கனடாவுக்கு அனுப்புவதாகக் கூறி

ஏமாற்றப்பட்ட இளைஞர், யுவதிகள் சிலாவத்துறையில் கைது

உதவிபுரிந்த நால்வர் உட்பட 19 பேர் கைதாகிப் பிணையில் விடுதலை
பதிப்பு: 2021 ஏப். 08 17:02
புலம்: மன்னார், ஈழம்
புதுப்பிப்பு: ஏப். 09 02:37
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lka
#tamil
தமிழர் தாயகத்தின் வட மாகாணம் மன்னார் மாவட்டம் சிலாவத்துறைப் பகுதியில் சட்டவிரோதமாகக் கனடா நாட்டிற்கு செல்ல முற்பட்டார்கள் எனும் சந்தேகத்தில் 2 முஸ்லிம் யுவதிகள் 3 தமிழ் யுவதிகள் மற்றும் சிறுமியொருவர் அடங்கலாக 15 பேரையும் அவர்களுக்கு உதவி புரிந்த 4 முற்சக்கர வண்டி சாரதிகளையும் இலங்கைப் பொலிஸார் கைது செய்து மன்னார் மாவட்ட நீதிமன்றில் முன்னிலைப்படுத்தினர். மாவட்ட நீதவான் பி. சிவக்குமார் சந்தேகநபர்கள் அனைவரையும் 50 ஆயிரம் ரூபா பெறுமதியான சரீரப்பிணையில் செல்ல உத்தரவிட்டார்.
 
மன்னார், யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, வவுனியா, மற்றும் புத்தளம் மாவட்டங்களைச் சேர்ந்த தமிழ் முஸ்லிம் இளைஞர், யுவதிகளே இவ்விதம் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இது பற்றி மேலும் தெரியவருவதாவது கனடா செல்லும் நோக்கில் முகவர் ஒருவரின் உதவியை நாடிய 15 நபர்கள் தமக்கு குறித்த முகவர் கூறியபடி படகு மூலம் இந்தியா சென்று அங்கிருந்து கனடா செல்வதற்காகக் கொழும்பு மற்றும் நீர்கொழும்பின் பல பகுதிகளிலும் முகவரினால் தங்கவைக்கப்பட்டிருந்தனர்.

பாதுகாப்புக் காரணங்களுக்காகக் குறித்த முகவர் இவர்களில் அனைவரையும் வெவ்வேறு இடங்களில் தங்கவைத்ததுடன் குறித்த 15 பேருடனும் தினமும் தொலைபேசி தொடர்புகளையும் மேற்கொண்டிருந்தார். குறித்த 15 நபர்களும் முகவர் ஏற்பாடு செய்த இடங்களில் மிகவும் இரகசியமாகத் தங்கியிருந்து தமது பயண நாளுக்காகக் காத்திருந்துள்ளனர்.

சுமார் ஒரு மாதம் கழிந்த நிலையில் குறித்த முகவர், கனடா பயணத்தின் முதல் கட்டமாகப் படகு மூலம் இந்தியா செல்வதற்கான ஏற்பாடுகள் யாவும் பூர்த்தி எனவும் அதற்காக அனைவரையும் பஸ் மூலம் வெவ்வேறு நேரங்களில் மன்னார் முருங்கன் நகருக்குப் பயணிக்குமாறும் அறிவுறுத்தியுள்ளார்.

முருங்கன் நகரை அடைந்தவுடன் அடுத்து எங்கு செல்ல வேண்டும் என்பது தொடர்பாக தான் விபரம் தெரிவிக்கும் வரை முருங்கன் நகரில் காத்திருக்குமாறு முகவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் கொழும்பிலும் நீர்கொழும்பிலும் கனடா செல்லும் நோக்கில் தங்கியிருந்தவர்கள் வெவ்வேறு நேரங்களில் முருங்கன் நகரை வந்தடைந்து முகவரின் அழைப்புக்காகக் காத்திருந்துள்ளனர்

எனினும் முகவரிடமிருந்து அழைப்புக்கள் எதுவும் வராத நிலையில் நீண்ட நேரமாக முருங்கன் பஸ் நிலையத்தில் காத்திருந்தவர்களுக்கிடையில் அறிமுகம் ஏற்பட்டு அனைவரும் குறித்த முகவர் ஊடாகத் தம்மை போன்று கனடா செல்பவர்களே யாவரும் என்பதனை அறிந்து கொண்டனர்.

இத் தருணத்தில் இவர்கள் அனைவருடனும் தொலைபேசியில் தனித்தனியாகத் தொடர்பு கொண்ட முகவர் இவர்களை முசலிப் பிரதேச செயலக பிரிவில் காயாக்குழிக்கு செல்லுமாறும் அதன் பின்னர் தான் மீண்டும் தொடர்பு கொண்டு அடுத்து மேற்கொள்ளவேண்டியதைக் கூறுவதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் முருங்கன் பஸ் நிலையத்தில் இருந்த கனடா பயணிகள் புதன் மாலை அங்கிருந்த நான்கு முச்சக்கர வண்டிகளை வாடகைக்கு அமர்த்தி முசலி காயாக்குழி நோக்கிச் சென்றுள்ளனர்.

இந்த நிலையில் வீதிச் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த சிலாவத்துறை பொலிஸார் குறித்த 4 முச்சக்கர வண்டியையும் நிறுத்தி விசாரணை செய்த சமயம் அதில் இருந்தவர்கள் ஒன்றுக்கொன்று முரண்பாடான தகவலை வழங்கிய நிலையில் அவர்களையும் அவர்களுக்கு உதவி புரிந்ததாக கூறி முருங்கன் பரிகாரிகண்டல் பகுதியைச் சேர்ந்த முச்சக்கர வண்டிச் சாரதிகளான நான்கு தமிழ் இளைஞர்களையும் கைது செய்து மேலதிக விசாரணைகளுக்காக சிலாவத்துறை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்தனர்.

இதையடுத்து விசாரணைகளின் பின்னர் குறித்த 19 சந்தேக நபர்களையும் சிலாவத்துறைப் பொலிஸார் புதன் மாலை மன்னார் நீதிமன்றில் ஆஜர் செய்தவேளை சந்தேக நபர்கள் அனைவரையும் தலா 50 ஆயிரம் ரூபா பெறுமதியான சரீரப் பிணையில் மன்னார் மாவட்ட நீதவான் பி.விஜயக்குமார் விடுதலை செய்தார். மேலும் 19 சந்தேக நபர்களையும் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் எட்டாம் திகதி மன்னார் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு நீதவான் உத்தரவிட்டார்.