வடமாகாணம்

மன்னார் இளைஞர்கள் இருவர் இராமேஸ்வரத்தில் கைது

அடம்பன் பிரதேசத்தில் இலங்கைப் பொலிஸார் விசாரணை
பதிப்பு: 2021 ஏப். 04 23:01
புலம்: மன்னார், ஈழம்
புதுப்பிப்பு: ஏப். 05 00:16
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lka
#tamil
இலங்கையில் இருந்து பாக்கு நீரிணையூடாக இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை தனுஷ்கோடி அரிச்சல்முனைக் கரையைச் சென்றடைந்த இரண்டு தமிழ் இளைஞர்களை இராமேஸ்வரம் சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ள நிலையில் இலங்கைப் பொலிஸாரும் தேசிய புலனாய்வு பிரிவினரும் மன்னார் மாவட்டம் மாந்தை மேற்கின் அடம்பன் பகுதியில் குறித்த இளைஞர்கள் தொடர்பில் விசாரணைகளைத் தீவிரமாக முன்னெடுத்துள்ளதாக அடம்பன் பொலிஸ் வட்டாரங்கள் கூர்மைச் செய்தித் தளத்திற்குத் தெரிவித்தன.
 
மன்னார் மாவட்டத்தின் மாந்தை மேற்கு பிரதேச செயலகப் பிரிவில் அடம்பன் பகுதி எங்கும் குறித்த இளைஞர்களின் குடும்பத்தினரைக் கண்டுபிடிக்க இலங்கை பொலிஸாரும் புலனாய்வுப்பிரிவினரும் சல்லடைத் தேடுதல்களை இன்று மேற்கொண்டதாகவும் எனினும் இளைஞர்களின் விபரங்களையோ அல்லது அவர்கள் குடும்பத்தினர் தொடர்பான விபரங்களையோ இலங்கை பொலிஸாரினாலோ தேசிய புலனாய்வுத் துறையினராலோ கண்டுபிடிக்க இயலவில்லை எனும் தகவல்கள் கூர்மை செய்தித் தளத்திற்கு கிடைத்துள்ளது.

இந்தியாவின் தமிழ்நாட்டின் தனுஷ்கோடி அரிச்சல்முனை கரையில் அனாமதேய கண்ணாடியிழை இயந்திரப் படகொன்றில் வருகை தந்த இலங்கை இளைஞர்கள் இருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் அப்பகுதியில் நடமாடி வருவதாக இராமேஸ்வரம் சுங்கத்துறையினருக்கு கிடைத்த தகவல்களுக்கு அமைய அங்கு சென்ற இந்திய சுங்க அதிகாரிகள் குறித்த இரண்டு இளைஞர்களையும் இன்று காலை கைது செய்தனர்.

பின்னர் கைதான இலங்கை இளைஞர்கள் இருவரையும் சுங்க அதிகாரிகள் இராமேஸ்வரம் கடலோரக் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து தீவிர விசாரணைகளை முன்னெடுத்தனர். குறித்த விசாரணையில் இளைஞர்கள் இருவரும் தாம் இலங்கையின் வட மாகாணம் மன்னார் மாவட்டத்தின் மாந்தை மேற்குப் பகுதியில் அடம்பனைச் சேர்ந்தவர்கள் எனவும் இவர்களில் ஒருவரின் பெயர் பிரதாப் எனவும் மற்றையவர் பெயர் நாதேஸ் எனவும் தெரிவித்துள்ளனர்.

தமிழ் நாட்டின் திண்டுக்கல் மாவட்டத்தின் பழனியைச் சேர்ந்த ஒருவர் தொழில் தருவதாக கூறி இலங்கையிலிருந்து தமிழகம் வருமாறு அழைப்பு விடுத்தமைக்கு அமைவாகவே தாம் படகு மூலம் தமிழகம் வந்ததாக விசாரணையின் பொழுது இரண்டு இளைஞர்களும் இந்திய பொலிஸ் மற்றும் சுங்க அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளனர்.

இலங்கை இளைஞர்கள் இருவரையும் இராமேஸ்வரம் கடலோரப் பொலிஸார் சுங்கத்துறை அதிகாரிகளிடமிருந்து பொறுப்பேற்று தொடர்ச்சியான விசாரணைகளை நடத்தி வரும் நிலையில் சட்டவிரோதமாக இந்தியா எல்லைக்குள் நுழைந்தமைக்காக இவர்கள் இருவருக்கும் எதிராக இராமேஸ்வரம் பொலிஸார் வழக்கு தாக்கல் செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கையில் இருந்து கடல் வழியாக தமிழகத்திற்குள் நுழைந்த மேற்படி இரண்டு தமிழ் இளைஞர்களையும் தமிழக க்யு பிரிவுப் பொலிஸாரும் இந்திய மத்திய புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளும் விசாரணை செய்துவருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில் இலங்கை இளைஞர்கள் இருவர் கைதான விடயம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்திய ஊடகங்களும் இச் செய்தியை கைதான இளைஞர்களின் படங்களுடன் வெளியிட்டுள்ளன.

இந்த சூழ்நிலையில் இத்தகவலை அறிந்த இலங்கை பொலிஸாரும் தேசிய புலனாய்வு பிரிவினரும் மன்னார் மாவட்டத்தில் அடம்பன் பகுதியில் குறித்த இளைஞர்கள் தொடர்பில் இன்று மேற்கொண்ட விசாரணைகள் பலன் அளிக்காத நிலையில் அவர்கள் தமது நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில் மாந்தை மேற்கு பிரதேச செயலக பிரிவில் சுமார் 30 இற்கும் அதிக கிராமசேவையாளர் பிரிவுகள் உள்ள நிலையில் தமிழகத்தில் கைதான குறித்த இரண்டு தமிழ் இளைஞர்களின் புகைப்படங்களுடன் அவர்களின் குடும்பத்தினரை தேடி இலங்கை பொலிஸாரும் தேசிய புலனாய்வு பிரிவினரும் மேற்படி மாந்தை மேற்கு கிராமங்களுக்குள் களம் இறங்கியுள்ளதாகக் கூர்மைச் செய்தித் தளத்திற்குத் தகவல் கிடைத்துள்ளது.

குறித்த இளைஞர்கள் இலங்கையில் ஏதெனும் குற்றச் செயல்களில் ஈடுபட்டு இந்தியாவிற்கு தப்பியோடியவர்களா என்ற கோணத்திலும் இலங்கை பொலிஸார் புலன் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.