வடமாகாணம்

மன்னார் கூட்டுறவுச் செயலகக் கட்டடம் இடிபாடுகளுடன் காணப்படுவதாக முறைப்பாடு

நடவடிக்கை எடுக்கப்படவில்லையெனக் குற்றச்சாட்டு
பதிப்பு: 2021 மார்ச் 12 11:19
புலம்: மன்னார், ஈழம்
புதுப்பிப்பு: மார்ச் 13 22:49
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lk
#tamil
வட மாகாணம் மன்னார் நகரின் நுழைவாயிலில் அமைந்துள்ள மாவட்டக் கூட்டுறவுச் செயலகக் கட்டிடம் கடந்த இரண்டு வருடங்களாக இடிபாடுகளுடன் காணப்படும் நிலையில் யாழ்ப்பாணத்தைத் தலைமையகமாக கொண்டுள்ள மாகாண சபை நிர்வாகம் இது தொடர்பில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று விசனம் தெரிவிக்கப்படுகிறது. கடந்த நான்காம் திகதி வியாழன் வட மாகாண ஆளுநர் பி.எம்.எஸ். சாள்ஸ் தலைமையில் நடைபெற்ற மன்னார் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலும் இது குறித்து ஆராயப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
 
மைத்திரி-ரணில் அரசாங்கத்தில் மன்னார் மாவட்டத்தில் கூட்டுறவுத் துறையை மேம்படுத்து வதற்காகவும் ஏனைய புனரமைப்பு பணிகளுக்காகவும் சுமார் 300 கோடி ரூபாய்களுக்கும் அதிகமான பணம் ஒதுக்கப்பட்ட நிலையில் குறித்த பணத்தில் மேற்படி கூட்டுறவுச் செயலக கட்டிடத்திற்கு ஒரு மின்குமிழ் தானும் பொருத்தப்படாது அப்பணம் கடந்த மைத்திரி ரணில் ஆட்சியில் செல்வாக்கு நிறைந்த பிரபல அமைச்சரொருவரினால் மோசடி செய்யப்பட்டுள்ளது எனும் தகவல்களும் வெளிவந்துள்ளது.

இது பற்றி மேலும் தெரிவிக்கப்படுவதாவது

மன்னார் - மதவாச்சி ஏ-14 பிரதான வீதி, ஊடறுத்துச் செல்லும் பிரதான பாலத்திற்கும் மன்னார் நீதிமன்றக் கட்டிடத் தொகுதிக்கும் அருகில் அமைந்துள்ள மேற்படி கூட்டுறவுச் செயலகக் கட்டிடம் கடந்த 1967 ஆம் ஆண்டு நிர்மாணிக்கப்பட்டது. இரண்டு மாடியைக் கொண்ட இக்கட்டிடத்தின் கீழ் தளத்தில் கடந்த 1990 ஆம் ஆண்டு வரை இலங்கை வங்கி மற்றும் மக்கள் வங்கி ஆகியவற்றின் மன்னார் கிளைகள் இயங்கி வந்தன.

கடந்த 1990 ஆண்டு பிற்பகுதியில் மன்னார் பிரதேசத்தில் ஏற்பட்ட யுத்த நடவடிக்கைகள் மற்றும் தாக்குதல் சம்பவங்களையடுத்து மன்னார் நகரத்தையும் மற்றும் அதனோடு இணைந்திருந்த தீவுப் பகுதியையும் இலங்கை இராணுவம் தமது பூரண கட்டுபாட்டிற்குள் கொண்டு வந்திருந்தனர்.

இந்த சூழ்நிலையில் குறித்த வங்கிகள் மேற்படி கட்டடத்தில் இருந்து வெளியேற இலங்கை இராணுவத்தினர் மன்னார் நகர நுழைவாயிலின் அருகாமையில் இருந்த மேற்படி மாவட்ட கூட்டுறவுச் செயலகக் கட்டிடத்தை கையகப்படுத்தியதுடன் அதனைத் தமது முகாமாகவும் மாற்றிக்கொண்டனர்.

இதையடுத்து தள்ளாடியில் நிலைகொண்டிருந்த 212 பிரிகேட் படைப்பிரிவின் மன்னார் நகர இராணுவக் கட்டளைத் தலைமையகமாக மேற்படி கூட்டுறவுச் செயலகக் கட்டிடம் மாற்றம் பெற்றது . அத்துடன் இலங்கை இராணுவத்தின் பொது மக்கள் தொடர்பு நிலையம் மற்றும் இலங்கை பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் இணைந்த சோதனை சாவடிகள் ஆகியன அடங்கிய நகரின் அதி முக்கிய இராணுவ கேந்திர மையமாகவும் குறித்த கட்டிடம் செயல்பட்டது.

இந்த நிலையில் குறித்த கட்டிடத்தை தம்மிடம் கையளிக்குமாறு மன்னார் கூட்டுறவுச் செயலக நிருவாகத்தினர் இலங்கை இராணுவத்தினரிடமும் அரச அதிகாரிகளிடமும் கடந்த காலங்களில் கோரிக்கை விடுத்திருந்தனர். இந்த நிலையில் அரச அதிகாரிகள் மற்றும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களின் தொடர்ச்சியான அழுத்தம் காரணமாக மைத்திரி-ரணில் அரசாங்கத்தில் மேற்படி கூட்டுறவுச் செயலகக் கட்டிடத்திலும் அதன் வளாகத்திலும் கடந்த 90ஆம் ஆண்டு தொடக்கம் நிலை கொண்டிருந்த இலங்கை இராணுவம் கடந்த 2018 மே மாதம் 18 ம் திகதி வெளியேறியது.

இதையடுத்து குறித்த கூட்டுறவுச் செயலகக் கட்டிடமும் அதன் வளாகமும் மன்னார் மாவட்ட கூட்டுறவுத் துறையினரிடம் கையளிக்கப்பட்டது. மேலும் குறித்த கட்டிடம் மன்னார் நகரின் நுழைவாயிலில் பஸார் பகுதியுடன் இணைந்த வர்த்தக ரீதியில் மிகவும் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் இடிபாடுகளுடன் மிகவும் அவலத் தோற்றத்திலும் காணப்படும் நிலையில் மன்னார் மாவட்ட கூட்டுறவுச் செயலக நிருவாகிகள் புதிய கட்டிடமொன்றினை அங்கு நிர்மாணிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு தொடர்சியாகக் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

கடந்த இரண்டு வருடங்களாக மன்னார் கூட்டுறவுச் சமாச நிருவாகிகள் குறித்த கூட்டுறவுச் செயலக வளாகத்தில் வர்த்தக ரீதியில் புதிய கட்டிடத்தொகுதி ஒன்றினை புதிதாக நிர்மாணித்து தருமாறு வடக்கு ஆளுநருக்கு கோரிக்கைகள் விடுத்தும் இதுவரை குறித்த கூட்டுறவுச் செயலக கட்டிடம் தொடர்பில் எவ்வித ஆக்கபூர்வமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

மன்னார் பிரதான பாலத்தில் இலங்கை இராணுவம் வீதிச் சோதனைச் சாவடியொன்றை நிறுவி பாதுகாப்புப் பணிகளை மேற்கொண்டுவரும் நிலையில் குறித்த கட்டிடம் மீண்டும் இராணுவ வசமாகலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.