வடமாகாணத்தின்

காணி ஆவணங்கள் எடுத்துச் செல்லப்பட்டதால் அலுவலகம் செயலிழந்தது

யாழ் அதிகாரிகள் கவலை- சீன நிறுவனங்களுக்கு வழங்கப்படலாமெனவும் சந்தேகம்
பதிப்பு: 2021 மார்ச் 15 12:33
புலம்: யாழ்ப்பாணம், ஈழம்
புதுப்பிப்பு: மார்ச் 16 02:54
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lka
#tamil
#genocide
இலங்கை ஒற்றையாட்சி அரசின் காணி சீர்திருத்த ஆணைக்குழு வட மாகாணத்தில் உள்ள தனது காணிகள் தொடர்பான கோவைகளை கடந்த திங்கள் யாழ் செயலகத்தில் இருந்து அனுராதபுரம் மாவட்டச் செயலகத்துக்கு எடுத்துச் சென்ற நிலையில், அலுவலகத்தின் செயற்பாடுகள் அனைத்தும் செயலிழந்துள்ளதாகக் கூறப்படுகின்றது. கொழும்பு பத்தரமுல்லையைத் தலைமையகமாகக் கொண்டுள்ள இலங்கை காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் வட மாகாணத்திற்கான காரியாலயம் யாழ்ப்பாணத்தில் கடந்த 2012 ஜூன் மாதம் 18 ம் திகதி ஆரம்பிக்கப்பட்டு யாழ் மாவட்ட செயலகத்தில் அது இயங்கி வருகிறது.
 
குறித்த அலுவலகத்திலேயே வட மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களின் காணிகள் தொடர்பான கோவைகள் அனைத்தும் முழுமையாகப் பேணப்பட்டு வந்தன.

இந்த நிலையில் கடந்த 08 ஆம் திகதி திங்கள்கிழமை இரவு மேற்படி அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த ஆவணங்களில் யாழ் மாவட்ட காணிகளின் விபரங்கள் கொண்ட வெறும் மூன்று கோவைகள் தவிர்ந்த வட மாகாணத்தின் மிகுதி நான்கு மாவட்டங்களினதும் காணி ஆவணங்கள் எடுத்துச் செல்லப்பட்டுள்ளன.

இலங்கை காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் வட மத்திய மாகாணக் காரியாலயத்திற்கே திடீரென எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கொழும்பில் இயங்கும் இலங்கை காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் தலைமையகத்தில் இருந்து யாழ் செயலகத்தில் இயங்கும் வட மாகாண அலுவலகத்திற்கு கடந்த பெப்ரவரி மாதம் 3 ம் திகதி கிடைக்கப்பெற்ற கடிதம் ஒன்றின் அடிப்படையிலும் அதனைத் தொடர்ந்து கொழும்பு நிர்வாகத்தின் தொடர்ச்சியான அழுத்தம் காரணமாகவும் காணிகளின் ஆவணங்கள் அடங்கிய கோவைகள் அனைத்தும் வட மாகாண அதிகாரிகளினால் அனுராதபுரம் அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டதாகக் கூறப்படுகின்றது.

அனுராதபுரம் மாவட்டச் செயலக அதிகாரிகளினால் எடுத்துச் செல்லப்பட்ட ஆவணங்களில் தமிழர் தாயகம் வட மாகாணத்தின் பல முன்னணி நகரங்களில் அமைந்துள்ள வர்த்தக ரீதியில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பல பெறுமதியான காணிகளின் ஆவணங்களும் அடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில் யாழ் செயலகக் கட்டடத்தில் அமைந்திருந்த காணிச் சீர்திருத்த ஆணைக்குழுவின் வட மாகாணக் காரியாலயம் ஆவணங்கள் எதுவுமின்றி முற்றாகச் செயலிழந்துள்ளதாகப் பெயர் குறிப்பிட விரும்பாத உயர் அதிகாரியொருவர் கூர்மைச் செய்தித் தளத்திற்கு தெரிவித்தார்.

இலங்கையில் தமிழ் மக்கள் அதிகமாக வாழும் மாகாணங்களில் ஒன்றான வட மாகாணம் கிளிநொச்சி மாவட்டத்தில் அதிகளவு பொதுக் காணிகள் உள்ளன.

பளை பகுதியில் சுமார் 3000 ஏக்கருக்கும் அதிக விஸ்தீரணத்தில் காணிகள் உள்ளதுடன் பூநகரி பகுதிகளிலும் பல நூற்றுக்கணக்கான ஏக்கர் பொதுக் காணிகள் உள்ளன.

இதற்கு அடுத்த நிலையில் மன்னார் மாவட்டத்திலும் அதற்கடுத்து வவுனியா மற்றும் முல்லைதீவு மாவட்டங்களிலும் அதிகளவு பொதுக் காணிகள் உள்ளன.

இதேவேளை கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான இலங்கை அரசாங்கம் தொடர்ந்து சீனாவின் நிதியுதவியை பெற்றுவரும் நிலையில், அதற்குப் உபகாரமாக தமிழர் தாயகப்பகுதிகளில் உள்ள காணிகளை சீனாவின் தனியார் நிறுவனங்களுக்குத் தாரை வார்ப்பதற்கு ஏற்ற விதத்திலேயே காணி ஆவணங்களை வடக்கிலிருந்து அனுராதபுரத்திற்கு இடமாற்றப்பட்டுள்ளதோ என்ற சந்தேகமும் எழுந்துள்ளன.