போரினால் பாதிக்கப்பட்ட

கிளிநொச்சியில் 400 பேருக்கு மாத்திரமே வீடமைப்பு உதவி

ஆனால் மேலும் 2500 வீடுகள் தேவை என்கிறார் திட்டப் பணிப்பாளர் பாஸ்கரன்
பதிப்பு: 2021 ஏப். 10 20:56
புலம்: கிளிநொச்சி, ஈழம்
புதுப்பிப்பு: ஏப். 11 02:27
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lka
#tamil
வடக்கு மாகாணம் கிளிநொச்சி மாவட்டத்தில் போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலங்கை ஒற்றையாட்சி அரசின் கிராமிய வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் கட்டிடப் பொருட்கள் கைத்தொழில் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சினால் கடந்த மார்ச் மாதம் 400 வீடுகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் வீடுகளின் நிர்மாணப்பணிகள் இம்மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தின் திட்டப் பணிப்பாளர் கே. ஸ்ரீ பாஸ்கரன் கூர்மைச் செய்தித் தளத்திற்குத் தெரிவித்தார். போரினால் பாதிப்பிற்குள்ளான வீடற்ற மக்களுக்கு வழங்குவதற்கு 2500 இற்கும் அதிக வீடுகள் தற்போது கிளிநொச்சி மாவட்டத்திற்கு தேவையாக உள்ளதென அவர் கூர்மைச் செய்திக்கு மேலும் தெரிவித்தார்.
 
கிளிநொச்சி மாவட்டத்தில் கரைச்சி, கண்டாவளை , பூநகரி மற்றும் பச்சிலைப்பள்ளி ஆகிய நான்கு பிரதேச செயலகப் பிரிவுகளிலும் வசிக்கும் வீடுகள் அற்ற குடும்பங்களின் பெயர் பட்டியல்களை அவ்வப் பகுதி பிரதேச செயலாளர்கள் கிளிநொச்சி மாவட்ட செயலக திட்டமிடல் பிரிவுக்கு அனுப்பி வைத்திருந்தனர்.

இந்த நிலையில் குறித்த பெயர் பட்டியலை தாம் சிபார்சு செய்து கொழும்பில் உள்ள மேற்படி அமைச்சிற்கு அனுப்பி வைத்ததாகவும் குறித்த பட்டியலில் குறிப்பிடப்பட்ட கிளிநொச்சி மாவட்டத்தின் நாலு பிரதேச செயலகப் பிரிவுகளிலும் வீடுகள் இன்றி வசிப்பவர்களில் 400 பெயர்களை மட்டும் வீட்டுத்திட்டப் பயனாளிகளாகக் கொழும்பு அமைச்சு அதிகாரிகள் தெரிவு செய்ததாகவும் திட்டப்பணிப்பாளர் கே. ஸ்ரீ பாஸ்கரன் கூர்மைக்கு மேலும் தெரிவித்தார்.

மேலும் குறித்த வீட்டுத்திட்டம் தொடர்பில் கிராமிய வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் கட்டிடப் பொருட்கள் கைத்தொழில் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சு அதிகாரிகள் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் கிளிநொச்சி மாவட்டத்திற்கு விஜயம் செய்ததாகவும் இந்த நிலையில் மேற்படி நான்கு பிரதேச செயலக பிரிவுகளிலும் அவர்களினால் தெரிவு செய்யப்பட்ட 400 வீட்டுத்திட்டப் பயனாளிகளையும் அவர்கள் நேரடியாக பார்வையிட்டு மேற்படி வீட்டுத் திட்டத்திற்கான தகமைகள் குறித்து பரிசீலனை செய்ததாகவும் பாஸ்கரன் கூர்மைச் செய்தித் தளத்திற்குத் தெரிவித்தார்.

கடந்த 2009 ஆம் ஆண்டு இறுதிப் போரில் கிளிநொச்சி மாவட்ட மக்கள் அனைவரும் வெளியேறிய நிலையில் அவர்கள் அனைவரும் 2009 ஆண்டின் பிற்பகுதியிலிருந்து இலங்கை அரசாங்கத்தினால் கட்டம் கட்டமாக மீள்குடியேற்றம் செய்யப்பட்டனர்.

மேலும் இறுதிப் போரில் கிளிநொச்சி மாவட்ட மக்களின் இருப்பிடங்களும் வீடுகளும் முழுமையாக அழிவுற்ற நிலையில் அவர்களுக்கு புதிய வீடுகளை அமைத்துக் கொடுக்கும் செயற்பாடுகளை இலங்கை அரசாங்கம் அண்மைக் காலங்களாக மேற்கொண்டு வருகிறது.

எனினும் அரசின் குறித்த வீட்டுத்திட்டச் செயற்பாடுகளில் கடும் மந்த நிலை காணப்படுவதுடன் வீட்டுத்திட்டத்தின் முழுமையான பயனை பாதிக்கப்பட்ட கிளிநொச்சி மாவட்ட மக்கள் பெற்றுக்கொள்ள முடியாத நிலையில் கடந்த காலங்களில் வீட்டுத்திட்ட செயற்பாடுகளில் பாரிய ஊழல் நிலவியதாகவும் அரச தரப்பு அரசியல்வாதிகள் இதில் தலையீடு செய்து அவர்களின் ஆதரவாளர்களுக்கு குறித்த வீட்டுத்திட்டத்தில் முன்னுரிமை வழங்க அதிகாரிகளுக்கு தேவையற்ற அழுத்தம் கொடுப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதனால் யுத்தப் பாதிப்பிற்கு உள்ளாகிய தாம் பெரும் பாதிப்பை அடைந்துள்ளதாகவும் கிளிநொச்சி மாவட்ட மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.