வடமாகாணத்தில் அதிகரித்து வரும் கொவிட்- 19

மன்னார் மீன் சந்தை தற்காலிகமாக மூடப்பட்டது- பலருக்குக் கொரோனா

யாழ் நகரிலும் வேகமாகப் பரவுவதாக அதிகாரிகள் தகவல்
பதிப்பு: 2021 மார்ச் 10 09:28
புலம்: மன்னார், ஈழம்
புதுப்பிப்பு: மார்ச் 11 03:22
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lk
#tamil
மன்னார் மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்று வேகமாகப் பரவி வரும் நிலையில் சுகாதார அதிகாரிகளின் உத்தரவின் பேரில் பஸார் பகுதியில் உள்ள மீன் சந்தை நேற்றுச் செவ்வாய் காலை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. மன்னார் பஸார் பகுதியில் உள்ள குறித்த மீன் சந்தையில் வியாபாரத்தில் ஈடுபடும் சௌத்பார் சாந்திபுரத்தைச் சேர்ந்த 51 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவர் கடந்த 5ம் திகதி இரவு மன்னாரில் புகையிரதம் மோதி உயிரிழந்த நிலையில் மன்னார் பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்த அவரின் சடலத்திற்கு மேற்கொள்ளப்பட்ட பீ. சீ. ஆர் பரிசோதனையில் அவருக்கு கொரோனாத் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டது.
 
இந்த நிலையில் புகையிரத விபத்தில் மரணமடைந்த குறித்த மீன் வியாபாரி மன்னார் பஸார் பகுதியில் உள்ள மீன் சந்தையிலேயே தினமும் வியாபாரம் மேற்கொண்டு வந்த நிலையில் மேற்படி மீன் சந்தையை உடன் மூடுமாறு சுகாதார அதிகாரிகள் உத்தரவிட்டதின் பேரில் இன்று செவ்வாய் காலை குறித்த மீன் சந்தை மூடப்பட்டது.

மேற்படி மன்னார் மீன் சந்தையில் வியாபார நடவடிக்கையில் ஈடுபடும் வியாபாரிகள் அனைவருக்கும் பீ.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட சுகாதார சேவைகள் திணைக்கள அதிகாரிகள் கூர்மைக்குத் தெரிவித்தனர்.

மன்னாரில் பீ.சீ.ஆர் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட மீன் வியாபாரிகளில் இறுதி நபரின் பெறுபேறு கிடைக்கும் வரை மன்னார் பஸாரில் உள்ள குறித்த மீன் சந்தை திறக்கப்படாதெனச் சுகாதார அதிகாரிகள் எமது கூர்மைத் தளத்திற்கு மேலும் தெரிவித்தனர்.

இதேவேளை மன்னார் சாந்திபுரம் பகுதியில் ரயிலில் மோதி உயிரிழந்தவரின் சடலத்தில் கொரொனா நோய்த் தொற்று காணப்பட்டுள்ள நிலையில் அவரின் நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

குறித்த நபரின் மரணம் விபத்தினால் ஏற்பட்டுள்ளதினால் மன்னார் பொலிஸார் இது தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். அத்துடன் மன்னார் நீதிமன்ற உத்தரவுப்படி குறித்த சடலம் பிரேதப் பரிசோதனைக்கு உட்படுத்தபட்ட நிலையில் நாளை அடக்கத்திற்காக மட்டக்களப்பு ஓட்டமாவடி சூடுபத்தினசேனைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாகச் சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை மன்னாரில் கொரோனா நோய் தொற்று வேகமாகப் பரவி வரும் நிலையில் மாந்தை மேற்கு பிரதேச செயலகத்தில் பணியாற்றும் சில ஊழியர்கள் மற்றும் வங்கிப் பணியாளர்கள் உட்பட மன்னார் நகரில் நடைபெற்ற இரண்டு மரணச்சடங்கில் மாந்தைப் பகுதியில் இருந்து கலந்து கொண்ட பொது மக்கள் அடங்கலாக நூறு நபர்களுக்கு இன்று பீ. சீ . ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாகச் சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

அதேவேளை, யாழ் மாவட்டத்தின் பல பிரதேசங்களிலும் நாளுக்கு நாள் கொரோனாத் தொற்று அதிகரிப்பதாக வடமாகாண சுகாதாரப் பணிப்பாளர் கேதீஸ்வரநாதன் கூர்மைச் செய்தித் தளத்திற்குத் தெரிவித்தார்.