இலங்கை ஒற்றையாட்சி அரசின்

யாழ் நீதிமன்றத்தில் மணிவண்ணன் பிணையில் விடுதலை

தனது பணி நாளையே தொடரும் என்கிறார்
பதிப்பு: 2021 ஏப். 09 22:47
புலம்: யாழ்ப்பாணம், ஈழம்
புதுப்பிப்பு: ஏப். 10 12:10
main photo main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீளுருவாக்க முற்பட்டமை தொடர்பான குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட யாழ். மாநகர முதல்வர், சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் இன்று வெள்ளிக்கிழமை இரவு யாழ் நீதிமன்றத்தில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். இரண்டு இலட்சம் ரூபா பெறுமதியான சரீரப் பிணையிலேயே மணிவண்ணன் விடுதலை செய்யப்பட்டுள்ளார். யாழ் நகரில் மக்கள் பணிகளில் ஈடுபடுவதற்காக காவல் படை ஒன்றை உருவாக்கி அவர்களுக்கு புலிகளின் காவல்துறையினர் பயன்படுத்திய நீல நிற உடையை வழங்கினார் எனக் குற்றம் சுமத்தப்பட்டு இன்று அதிகாலை இரண்டு மணியளவில் யாழ் பொலிஸாரால் அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.
 
மணிவண்ணன் உட்பட யாழ்ப்பாணம் மாநகர ஆணையாளர் மற்றும் மாநகர சபை உறுப்பினர் வரதராஜன் பார்த்திபன் ஆகியோரிடம் தனித்தனியாக நேற்று வியாழக்கிழமை இரவு வாக்குமூலம் பெறப்பட்டிருந்தது.

இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் முதல்வர் மணிவண்ணன் யாழ்ப்பாணம் தலைமையகப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் பிரசாத் பெர்னாண்டோவினால் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டிருந்தார்.

அதனையடுத்து .மணிவண்ணன் வவுனியா பயங்கரவாத விசாரணைப் பிரிவினரிடம் இன்று முற்பகல் ஒப்படைக்கப்பட்டார். சுமார் பத்து மணித்தியால விசாரணையின் பின்னர் இன்றிரவு எட்டு மணிக்கு யாழ் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலையாக்கப்பட்டு விசாரணை இடம்பெற்றது.

சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் உட்பட சுமார் 22 சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் வாதாடினர். யாழ் மாநகர சபைக்குரிய விதிகளுக்கு அமைவாக மக்களுக்குத் தெண்டுப் பணியாற்றும் ஊழியலர்களை மாநகர முதல்வர் நியமிக்க முடியுமென்றும் கொழும்பு மாநகர சபை மேற்கொண்ட செயற்பாடுகளையே மணிவண்ணன் மேற்கொண்டார் எனவும் சுமந்திரன் நீதிபதியிடம் எடுத்துக் கூறினார்.

சுமார் இரண்டு மணிநேர விவாதத்தின் பின்னர் மணிவண்ணன் பிணையில் விடுவிக்கப்பட்டதுடன் எதிர்வரும் யூன் மாதம் வரை வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.

உள்ளூராட்சி சபைகளின் அதிகாரங்களைக்கூட செயற்படுத்த முடியாத அளவுக்குத் தமிழ் மக்களை அரசாங்கம் தங்களைக் கட்டுப்படுத்துவதாக மணிவண்ணன் ஊடகங்களிடம் தெரிவித்தார். நீல நிற உடையோடுதான் கொழும்பு மாநகர சபையின் காவல் படையினர் மக்கள் பணியில் ஈடுபடுவதாகவும் ஆனால் யாழ் மாநகர சபை மாத்திரம் அவ்வாறு நீல நிற உடையோடு காவல் பணியாளர்களை ஈடுபடுத்த முடியாதெனக்கூறுவது நியாயமற்ற செயல் என்றும் மணிவண்ணன் மேலும் தெரிவித்தார்.

தனது பணி தொடருமெனவும் நாளை சனிக்கிழமை தான் அலுவலகத்துக்குச் செல்லவுள்ளதாகவும் மணிவண்ணன் மேலும் கூறினார்.