கொழும்பில்

சிங்கள ஊடகவியலாளர் ஒருவர் கடத்தப்பட்டுச் சித்திரவதை

கணனியில் இருந்த ஆவணங்கள் பாிசோதிக்கப்பட்டதாகவும் தெரிவிப்பு
பதிப்பு: 2021 மார்ச் 17 13:13
புலம்: யாழ்ப்பாணம், ஈழம்
புதுப்பிப்பு: மார்ச் 17 22:07
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lk
#government
சிங்கள ஊடகவியலாளரான சுஜீவ கமகே சென்ற பத்தாம் திகதி புதன்கிழமை அடையாளம் தெரியா நபர்களினால் கடத்தப்பட்டதாக முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தனது டுவிட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார். இந்தக் கடத்தல் ஊடகத்துறைக்கான பாரிய அச்சுறுத்தல் என்றும் உடனடியாக விசாரணை நடத்தப்பட வேண்டுமெனவும் கரு ஜயசூரிய கேட்டுள்ளார். அதேவேளை ஊடகவியலாளர் கடத்தப்பட்டமை இலங்கையில் மீண்டும் கடத்தல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் ஹர்ஷா டி சில்வா கூறுகின்றார். கடத்தப்பட்ட ஊடகவியலாளர் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டதாகவும், கறுப்பு நிற வாகனம் ஒன்றிலேயே அவர் கடத்தப்பட்டுச் சித்திரவதையின் பின்னர் விடுதலையாகிச் சிகிச்சை பெற்று வருவதாகவும் ஹர்ஷா டி சில்வா கூறியுள்ளார்.
 
கடத்தப்பட்ட செய்தியாளரிடம் அவர் எழுதிய செய்தியின் மூலங்கள் கேட்கப்பட்டதாகவும் 2015 ஆம் ஆண்டுக்கு முன்னர் மகிந்த ராஜபக்சவின் ஆட்சியை இந்தக் கடத்தல் ஞாபகப்படுத்துவதாகவும் ஹர்சா டி சில்வா கூறியுள்ளார்.

இந்தக் கடத்தல் இலங்கையில் அனைத்து ஊடகவியலாளர்களுக்கும் அச்சத்தை உருவாக்கியுள்ளதாகவும் இதனால் இந்தக் கடத்தல் தொடர்பாக அரசாங்கம் உடனடியாகப் பொறுப்புக்கூற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

கடத்தப்பட்ட ஊடகவியலாளரின் கணனி உள்ளிட்ட அனைத்துத் தொழில் நுட்ப ஆவணங்களும் பரிசோதிக்கப்பட்டுள்ளதாகவும், வேறு சில ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதென்றும் ஹர்ஷா டி சில்வா தெரிவித்துள்ளர்.

குறித்த ஊடகவியலாளர் பிஹல்பொல வீதி உடலவ ரத்தனபுர பிரதேசத்தில் வசிப்பவர் என்று சிங்கள ஊடகவியலாளர்கள் கூறுகின்றனர். ஆனால் இந்தக் கடத்தல் தொடர்பாக அமைச்சர்கள் எவரும் இதுவரை அதிகாரபூர்வமாகக் கருத்து வெளியிடவில்லை.

இலங்கை அரசாங்கத் தகவல் திணைக்களமும் ஊடகவியலாளர் எவரும் கடத்தப்பட்டுச் சித்திரவதை செய்யப்பட்டதாகக் கூறவில்லை.

ஆனால் குறித்த ஊடகவியலாளர் கடத்தப்பட்டு வேறொரு இடத்துக்குக் கொண்டு செல்லப்பட்டுச் சித்திரவதை செய்யப்பட்ட நிலையில், விடுவிக்கப்பட்டுத் தற்போது சிகிச்சை பெற்று வருவதாகவும் கொழும்பு சிங்கள ஊடக வட்டாரங்கள் கூறுகின்றன.

வடக்குக் கிழக்குத் தாயகப் பிரதேசத்தில் போர் நடைபெற்ற முப்பது ஆண்டு காலத்தில் தமிழ் ஊடக நிறுவனங்கள் பல தடவைகள் தாக்கப்பட்டும் தமிழ் ஊடகவியலாளர்கள் பலர் சுட்டுக் கொல்லப்பட்டுமுள்ளனர். வேறு சில ஊடகவியலாளர்கள் காணாமல் ஆக்கப்பட்டுமிருக்கின்றனர். அது பற்றி எந்தவொரு விசாரணைகளும் இதுவரை நடத்தப்படவேயில்லை.

இன்று வரைகூட வடக்குக் கிழக்குப் பிரதேசங்களில் தமிழ் ஊடகத்துறை அச்சுறுத்தல்களை எதிர்நோக்குகின்றது. ஊடகவியலாளர்கள் பலர் தொடர்ந்தும் அவதானிக்கப்பட்டு வருகின்றனர்.

அது பற்றி சிங்களக் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள் எவருமே வாய்திறப்பதுமில்லை. இவ்வாறான நிலையில் சுஜீவ கமகே என்ற சிங்கள ஊடகவியலாளர் ஒருவர் கடத்தப்பட்டிருக்கிறார்.