வடமாகாணம் கிளிநொச்சி

ஆனையிறவில் உப்பு உற்பத்தி வீழ்ச்சி- கொரோனா நோய்ப்பரவல் காரணம்

யாழ் முல்லைத்தீவில் பெரும் தட்டுப்பாடு
பதிப்பு: 2021 மார்ச் 13 20:37
புலம்: கிளிநொச்சி, ஈழம்
புதுப்பிப்பு: மார்ச் 13 22:36
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lka
#tamil
வட மாகாணம் கிளிநொச்சி மாவட்டத்தின் ஆனையிறவு உப்பளத்தில் கடந்த வருட உப்பு உற்பத்தி வீழ்ச்சியடைந்ததால், யாழ்ப்பாணம் முல்லைத்தீவு மற்றும் இலங்கைத் தீவின் பல பகுதிகளில் உப்புக்குத் தட்டுப்பாடு நிலை ஏற்பட்டதாக மாந்தை உப்பு நிறுவனத்தின் முகாமைத்துவ அதிகாரியொருவர் கூர்மைச் செய்தித் தளத்திற்குத் தெரிவித்தார். கடந்த வருடம் நிலவிய கால நிலை மாற்றத்தினால் ஏற்பட்ட திடீர் மழை மற்றும் கொரோனா தொற்று அச்சத்தினால் ஆனையிறவு உப்பள ஊழியர்கள் பலர் பணிக்குச் சமூகமளிக்காமை ஆகிய காரணங்களினாலேயே உப்பு உற்பத்தியில் வீழ்ச்சி ஏற்பட்டதாக மேற்படி உப்பள முகாமைத்துவ அதிகாரி கூர்மைச் செய்தித் தளத்திற்கு மேலும் தெரிவித்தார்.
 
கிளிநொச்சி ஆனையிறவு உப்பளத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு 16050 மெட்ரிக் தொன் உப்பு உற்பத்தி செய்யப்பட்டு யாழ் குடாநாடு, முல்லைத்தீவு மற்றும் அம்பாந்தோட்டை, புத்தளம் உட்பட தென்னிலங்கை மாவட்டங்கள் பலவற்றுக்கு விற்பனைக்கு அனுப்பட்டதாகக் குறித்த அதிகாரி கூர்மைக்கு மேலும் தெரிவித்தார்.

எனினும் கடந்த 2020 வருடம் ஆனையிறவு உப்பளத்தில் சுமார் 8500 மெட்ரிக் தொன் அளவுடைய உப்பு உற்பத்தியே மேற்கொள்ளப்பட்டதாகவும் மேற்படி காலநிலை மற்றும் கொரோனா நோய் பரவல் காரணமாக ஏற்பட்ட குறைந்த உற்பத்தியினாலேயே கடந்த வருடம் இறுதிப் பகுதியிலிருந்து இவ்வருட ஆரம்பப் பகுதி வரை வட மாகாண மாவட்டங்களிலும் நாட்டின் ஏனைய பகுதிகளிலும் உப்புக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டதாக அம் முகாமையாளர் மேலும் தெரிவித்தார்.

வட மாகாணத்தில் கடந்த காலத்தில் நிலவிய உப்புத் தட்டுப்பாட்டை சாதகமாகப் பயன்படுத்தி சில வர்த்தகர்கள் புத்தளம் மாவட்டத்தில் தனியார் நிறுவனங்களினால் உற்பத்தி செய்யப்பட்ட உப்பை யாழ்ப்பாணம், மன்னார், வவுனியா, கிளிநொச்சி மாவட்டங்களுக்கு எடுத்து வந்து விற்பனை செய்து அதிகம் லாபமீட்டியதாக அவ்வதிகாரி மேலும் குறிப்பிட்டார்.

புத்தளம் மற்றும் தென்னிலங்கை பகுதிகளில் உள்ள தனியார் உப்பளங்களில் விளைவிக்கப்பட்டு வடக்கு மாவட்டங்களின் வியாபார நிலையங்களில் விற்பனை செய்யப்படும் உப்பு குறைவான தரமுடையது எனவும் மாந்தை உப்பு நிறுவனத்தின் கீழ் இயங்கும் ஆனையிறவு மற்றும் மன்னார் உப்பளங்களில் உற்பத்தி செய்யப்படும் உப்பு அதிக தரம் வாய்ந்ததெனவும் மேற்படி அதிகாரி கூர்மைக்கு மேலும் தெரிவித்தார்.

