தமிழ் பேசும் மக்களின் தாயகம்

வடக்கு கிழக்கு உள்ளிட்ட இலங்கைத் தீவில் 72 நீதிபதிகள் இடமாற்றம்

மாகாண சபைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் நீதிச்சேவை ஆணைக்குழு உத்தரவு
பதிப்பு: 2021 மார்ச் 21 21:51
புலம்: யாழ்ப்பாணம், ஈழம்
புதுப்பிப்பு: மார்ச் 21 22:45
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lk
#government
தமிழர் தாயகம் வடக்கு கிழக்கு மாவட்டங்களில் பணியாற்றும் நீதிபதிகள் உட்பட இலங்கைத் தீவின் பல மாவட்டங்களில் பணியாற்றும் 72 நீதிபதிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இலங்கை நீதிச்சேவை ஆணைக்குழு குறித்த இடமாற்றங்களை மேற்கொண்டுள்ளது. யாழ்ப்பாணம், மன்னார் வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு , கல்முனை, சம்மாந்துறை, மூதூர், ஊர்காவல்துறை, சாவகச்சேரி ,பருத்தித்துறை ஆகிய தமிழ் பகுதிகளில் உள்ள மாவட்ட நீதிமன்றங்கள் மற்றும் நீதவான் நீதிமன்றங்களின் நீதிபதிகள் இவ்விதம் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இலங்கை ஒற்றையாட்சி அரசின் நீதிச் சேவை ஆணைக்குழுவின் 2021 ஆம் ஆண்டு வருடாந்த இடமாற்றத்திற்கமைய நீதிபதிகளின் இடமாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது.
 
இதனடிப்படையில் மன்னார் மாவட்ட நீதிபதி எம்.கணேசராஜா திருமலை மாவட்ட நீதிபதியாக இடமாற்றம் பெற்றுள்ளார். திருமலை மாவட்ட பதில் நீதிபதி பி.சிவக்குமார் மன்னார் மாவட்ட நீதிபதியாகவும் கிளிநொச்சி மாவட்ட நீதிபதியாக பணியாற்றிய ரி.சரவணராஜா முல்லைத்தீவு மாவட்ட நீதிபதியாகவும் இடமாற்றப்பட்டுள்ளனர். அத்துடன் முல்லைத்தீவு மாவட்ட நீதிபதியான எஸ்.லெனின்குமார் கிளிநொச்சி மாவட்ட நீதிபதியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

மேலும் வவுனியா மாவட்ட மேலதிக நீதிபதியான திருமதி எச்.எம்.தஸ்னீம் மூதூர் மாவட்ட நீதிபதியாகவும் இதுவரை மூதூர் நீதிபதியாகப் பணியாற்றிய எம்.எஸ்.எம். சம்சுதீன் கல்முனை நீதவானாகவும் இடம்மாற்றம் பெற்றுள்ளனர். மேலும் மாவட்ட நீதிபதி ஐ.பி.ரசாக் கல்முனையிலிருந்து திருமலை நீதவானாக இடமாற்றப்பட்டுள்ளார்.

இதேவேளை யாழ்ப்பாணம் மாவட்ட பதில் நீதிபதியான எஸ்.சதிஸ்தரன் யாழ் மாவட்ட நீதிபதியாகவும் பருத்தித்துறை பதில் நீதவான் கே.பொன்னு த்துரை பருத்தித்துறை நீதவானாகவும் இடமாற்றம் பெற்றுள்ளனர். மேலும் ஊர்காவல்துறை நீதிபதி ஏ.ஜீட்சன் சாவகச்சேரி நீதிபதியாகவும் சாவகச்சேரி நீதிபதி ஜே.கஜநிதிபாலன் ஊர்காவல்துறை நீதிபதியாகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் இதுவரை காலம் பருத்தித்துறை மாவட்ட பதில் நீதிபதியாக செயலாற்றிய திருமதி ஜீ. சயிலவன் பருத்தித்துறை மாவட்ட நீதிபதியாக மாற்றம் பெற்றுள்ளார்.

வவுனியா மாவட்ட நீதிபதி ஏ.எம்.எம் றியால் கல்முனை மாவட்ட நீதிபதியாகவும் சம்மாந்துறை நீதவான் எம்.ஐ.எம் றிஸ்வி வவுனியா மாவட்ட நீதிபதியாகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் ஆனமடுவ நீதிமன்ற நீதவான் திருமதி எம்.எப்.ஸ்சட். ஜெகான் வவுனியா மேலதிக மாவட்ட நீதிபதியாக இடமாற்றப்பட்டுள்ளார்.

ஏப்ரல் மாதம் 5ஆம் திகதியில் இருந்து அமுலாகும் வண்ணம் குறித்த இடமாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதெனத் தெரிவிக்கப்படுகிறது.

மாகாண சபைத் தேர்தல்கள் நடைபெறவுள்ள நிலையில் நீதிபதிகளின் இடமாற்ற உத்தரவு தொடர்பாகச் சந்தேகங்கள் ஏற்பட்டுள்ளன.