ஐக்கிய நாடுகள் சபையின் ஜெனீவா

மனித உரிமைப் பேரவையில் இந்தியா ஈழத்தமிழர்களுக்கு ஆதரவு வழங்க வேண்டும்

விக்னேஸ்வரன், சிவாஜிலிங்கம் கூட்டாகக் கோரிக்கை
பதிப்பு: 2021 மார்ச் 15 12:33
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: மார்ச் 16 06:06
main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lka
#tamil
ஐக்கிய நாடுகள் சபையின் ஜெனிவா மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பாக மேற்கொள்ளப்படும் தீர்மானத்திற்கு இந்திய மத்திய அரசு ஈழத் தமிழர்களுக்காகத் தனது முழுமையான ஆதரவை வழங்க முன்வரவேண்டுமென இந்திய தூதுவர் கோபால் பாக்லேயிடம் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரனும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கமும் கூட்டாகக் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனை முன்னாள் வடமாகாண சபையின் அமைச்சர் திருமதி அனந்தி சசிதரன் கூர்மைச் செய்தித் தளத்திற்கு கூறினார்.
 
இலங்கைக்கான இந்தியத் தூதுவர் கோபால் பாக்லே கடந்த சனிக்கிழமை காலை யாழ்ப்பாணம் வருகை தந்திருந்தார். இந்த நிலையில் வடகிழக்கைத் தளமாக கொண்டு இயங்கும் தமிழ் அரசியல் கட்சிகளின் முக்கியஸ்தர்கள் பலரை அவர் யாழ் நகரில் சந்தித்துக் கலந்துரையாடினார். இதனடிப் படையில் சனிக்கிழமை முற்பகல் 10 மணியளவில் இந்தியத் தூதுவரைத் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியினர் அதன் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில் சந்தித்துக் கலந்துரையாடினர்.

இச்சந்திப்பின்போதே மேற்படி கோரிக்கையை இந்திய தூதுவரிடம் விக்னேஸ்வரனும் சிவாஜிலிங்கமும் கூட்டாக முன்வைத்ததாக அனந்தி சசிதரன் தெரிவித்தார்.

வட மாகாண சபையின் முன்னாள் அமைச்சரான திருமதி அனந்தி சசிதரன் இந்தியத் தூதுவர் சந்திப்புக் குறித்து கூர்மைச் செய்தித் தளத்திற்கு மேலும் தெரிவித்ததாவது:

இலங்கை விவகாரம் தொடர்பாக நல்லிணக்கம் பொறுப்புக் கூறல் மனித குலத்திற்கு எதிரான குற்றச் செயல் தொடர்பாக மேற்குலக நாடுகள் இலங்கை அரசிற்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையில் இம்மாதம் 22 ஆம் திகதி முன்வைக்கும் தீர்மானத்திற்கு இந்தியா தமது முழுமையான ஆதரவை வழங்க முன்வரவேண்டும் எனவும் தமது தாயகத்திலேயே பெரும் அவலத்தை எதிர்கொண்ட ஈழத் தமிழர்களின் நலனிற்காக ஜெனிவா பிரேரணைக்கு ஆதரவளிக்கும் தமது கடப்பாட்டில் இந்தியா தொடர்ந்தும் முன் நிற்கும் என தாங்கள் நம்புவதாகவும் விக்னேஸ்வரனும் சிவாஜிலிங்கமும் கூட்டாகத் தெரிவித்துள்ளனர்.

ஈழத் தமிழர்களுக்கு உரிய நிரந்தர அரசியல் தீர்வினை இலங்கை அரசு முன்வைக்கும் வரை வடகிழக்குத் தாயகத் தமிழர்களுக்கு தற்காலிகத் தீர்வாக 13 ஆம் திருத்தச் சட்டம் அதில் உள்ள காணி மற்றும் பொலிஸ் அதிகாரம் தொடர்பான ஷரத்துகள் முழுமையாக உள்ளவாறு அமுல்படுத்த கொழும்பிற்கு இந்தியா உரிய அழுத்தத்தை வழங்கவேண்டும் எனவும் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான கருத்துக்களை தமது குழுவினர் இந்திய தூதுவர் கோபால் பாக்லேயுடன் முன்வைத்த பொழுது இவ்விடயங்களில் இந்தியாவின் நிலைப்பாடு குறித்த கருத்துகள் எதையும் நேரடியாகத் தெரிவிக்காத தூதுவர் தமிழர்கள் தொடர்பான இலங்கையின் நகர்வுகளை இந்தியா தொடர்சியாகக் கவனித்து வருவதாகத் தெரிவித்ததாகத் திருமதி அனந்தி கூர்மைச் செய்தித் தளத்திற்கு மேலும் தெரிவித்தார்.

தமிழர் தாயகத்தில் பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் வலுவிழந்து பொருளாதார நிலையில் பல்வேறு இடர்களுக்கு முகம் கொடுத்து வரும் நிலையில், அவர்களுக்குச் சுய பொருளாதாரக் கட்டமைப்பை ஏற்படுத்தி தொழில் பயிற்சிகளை வழங்குவதற்கு இந்திய அரசு நடவடிக்கை எடுத்தல்வேண்டும் என இந்தியத் தூதுவரிடம் தான் கோரிக்கையை முன்வைத்ததாகவும் கூறினார்.

அதற்குரிய திட்ட முன்மொழிவுகளை விரைவில் சமர்ப்பிக்கும் பட்சத்தில் அது குறித்து தாம் சாதகமாக பரிசீலிப்பதாக இந்திய தூதுவர் தன்னிடம் உறுதியளித்தாரெனவும் அனந்தி சசிதரன் கூர்மைச் செய்திக்கு தெரிவித்தார்.

குறித்த சந்திப்பில் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்களான சி.வி.விக்னேஸ்வரன், எம்.கே.சிவாஜிலிங்கம், திருமதி அனந்தி சசிதரன், சுரேஷ் பிரேமச்சந்திரன், சிரேஷ்ட சட்டத்தரணி என்.சிறிகாந்தா உட்பட முன்னாள் போராளிகள் ஜனநாயக கட்சியின் முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.

இதேவேளை இலங்கைக்கான இந்தியத் தூதுவர் கோபால் பாக்லே தமிழ் தேசிய கூட்டமைப்பையயும் தமிழ் தேசிய முன்னணி கட்சியையும் தனித்தனியே சந்தித்து கலந்துரையாடியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.