அத்துடன் ஆனையிறவு உப்பளத்தில் விளைவிக்கப்படும் அயடின் கலந்த உலர்த்திய உப்பு பொதுவான கைத்தொழில் தேவைகளுக்கும் யாழ் மற்றும் முல்லைத்தீவு, கிளிநொச்சி மீனவர்களினால் கருவாடு தயாரிப்பிற்கும் அதிகம் பயன்படுத்தப்படுவதுடன் தென்னிலங்கை கரையோர மாவட்ட மீனவர்களும் ஆனையிறவு உப்பினை பயன்படுத்துவதாக அவ்வதி காரி மேலும் குறிபிட்டார்.

மேலும் பொது மக்களால் அன்றாடம் சமையலுக்கு பயன்படுத்தப்படும் மேசை உப்பு என அழைக்கப்படும் பொடி செய்யப்பட்ட அயோடின் கலந்த சமையல் உப்பு உற்பத்தியை ஆனையிறவு உப்பளத்தில் விரைவில் ஆரம்பித்து நாடளாவிய ரீதியில் அதைச் சந்தைப்படுத்த உள்ளதாகவும் குறித்த அதிகாரி மேலும் குறிபிட்டார்

இதேவேளை கடந்த 2019 ஆம் ஆண்டு மன்னார் உப்பளத்தில் சுமார் 6000 மெட்ரிக் தொன் உப்பு உற்பத்தி செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டதுடன் குறித்த உற்பத்தி கடந்த வருடம் 2020 ல் கொரோனா நோய் தொற்று மற்றும் காலநிலைக் சீரின்மையினால் சுமார் 3200 மெட்ரிக் தொன்னாகக் குறைவடைந்துள்ளதாக மன்னார் உப்பளத்தின் உயர் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

மேலும் மன்னார் உப்பளத்தில் கருவாடு உற்பத்தி மற்றும் கைத்தொழில் தேவைகளுக்கான உப்பு வகைகள் உற்பத்தி செய்யப்படுவதுடன் பொது மக்களால் சமையல் தேவைகளுக்காக தினமும் பயன்படுத்தும் அயோடின் கலந்த மேசை உப்பும் உற்பத்தி செய்யப்பட்டு பொடியாக்கி பொதிகளில் அடைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதாகக் குறித்த அதிகாரி மேலும் தெரிவித்துள்ளார்.

மேலும் கடந்த காலங்களில் சீனா இந்தியா போன்ற நாடுகளிலிருந்து வருடாந்தம் 8000 மெட்ரிக் தொன் உப்பு இலங்கைக்கு இறக்குமதி செய்யபட்ட நிலையில் கடந்த வருடம் ஆட்சிக்கு வந்த ராஜபக்ஸ அரசாங்கம் குறித்த உப்பு இறக்குமதிக்குத் தடை விதித்துள்ள நிலையில் தமிழர் தாயகமான வட மாகாணத்தில் உள்ள ஆனையிறவு மற்றும் மன்னார் உப்பளங்கள் தனது உப்பு உற்பத்தியை பல மடங்கு அதிகரிக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது.

மேலும் தென்னிலங்கையில் அம்பாந்தோட்டை உப்பளம் அண்மைக்காலங்களாக நட்டத்தில் இயங்கி வரும் நிலையில் அங்கு உப்பு உற்பத்தி மந்த நிலையை எய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. அத்துடன் இலங்கை அரசிற்கு சொந்தமான புத்தளத்தில் உள்ள பலாவி உப்பளம் தென்னிலங்கையின் உப்பு தேவையை ஈடுசெய்யமுடியாது போராடி வருகிறது.

இதன் அடிப்படையில் ஆனையிறவு மற்றும் மன்னார் உப்பளங்களின் உப்பு உற்பத்தியை முழு இலங்கையும் வெகுவாக நம்பியுள்ளதுடன் இலங்கையின் உப்பு மாபியாக்கள் குறித்த தொழிலில் கோடிகளைப் புரட்டுவதற்கு ஆனையிறவு மற்றும் மன்னார் உப்பளங்களில் கண் வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இலங்கை ஒற்றையாட்சி அரசின் கைத்தொழில் அமைச்சுக்கு உட்பட்டு கொழும்பைத் தலைமையகமாகக் கொண்டு செயற்படும் வரையறுக்கப்பட்ட ஓர் ஸ்தாபனமே மாந்தை உப்பு நிறுவனம் ஆகும். இந்த நிறுவனத்தின் கட்டுபாட்டிலேயே கிளிநொச்சி ஆனையிறவு, யாழ்ப்பாணம் செம்மணி மற்றும் மன்னார் உப்பளங்கள் நிருவகிக்கப்படுகிறது . அத்துடன் இலங்கை கைத்தொழில் அமைச்சராக விமல் வீரவன்ச பணியாற்றுகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.