இலங்கை ஒற்றையாட்சி அரசின் ஜனாதிபதி

கோட்டாபய தன்னை அச்சுறுத்தியதாக விஜயதாச ராஜபக்ச முறைப்பாடு- உயிர் அச்சுறுத்தல் எனவும் கூறுகிறார்

வேறு பலரும் அச்சுறுத்தப்பட்டதாகச் சொல்கிறார் அனுரகுமார திஸாநாயக்கா
பதிப்பு: 2021 ஏப். 17 23:15
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: ஏப். 18 14:15
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lka
#gotabayarajapaksa
சீன அரசினால் அமைக்கப்பட்டு வரும் கொழும்பு சர்வதேச வர்த்தக நிதி நகரம் தொடர்பாக உருவாக்கப்படுகின்ற பொருளாதார ஆணைக்குழுச் சட்டமூலம் குறித்துக் கருத்து வெளியிட்டதால் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தன்னைத் தொலைபேசியில் அச்சுறுத்தியதாக நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார். கொழும்பில் உள்ள அவருடைய இல்லத்தில் வெள்ளிக்கிழமை காலை நடத்திய செய்தியாளர் சந்திப்பில் விளக்கமளித்த மூத்த சட்டத்தரணி விஜயதாச ராஜபக்ச, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மிகவும் கீழ்த்தரமான வார்த்தைகளினால் தன்னை ஏசியதாகக் கூறினார்.
 
தன்னுடைய கருத்தினால் மிகவும் ஆத்திரமடைந்திருந்த ஜனாதிபதி உரத்த தொனியில் தனக்கு எச்சரிக்கை விடுத்ததாகவும் இதனால் தனக்கு உயிர் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதென்றும் விஜயதாச ராஜபக்ச கூறினார்.

இந்த அச்சுறுத்தல் தொடர்பாக பொலிஸ் மா அதிபரிடம் முறையிட்டுள்ளதாகவும் விஜயதாச ராஜபக்ச செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இலங்கை சீனாவின் கொலனியாக மாறுமென விஜயதாச ராஜபக்ச நேற்று வியாழக்கிழமை கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அதேவேளை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தகாத வார்த்தைகளினால் ஏசவில்லை என்றும் கொழும்பு சர்வதேச வர்த்தக நிதி நகரம் தொடர்பாகவே உரையாடியதாகவும் அமைச்சர் மகிந்தனந்த அழுத்கமகே கூறியுள்ளார்.

விஜயதாச ராஜபக்ச பொய்யுரைப்பதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.

இதேவேளை. விஜயதாச ராஜபக்ச மாத்திரமல்ல அமைச்சர்கள் பலருக்கும் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலருக்கும் கோட்டாபய ராஜபக்ச தகாத வார்த்தைகளினால் ஏசி அச்சுறுத்துவதாக ஜே.வி.பி தலைவர் அனுரகுமார திஸாநாயக்கா கொழும்பில் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

விஜயதாச ராஜபக்சவுக்கு ஏசியது முதற்தடவையல்ல என்றும் இவ்வாறு பலருக்கு தொலைபேசி மூலம் அச்சுறுத்தல் விடுக்கப்படுவதாகவும் அனுரகுமார திஸாநாயக்கா கூறியுள்ளார்.