ஈழத் தமிழர்களின்

பாரம்பரியக் காணிகளை இலங்கை இராணுவம் தொடர்ந்து அபகரிக்க முடியாது- சிவாஜிலிங்கம்

இன அழிப்புச் செயற்பாடு தொடருவதாகவும் குற்றச்சாட்டு
பதிப்பு: 2021 ஏப். 07 15:52
புலம்: யாழ்ப்பாணம், ஈழம்
புதுப்பிப்பு: ஏப். 08 01:08
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lka
#tamil
#genocide
யாழ்ப்பாணம் மிருசுவில் எழுதுமட்டுவாழ் பகுதியில் இலங்கை இராணுவம் நிலைகொண்டுள்ள தனியார் காணியை நிரந்தரமாகவே சூறையாடும் நோக்கில் கடந்த திங்கள் மேற்கொள்ளப்பட்ட நில அளவை அப்பகுதி மக்களின் எதிர்ப்பு போராட்டத்தினால் கைவிடப்பட்டதாகவும் மீண்டும் அப்பகுதியை நில அளவை செய்ய இராணுவம் முற்பட்டால் மக்கள் அதற்கும் தமது எதிர்ப்பைத் தெரிவிப்பர் என யாழ்ப்பாணம் மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கூர்மைச் செய்தித் தளத்திற்குத் தெரிவித்தார். தமிழர்களின் பாரம்பரியக் காணிளை இராணுவம் அபகரிக்க அனுமதிக்க முடியாதென்றும் அவர் கூறினார்.
 
இலங்கை அரசாங்கம் தனது படையினரின் இருப்பிற்காக தமிழர் தாயகத்தில் பொது மக்களின் காணிகளை சுவீகரித்து நில ஆக்கிரமிப்புகளை மேற்கொண்டால் பொது மக்கள் அதற்கு ஒருபோதும் அனுமதியளிக்கமாட்டார்கள் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் எழுதுமட்டுவாழ் பகுதியில் உள்ள தனியாருக்குச் சொந்தமான காணியில் கடந்த 12 வருடங்களாக இலங்கை இராணுவம் நிலைகொண்டுள்ளது. இந்த நிலையில் குறித்த காணியை சட்டபூர்வமாக சுவீகரித்து அங்கு நிரந்தரப் படைத்தளத்தினை அமைக்கும் நடவடிக்கைகளை இலங்கை இராணுவம் மேற்கொண்டு வருகிறது.

கடந்த 05 ஆம் திகதி திங்களன்று இலங்கை இராணுவமும் இலங்கை நில அளவைத் திணைக்களமும் குறித்த காணியை நில அளவை செய்வதற்கு முற்பட்டவேளையே காணியின் உரிமையாளர்களும் அப்பகுதி மக்களும் அங்கு தமது எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டதாக எம்.கே.சிவாஜிலிங்கம் கூர்மைக்கு மேலும் தெரிவித்தார்.

மேலும் குறித்த காணியை நில அளவை செய்வதற்கு அங்கு பிரசன்னம் ஆகிய நில அளவைத் திணைக்கள அத்தியட்சகர், பொது மக்களின் எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு முகம் கொடுக்கமுடியாது, இராணுவ முகாமிற்குள் சென்ற நிலையில், அவரை அங்கிருந்து வெளியேறுமாறு கோரி, பொது மக்கள் யாழ்ப்பாணம்-கண்டி ஏ -9 நெடுஞ்சாலையை மறித்து வீதி மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், சுமார் 45 நிமிடங்கள் குறித்த நெடுஞ்சாலையில் போக்குவரத்து செயற்பாடுகள் ஸ்தம்பிதம் அடைந்ததாகவும், பின்னர் குறித்த அத்தியட்சகர் இராணுவ முகாமில் இருந்து வெளியேறியதாகவும் எம்.கே. சிவாஜிலிங்கம் மேலும் குறிப்பிட்டார்.

யாழ்ப்பாணம் ஏ-9 பிரதான நெடுஞ்சாலை அருகில் அரியாலை எழுதுமட்டுவாழ் பகுதியில் ஆசைப்பிள்ளை ஏற்றம் எனும்மிடத்தில் உள்ள தனியார் காணியில் இலங்கை இராணுவத்தின் 52 வது படைப்பிரிவின் தலைமையகம் அமைந்துள்ளது. மேலும் யாழ்ப்பாணத்தின் வடமராட்சி மற்றும் தென்மராட்சி பகுதிகள் அனைத்தும் குறித்த படைப்பிரிவின் கட்டுபாட்டிலேயே உள்ளது.

சாவகச்சேரி பகுதியைச் சேர்ந்த வயோதிப தமிழ் பெண்ணொருவருக்கு சொந்தமான 40 ஏக்கர் விஸ்தீரணம் கொண்ட மேற்படி குடிநிலக்காணியில் கடந்த 2009 ஆம் ஆண்டு தொடக்கம் இலங்கை இராணுவத்தினர் எவ்வித அனுமதியுமின்றி நிலைகொண்டுள்ளனர்.

கடந்த யுத்தத்தினால் பல இடப்பெயர்வுகளையும் இழப்புகளையும் எதிர்நோக்கிய காணி உரிமையாளரான குறித்த வயோதிபப் பெண், தனது ஐந்து பெண் பிள்ளைகளுக்கும் மேற்படி இலங்கை இராணுவம் நிலைகொண்டுள்ள தனக்கு சொந்தமான காணியைப் பகிர்ந்தளித்துள்ள நிலையில், இராணுவம் அங்கிருந்து வெளியேறாது தொடர்ந்தும் நிலைகொண்டுள்ளதாக சிவாஜிலிங்கம் மேலும் குறிப்பிட்டார்.

இவ்வயோதிபப் பெண்ணுக்கு சொந்தமான குறித்த காணியில் நீண்ட காலமாக இலங்கை இராணுவத்தினரின் 54 வது படைப்பிரிவு நிலைகொண்டுள்ள நிலையில், அதனை சட்டரீதியாகச் சுவீகரித்து நிலையான இராணுவத் தளமொன்றினை அமைக்கும் திட்டத்தின் ஆரம்ப கட்டச் செயற்பாடே கடந்த திங்கள் மேற்கொள்ளப்பட்ட நில அளவைச் செயற்பாடு என சிவாஜி மேலும் தெரிவித்தார்.

இந்த நிலையிலேயே குறித்த நில அளவைக்குப் பொது மக்களும் காணி உரிமையாளரான வயோதிபப் பெண்ணும் அவர் குடும்பத்தினரும், அரசியல் பிரமுகர்களும் இணைந்து எதிர்ப்பு போராட்டம் நடத்தியதாகவும், இதனால் குறித்த நில அளவைச் செயற்பாடுகள் கைவிடப்பட்டதெனவும் கூர்மைச் செய்தித் தளத்திற்கு எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

காணிகளை அபகரிப்பது இன அழிப்பு எனவும் அவர் மேலும் கூறினார்.