வடமாகாணத்தில் அதிகரிக்கும் கொவிட் 19

யாழ் நகரின் சில பகுதிகள் முடக்கம்

அரச அதிபர் அறிவிப்பு
பதிப்பு: 2021 மார்ச் 27 07:35
புலம்: யாழ்ப்பாணம், ஈழம்
புதுப்பிப்பு: மார்ச் 29 16:55
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lk
#tamil
தமிழர் பகுதியான வட மாகாணம் யாழ் மாவட்டத்தில் சென்ற வியாழக்கிழமை கொரோனா நோய்த் தொற்றுடன் 77 பேர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில் வெள்ளிக்கிழமை மேலும் 27 புதிய நோய்த் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஏ. கேதிஸ்வரன் கூர்மைச் செய்தித் தளத்திற்குத் தெரிவித்தார். மேலும் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கொரோனா தீவிரமாகப் பரவிவரும் நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையிலும் குறித்த நோய் பரவல் ஏற்பட்டு வைத்தியர்கள் உட்பட பலர் கொரோனா நோய்த் தொற்றினால் பீடிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரப் பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.
 
யாழ் போதனா வைத்தியசாலையில் பணியாற்றும் இரு வைத்தியர்கள் மூன்று தாதியர்கள் நான்கு சிற்றூழியர்கள் மற்றும் இரண்டு மருத்துவப் பயிற்சி மாணவர்கள் ஒரு பயிற்சித் தாதி மற்றும் சுத்திகரிப்புப் பணியாளர் என போதனா வைத்தியசாலை யின் 13 பணியாளர்களுக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.

அத்துடன் கொரோனா அறிகுறியுடன் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த பொது மக்களில் அறுவருக்கும் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மேலும் தெரிவித்தார். மேலும் யாழ் சிறைச்சாலையின் கைதிகள் இருவர் திருநெல்வேலி சந்தை வியாபாரிகள் இருவர் மற்றும் காரைநகரைச் சேர்ந்த மேலும் நால்வர் என மொத்தம் 27 கொரோனா தொற்றாளர்கள் யாழ் மாவட்டத்தில் நேற்று வெள்ளிக்கிழமை அடையாளம் காணப்பட்டுள்ளதாக வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஏ.கேதிஸ்வரன் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை யாழ் போதனா வைத்தியசாலையின் வைத்தியர்கள் தாதியர் உட்பட பணியாளர்கள் பலர் கொவிட்-19 க்கு இலக்காகிய நிலையில் போதனா வைத்தியசாலையில் கொவிட் பரவலைத் தடுப்பதற்கான தீவிர சுகாதார நடைமுறைகள் நேற்று வெள்ளி இரவிலிருந்து அங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளர்களை மறு அறிவி த்தல் வரை பார்வையிடுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் போதனா வைத்தியசாலை வளாகத்திற்குள் வெளியார் பிரவேசிப்பதற்கும் நேற்று முதல் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் வேறு பல இறுக்கமான நடைமுறைகளும் நேற்று முதல் அங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்

இதேவேளை யாழ் மாவட்டம் எங்கும் கொரோனா நோய் தீவிரமாக பரவி வரும் நிலையில் அதனைக் கட்டுப்படுத்த முற்பாதுகாப்பு நடவடிக்கைகள் மிகத் தீவிரமாக முன்னெடுக்கப்படுவதாகவும் யாழ் நகரின் பஸார் பகுதியில் உள்ள ஐந்து முக்கிய பிரதான வீதிகள் மக்கள் நடமாட்டத்திற்கு அனுமதிக்கப்படாது முடக்கப்பட்டுள்ளதுடன் அப்பகுதிகளில் உள்ள அனைத்து வியாபார நிலையங்களும் மறு அறிவித்தல்வரை மூடப்பட்டுள்ளதெனவும் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் கூர்மைச் செய்தித் தளத்திற்கு தெரிவித்தார்.

பொது மக்களுக்கு அவர்களின் வீடுகளில் இருந்து வெளியேற வேண்டாம் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார அதிகாரிகளின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு யாழ் மாவட்ட பொது மக்கள் தமது ஒத்துழைப்பை வழங்க வேண்டும் எனவும் அரச அதிபர் கூர்மைக்கு தெரிவித்தார்.

யாழ் நகரில் கொரோனா தொற்றின் தீவிரம் அதிகரித்து வரும் நிலையில் யாழ் பிரதான பஸ் நிலையத்தில் இருந்து மேற்கொள்ளப்பட்ட போக்குவரத்துச் செயற்பாடுகள் அனைத்தும் கடந்த வெள்ளி முதல் முடக்கப்பட்டுள்ளதுடன் யாழ் கோட்டை பகுதியில் இருந்து பஸ் சேவைகள் நடத்தப்படுவதாகவும் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் மகேசன் கூர்மைச் செய்தித் தளத்திற்கு சற்று முன்னர் தெரிவித்தார்.

யாழ்ப்பாண பகுதியில் கடந்த வியாழன் வெள்ளி ஆகிய இரண்டு நாட்களிலும் என்றுமில்லாதவாறு கொரோனா நோய்த் தொற்றுடன் நூற்றுக்கும் அதிகமானோர் இனங்காணப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் அங்கு கொரோனா நோய் மேலும் பரவாவண்ணம் உடன் நடவடிக்கை எடுக்கும் வகையில் கடந்த வியாழன் மாலை யாழ்ப்பாணத்தில் கொவிட்-19 தடுப்புச் செயலணி அவசரமாக ஒன்று கூடி பல முக்கிய தீர்மானங்களை எடுத்துள்ளதாகவும் யாழ் அரச அதிபர் கூர்மைக்கு தெரிவித்தார்

யாழ்ப்பாணத்தில் கொவிட் தொற்று முன்னொருபோதும் இல்லாத நிலையில் வேகமாக பரவிவருவதினால் அதனைக் கட்டுப்படுத்தும் பணிகளில் இலங்கை இராணுவமும் யாழ் நகரில் களமிறக்கப்பட்டுள்ளதாக இணையத்தளங்களில் செய்திகள் வெளிவந்தமை தொடர்பில் அரசாங்க அதிபரிடம் கேள்வி எழுப்பிய வேளை அதனை மறுத்த அரச அதிபர் இதுவரை கொவிட்-19 தடுப்பு நடவடிக்கைகளில் சுகாதார அதிகாரிகளுடன் இலங்கைப் பொலிஸாரே ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் கொவிட் பரவலைக் கட்டுப்படுத்த இராணுவத்தினர் தேவை என அதிகாரிகள் கருதினால் இராணுவம் அழைக்கப்படலாம் என அரசாங்க அதிபர் க.மகேசன் மேலும் தெரிவித்தார்.

மேலும் கொரோனா நோய்த் தடுப்புப் பணிகளைச் சுகாதார அதிகாரி களுடன் இராணுவத்தினரையும் ஈடுபடுத்துவது தொடர்பான முடிவுகளை அரசாங்க அதிபரான தான் மேற்கொள்வதில்லை எனவும் அது யாழ் மாவட்ட கொவிட் - 19 தடுப்பு செயலணியின் பணி எனவும் அரசாங்க அதிபர் க.மகேசன் கூர்மைச் செய்தித் தளத்திற்கு மேலும் தெரிவித்தார்.