மன்னார் அதிர்ச்சியில், பொதுமக்கள் திரண்டு உதவி

தலைமன்னாரில் ரயில்-பஸ் கோரவிபத்து, பாடசாலைச் சிறுவன் பலி, 15 மாணவர் படுகாயம்

பின்பாகம் முற்றாக நொருங்கி பஸ்வண்டி தூக்கிவீசப்பட்டது
பதிப்பு: 2021 மார்ச் 16 19:53
புலம்: மன்னார், ஈழம்
புதுப்பிப்பு: மார்ச் 17 10:58
main photo main photo main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lk
#tamil
வடமாகாணம் மன்னார் மாவட்டம் தலைமன்னார் பியர் பகுதியில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் இரண்டு மனியளவில் நிகழ்ந்த பாரிய ரயில் பஸ் விபத்தில் பாடசாலை மாணவர்கள் 15 பேர் உள்ளடங்கலாக இருபத்துமூவர் காயமடைந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவிக்கின்றனர். மன்னார் நகரில் இருந்து பயணிகளுடன் தலைமன்னார் சென்ற தனியார் பஸ் வண்டி கொழும்பிலிருந்து தலைமன்னார் பியர் சென்ற பயணிகள் ரயிலுடன் தலைமன்னார் பியர் ரயில்வே நிலையத்துக்குச் சுமார் 150 மீற்றர் அண்மையாகவுள்ள கடவையில் மோதியது. பதினான்கு வயதுடைய தலைமன்னார் பியரைச் சேர்ந்த பி. தரூண் எனும் சிறுவன் ஸ்தலத்திலேயே கொல்லப்பட்டார்.
 
விபத்து நடந்ததும் பெருத்த அல்லோலகல்லோமான நிலை ஏற்பட்டது. பொதுமக்களின் உதவியுடன் குடைசரிந்து பின்பகுதி நொருங்கிப் புரண்டுபோயிருந்த பஸ் வண்டி நிமிர்த்தப்பட்டு எலும்பு முறிவுகளுடன் சிறுவர்களும் பயணிகளும் மீட்கப்பட்டனர்.

இறந்துபோயிருந்த சிறுவனை அடையாளம் காணுவதில் ஏற்பட்ட தாமதத்தால் பெருத்த அவலம் நிலவியது.

பதினான்கு வயதுச் சிறுவன் ஒருவன் கடுமையான தலைக் காயங்களுடன் யாழ் போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டார்.

காயப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிப்பதில் இரத்த வங்கியில் தட்டுப்பாடு ஏற்பட்டது. மன்னார் மாவட்ட பொதுவைத்தியசாலை நிர்வாகம் மன்னார் மாவட்ட வாசிகளிடம் உடனடி உதவியைக் கோரி மக்களின் உதவியுடன் இரத்தவங்கி செயற்படுத்தப்பட்டது.

இதுவரையான மன்னார் வரலாற்றிலேயே நிகழ்ந்த பெரும் ரயில்-பஸ் விபத்து இதுவாகும்.

இரயில் வண்டி கடைசித் தரிப்பிட நிலையத்தை நோக்கி வந்துகொண்டிருந்தமையால் வேகம் குறைவாகவே பயணித்திருந்தது. இல்லாதுவிடின் பெருத்த இழப்பு ஏற்பட்டிருக்கும் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

தலைமன்னார் ஸ்ரேசன் றோமன் கத்தோலிக்க கலவன் பாடசாலையில் கல்வி கற்கும் தலைமன்னார் பியர் பகுதியைச் சேர்ந்த முப்பதுக்கும் அதிகமான மாணவர்கள் உட்பட பெருமளவு பொதுமக்களும் விபத்திற்கு இலக்காகிய குறித்த பஸ் வண்டியில் பயணித்தாகத் தெரிவிக்கப்படுகிறது.

மேலும் காயமடைந்த அனைவரும் சம்பவ இடத்தில் இருந்து அம்புலன்ஸ் வண்டிகள் மூலம் மன்னார் மாவட்ட பொது வைத்திய சாலைக்கு எடுத்துவரப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காயமடைந்தவர்களில் சிலர் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த மன்னார் வைத்தியசாலை அதிகாரிகள் காயமடைந்தவர்களை எடுத்துவருவதற்காக மன்னார் பொது வைத்தியசாலையின் மூன்றுக்கு மேற்பட்ட அம்பியூலன்ஸ் வண்டிகள் சம்பவ இடத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக விபத்து நடந்தவுடன் கூர்மைச் செய்தித்தளத்திற்கு தெரிவித்தனர்.

பாடசாலை முடிந்து பஸ்ஸில் வீடு திரும்பிய தலைமன்னார் பியர் பகுதி மாணவர்களே குறித்த விபத்தில் அதிகம் காயமடைந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.