நிரந்தர நியமனம் வழங்குமாறு கோரி வடமாகாணத்தில் பணிபுரிந்த

சுகாதாரத் தொண்டர்கள் 30 நாட்களாகத் தொடர் போராட்டம்

ஆளுநரோ, அதிகாரிகளோ இதுவரை பதில் இல்லை
பதிப்பு: 2021 மார்ச் 30 09:07
புலம்: யாழ்ப்பாணம், ஈழம்
புதுப்பிப்பு: மார்ச் 31 01:00
main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
வட மாகாணம் யாழ்ப்பாணத்தில் உள்ள மாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக கடந்த 30 நாட்களாக சுகாதார தொண்டர்கள் தமக்கு நிரந்தர நியமனம் வழங்குமாறு கோரி போராட்டம் ஒன்றை மேற்கொண்டு வருகின்றனர். எனினும் குறித்த போராட்டம் தொடர்பாக வடக்கு மாகாண ஆளுநரோ அல்லது மாகாண சுகாதார அமைச்சு சார்ந்த உயர் அதிகாரிகளோ உரிய நடவடிக்கைகள் எதுவும் எடுக்காததினால், சுகாதாரத் தொண்டர்கள் தொடர்ச்சியாக தமது போராட்டத்தைப் பல்வேறு கஸ்டங்களுக்கும் அசௌகரியங்களுக்கும் மத்தியில் முன்னெடுத்து வருகின்றனர்.
 
இந்தப் போராட்டத்தில் 40 க்கும் மேற்பட்ட பெண் சுகாதாரத் தொண்டர்களும் இணைந்துள்ளதாக யாழ் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன. மேலும் போராட்டத்தின் ஆரம்ப நாளில் இருந்து இந்தச் செய்தி எழுதும்வரை குறித்த பெண் சுகாதார தொண்டர்களில் ஐவர் திடீர் சுகயீனம் அடைந்து யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் கூர்மைச் செய்தித் தளத்திற்குத் தெரிவித்தன.

மன்னார், முல்லைத்தீவு, வவுனியா, கிளிநொச்சி ஆகிய தூர மாவட்டங்களைச் சேர்ந்த ஆண் பெண் சுகாதாரத் தொண்டர்கள் பலரும் 3 வாரங்களுக்கு மேலாக தமது குடும்பங்களைப் பிரிந்து யாழ் நகரில் தமது சாத்வீகப் போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

குறித்த போராட்டதை மேற்கொள்பவர்களில் சிறு குழந்தைகளின் தாய்மார்கள், தமது குடும்பங்களை கூலித்தொழில் மூலம் பராமரித்தவர்கள், விதவைகள் மற்றும் கணவனினால் கைவிடப்பட்ட அதிக குழந்தைகளை கொண்ட பெண்கள் மற்றும் அங்கவீனம் அடைந்தவர்கள் என அதிக எண்ணிக்கையானவர்கள் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இவர்கள் இப்போராட்டத்திற்காக தமது ஏனைய செயல்பாடுகள் அனைத்தையும் கைவிட்டு தமது குடும்ப உறவுகளையும் பிரிந்து சுமார் 28 நாட்களாக இத் தொடர் போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் இவர்களின் குடும்பங்கள் பலர் பசி பட்டினியுடன் நாட்களைக் கடத்துவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

இந்தச் சூழ்நிலையில் இவர்கள் தொடர்பில் வட மாகாண ஆளுநரோ வேறு தொடர்புடைய அதிகாரிகளோ ஆளும்தரப்பு அரசியல்வாதிகளோ இதுவரை எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளாத நிலையில் வடபுல தமிழ் மக்கள் இது தொடர்பில் தமது கடும் விசனத்தை தெரிவித்துள்ளனர்.

மேலும் வட மாகாண ஆளுநர் தனது அலுவலகத்திற்கு வரும், போகும் சமயங்களில் எல்லாம் சுகாதாரத் தொண்டர்களின் இப்போராட்டத்தை அவதானித்துச் செல்வதாகவும் எனினும் தமக்கு உரிய தீர்வு கிடைக்கப்பெறவில்லை எனவும் மேற்படி சுகாதாரத் தொண்டர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

யாழ் நகரில் உள்ள ஆளுநர் அலுவலகத்திற்கு முன்னால் கடந்த 28 நாட்களாக உரிய உணவோ உறக்கமோ இன்றி இயற்கைத் தேவைகளைக் கூட நிறைவேற்ற முடியாத அவல நிலையில் வெயிலிலும் மழையிலும் தமக்கு நீதி கிடைக்கவேண்டும் எனப் போராடி வரும் இவர்களை வட மாகாண ஆளுநரோ உயர் அதிகாரிகளோ மற்றும் யாழ்பாணத்தில் வீட்டுக்கு வீடு குடிசைக் கைத்தொழில் போன்று அரசியல் கட்சிகளை நடத்தி வரும் தமிழ் அரசியல்வாதிகளோ நாட்கணக்கில் கண்டுகொள்ளாமை வட புல மனித உரிமைச் செயற்பாட்டு ஆர்வலர்களுக்கு கடும் சீற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தச் சூழ்நிலையில் சுகாதார தொண்டர்களின் கோரிக்கையை மனிதாபிமான ரீதியில் அணுகி இவர்களுக்கான நியமனத்தை உடன் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு வடபுல மனித உரிமை ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த நிலையில் கூர்மைச் செய்தித் தளம் சுகாதாரத் தொண்டர்களுடன் அவர்களின் போராட்டம் குறித்துக் கருத்து கேட்டபோது தமக்கு உரிய நீதி கிடைக்கும் வரை தாம் போரட்டத்தைக் கைவிடப்போவதில்லை எனவும் தமது நியமனம் தொடர்பில் இலங்கை ஐனாதிபதியிடம் இருந்து தமக்கு உறுதிமொழி வழங்கப்படல் வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.

