வடமாகாணம் மன்னார்

நாச்சிக்குடா கடற்பரப்பில் பள்ளிமுனை மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படை தாக்குதல்

நான்குபேர் காயம்- கைத்தொலைபேசிகள். உபகரணங்களும் பறிமுதல்
பதிப்பு: 2021 ஏப். 14 17:24
புலம்: மன்னார், ஈழம்
புதுப்பிப்பு: ஏப். 16 02:35
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lka
#tamil
வட மாகாணம் கிளிநொச்சி மாவட்டம் நாச்சிக்குடா கடற்பரப்பில் இன்று புதன்கிழமை தமிழ்- சிங்களப் புத்தாண்டு அன்று அதிகாலை மன்னார் மாவட்டம் பள்ளிமுனைப் பகுதி தமிழ் மீனவர்கள் நால்வர் இலங்கை கடற்படையினர் தாக்குதலுக்கு இலக்காகி காயமடைந்துள்ளதாகப் பள்ளிமுனை மீனவர் சங்கத்தின் பிரதிநிதி ஒருவர் கூர்மைச் செய்தித் தளத்திற்குத் தெரிவித்தார். மன்னார் பள்ளிமுனையில் இருந்து கடந்த செவ்வாய் மாலை இயந்திரப் படகில் மீன்பிடிக்கச் சென்ற அப்பாவி மீனவர்களே இவ்விதம் நாச்சிக்குடா கடற்பரப்பில் இரணைதீவுக்கு அருகாமையில் இலங்கை கடற்படையினரால் தாக்கப்பட்டதாகப் பள்ளிமுனை மீனவர் சங்கப் பிரதிநிதி கூர்மைக்கு மேலும் தெரிவித்தார்.
 
குறித்த நான்கு பள்ளிமுனை மீனவர்களும் கடந்த செவ்வாய்க்கிழமை மாலை கடற்றொழிலுக்கு புறப்பட்ட சமயம் பள்ளிமுனை கடற்படை முகாமில் வழமை போன்று தமது பெயர் விபரங்களைப் பதிவு செய்ததுடன் தமது படகையையும் பள்ளிமுனை கடற்படையினரின் சோதனைக்கு உட்படுத்திய பின்னரே மீன்பிடிக்காகக் கடலுக்குச் சென்றதாக அவர் தெரிவித்தார்.

இந்த நிலையில் இன்று புதன்கிழமை அதிகாலை இரணைதீவிற்கு அருகில் குறித்த நான்கு மீனவர்களும் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த சமயம் அப்பகுதியில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினர் பள்ளிமுனை மீனவர்களின் படகைப் பலத்த சோதனைக்கு உட்படுத்தியதுடன் எவ்விதக் காரணமும் இன்றி தமது ரோந்துப் படகின் அருகில் பள்ளிமுனை மீனவர்களின் படகை சுமார் மூன்று மணித்தியாலங்களுக்கு மேலாக தடுத்து வைத்ததாகவும் குறித்த மீனவர் சங்கப் பிரதிநிதி குறிப்பிட்டார்.

பின்னர் இலங்கை கடற்படையினர் தாம் வைத்திருந்த தடிகளினால் மீனவர்கள் நால்வரை கண்மூடித்தனமாகத் தாக்கியதாகவும் தாக்குதலின் பின்னர் இலங்கை கடற்படையினர் மீனவர்கள் நால்வரின் கைத்தொலைபேசிகள் மற்றும் மின்விளக்குகளையும் பறித்துச் சென்றதாகவும் குறித்த பிரதிநிதி கூர்மைக்கு கூறினார்.

இலங்கை கடற்படையினரின் தடியடியினால் பலத்த காயமடைந்த பள்ளிமுனை மீனவர்கள் நால்வரும் தமது கடற்றொழிலை இடைநடுவே கைவிட்டு இன்று புதன் அதிகாலையே கரை திரும்பியதாகவும் நடுக்கடலில் கடற்படையினரால் தாக்கப்பட்டது தொடர்பாக மீனவர்கள் நால்வரும் பள்ளிமுனை கடற்படை முகாம் அதிகாரிகளுக்கு முறையிட்டுள்ளதாகவும் பள்ளிமுனை மீனவர் சங்கப் பிரதிநிதி கூர்மைச் செய்தித்தளத்திற்கு மேலும் தெரிவித்தார்.

இதேவேளை பள்ளிமுனை தமிழ் மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்பட்டுள்ள சம்பவம் தொடர்பாக கடும் கண்டனம் தெரிவித்துள்ள வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் குறித்த தாக்குதல் தொடர்பில் இலங்கை கடற்படையின் மன்னார் மாவட்டக் கட்டளைத் தளபதிக்கு அவசரக் கடிதமொன்றையும் அனுப்பிவைத்துள்ளார்.