளாகவும் போராட்டம்

பொதுமக்களோடு அருட்தந்தையர்களும் பங்கேற்பு
பதிப்பு: 2021 மார்ச் 09 13:52
புலம்: கிளிநொச்சி, ஈழம்
புதுப்பிப்பு: மார்ச் 10 03:25
main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lk
#tamil
கொரோனாவினால் மரணமடைபவர்களை கிளிநொச்சி இரணைதீவில் அடக்கம் செய்வதற்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டம் இன்று செவ்வாய்க்கிழமை ஏழாவது நாளாக முன்னெடுக்கப்படுவதாக முழங்காவில் பங்குத் தந்தை வண.பிதா மடுத்தீன் பத்திநாதன் சற்று முன்னர் கூர்மைச் செய்தித் தளத்திற்கு தெரிவித்தார். இலங்கை அரசாங்கம் கொரோனாச் சடலங்களை இரணைதீவில் அடக்கம் செய்யும் அதன் தீர்மானத்தை ரத்துச் செய்து உத்தியோகபூர்வத் தகவலை வெளியிடும் வரை இரணைதீவு மக்கள் தமது போராட்டத்தைக் கைவிடப்போவதில்லை எனப் பங்குத்தந்தை வண.பிதா மடுத்தீன் பத்திநாதன் கூர்மைச் செய்தித் தளத்திற்குத் தெரிவித்தார்.
 
தமிழர் தாயகத்தின் ஒரு பகுதியான கிளிநொச்சி மாவட்டம் இரணை தீவில் கொரோனா நோயாளர்களின் சடலங்களை புதைப்பதற்கு இலங்கை அரசாங்கம் கடந்த இரண்டாம் திகதி தீர்மானம் மேற்கொண்டு அது தொடர் பான வர்த்தமானி அறிவித்தலையும் சுற்றுநிரூபமொன்றினையும் சுகாதார அமைச்சின் ஊடாக வெளியிட்ட நிலையில் கடந்த மூன்றாம் திகதி தொடக்கம் இரணைதீவு மக்கள் தமது எதிர்ப்புப் போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தநிலையில் இன்று ஆறாவது நாளாகவும் இரணைதீவு மக்கள் தமது போராட்டத்தினை தொடர்ந்தும் முன்னெடுத்து வருவதாக முழங்காவில் பங்குத் தந்தை வண.பிதா மடுத்தீன் பத்திநாதன் கூர்மைக்கு மேலும் தெரிவித்தார்.

ஞாயிறு காலை இரணைதீவு புனித செபமாலை மாதா ஆலயத்தில் பூஜை வழிபாடுகள் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து எதிர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டதாகவும் குறித்த போராட்டத்தில் இலங்கையின் நாலாபுறமும் வாழும் இரணைதீவைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டதாகவும் பங்கு தந்தை வண.பிதா மடுத்தீன் பத்திநாதன் கூர்மைக்கு மேலும் தெரிவித்தார்.

போராட்டத்தை நடத்தி வரும் இரணைதீவு மக்களைச் சந்திப்பதற்காக நாளை கடற்றொழில் அமைச்சர் இரணைதீவு வருகை தரவுள்ள நிலையில் இரணைதீவு மக்கள் தமது போராட்டம் தொடர்பில் அரசாங்கத்தின் நற்செய்தியை அமைச்சர் எடுத்து வரலாம் எனும் நம்பிக்கையுடன் அமைச்சர் டக்ளஸ்சின் வருகைக்காகக் காத்திருப்பதாகவும் பங்குத் தந்தை வண.பிதா மடுத்தீன் பத்திநாதன் கூர்மைக்கு மேலும் தெரிவித்தார்.

இதேவேளை இரணைதீவில் சடலங்களைப் புதைப்பதற்கு குழிகள் தோண்டப்பட்ட பகுதிகளில் ஆயுதம் ஏந்திய கடற்படையினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் மேலதிக பாதுகாப்புப் பணிகளுக்காக முழங்காவிலில் இருந்து பொலிஸார் இரணைதீவிற்கு அழைத்து வரப்பட்டு அங்கு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.