மேலும் அண்மையில் யாழ் மாவட்ட செயலகத்திற்கு வருகை தந்த இலங்கை விவசாய அமைச்சர் மகிந்தான அளுத்கமக்கேயையும் யாழ் மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் ராமநாதனையும் தாம் சந்தித்து தமது சுகாதார உதவியாளர் நியமனம் தொடர்பில் பிரஸ்தாபித்ததாகவும் இச்சமயம் இது தொடர்பில் தாம் ஜனாதிபதியின் நேரடிக் கவனத்திற்கு கொண்டுவந்து சுகாதார தொண்டர்களின் பிரதிநிதிகள் சிலரை கொழும்பில் ஜனாதிபதியை நேரடியாகச் சந்திப்பதற்கு ஒழுங்குகள் மேற்கொள்வதாக அமைச்சர்கள் உறுதியளித்ததாகவும் சுகாதார தொண்டர்கள் கூர்மைக்கு மேலும் தெரிவித்தனர்.

அத்துடன் வடக்கு மாகாண சபையினால் எமக்கு வழங்கப்பட்ட நியமனங்கள் காரணமின்றி சொற்ப தினங்களில் ரத்துச் செய்யப்பட்ட நிலையில் சுமார் ஒன்றரை வருடங்கள் கழிந்தும் அது மீண்டும் எமக்கு வழங்கப்பட நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படாத நிலையிலேயே நாம் இப்போராட்டத்தை முன்னெடுப்பதுடன் ஆளுநரும் ஜனாதிபதியும் எங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு உரிய தீர்வைத் தருவார்கள் எனத் தாம் நம்புவதாக வட மாகாணச் சுகாதாரத் தொண்டர்கள் இன்று கூர்மை செய்தித் தளத்திற்கு தெரிவித்தனர்.

அவர்கள் கூர்மைக்கு மேலும் தகவல் தெரிவித்ததாவது வட மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலும் உள்ள பல வைத்தியசாலைகளிலும் மாவட்ட சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையிலும் சுமார் 15 வருடங்களுக்கு மேலாக நாம் சுகாதாரத் தொண்டர்களாகப் பணியாற்றினோம்.

மேலும் வட மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 900 பேர்கள் இவ்விதம் சுகாதாரத் தொண்டர்களாக பணியாற்றினோம். இந்த நிலையில் வட மாகாண சுகாதார அமைச்சினால் சுகாதார உதவியாளர் பதவிக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தது.

இதன் அடிப்படையில் நாம் குறித்த பதவிக்கு விண்ணப்பித்திருந்தோம். பின்னர் நாம் சுகாதார உதவியாளர் பதவிக்கு நிரந்தர நியமனம் செய்வதற்கு வட மாகாண சுகாதார அமைச்சினால் நடத்தப்பட்ட நேர்முகப் தேர்வுக்கும் தோற்றினோம்.

இதன் அடிப்படையில் வட மாகாணத்தில் நிலவும் 454 சுகாதார உதவியாளர் ஆளனியில் 388 பேர்களுக்கான சுகாதார உதவியாளர் பதவிக்கான நியமனங்கள் வட மாகாண சுகாதார அமைச்சினால் மேற்கொள்ளப்பட்டது. இதன் அடிப்படையில் கடந்த 2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம்17 மற்றும் 18 ஆம் திகதிகளில் எமக்கான நியமனக் கடிதங்களும் கிடைக்கப் பெற்றது.

மேலும் நியமனம் கிடைக்கப் பெற்றவர்கள் 2019 நவம்பர் 25 ஆம் திகதி வட மாகாண மாவட்டங்களில் உள்ள மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தில் கடமைகளைப் பொறுப்பெடுத்தல் வேண்டும் என நியமனக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்து. இதற்கமைய நியமனம் கிடைக்கப்பெற்ற நாம் மாவட்டங்கள் தோறும் உள்ள சுகாதார சேவைகள் பணிப்பாளர் காரியாலயங்களில் எமது கடமைகளைப் பொறுப்பெடுத்தோம்.

பின்னர் எமக்கு நியமனம் கிடைக்கப்பெற்ற சில தினங்களில் எமது நியமனங்கள் அனைத்தும் அப்போதைய வட மாகாண ஆளுநரின் உத்தரவின் பேரில் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டது. இந்த வகையில் சுமார் 15 வருடங்களுக்கு மேலாக சுகாதாரத் தொண்டர்களாக பணியாற்றிய நாங்கள் ஏமாற்றம் அடைந்துள்ளதுடன் எமக்கு பெரும் அநீதியும் இழைக்கப்பட்டுள்ளது.

ஆகவே இடைநிறுத்தப்பட்ட நியமனங்கள் எமக்கு மீண்டும் கிடைக்கும் வரை நாம் எமது சாத்வீகப் போராட்டத்தை வட மாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்பாக தொடர்ச்சியாக முன்னெடுப்போம் என வட மாகாண சுகாதாரத் தொண்டர்கள் கூர்மைச் செய்தித் தளத்திற்கு மேலும் தெரிவித்தனர்.