ராஜபக்சக்களை மையப்படுத்திய

சிறீலங்கா பொதுஜன பெரமுன கூட்டத்தில் மேலும் குழப்பங்கள்

விமல் வீரவன்ச, உதயகம்பன்வில, வாசுதேவ நாணயக்கார ஆகியோர் வெளியேறினர்
பதிப்பு: 2021 ஏப். 19 22:51
புலம்: யாழ்ப்பாணம், ஈழம்
புதுப்பிப்பு: ஏப். 19 23:43
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lka
#gotabayarajapaksa
மகிந்த ராஜபக்ச தலைமையில் இடம்பெற்ற ஸ்ரீலங்கா பொதுஜனப் பெரமுனக் கட்சியின் பங்காளிக் கட்சித் தலைவர்களுடனான கலந்துரையாடல் தோல்வியில் முடிவடைந்ததாக உள்ளகத் தகவல்கள் கூறுகின்றன. கூட்டத்தில் கலந்துகொண்ட தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச மற்றும் உதய கம்பன்வில, வாசுதேவ நாணயக்கார ஆகியோர் வெளியேறினர். இன்று திங்கட்கிழமை அலரி மாளிகையில் சுமார் மூன்று மணிநேரம் இடம்பெற்ற கூட்டத்தில் வாக்குவாதம் இடம்பெற்றது. மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவாக ஒரு அணியும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்காக மற்றொரு அணியும் பிரிந்து வாக்குவாதப்பட்டதாகவும் மற்றுமொரு அணி பசில் ராஜபக்சவை ஆதரித்துப் பேசியதாகவும் கூறப்படுகின்றது.
 
மாகாண சபைத் தேர்தலை நடத்துவது மற்றும் அமைச்சுக்களுக்கான செயலாளர்கள் மற்றும் அதிகாரிகள் அனைவரும் கோட்டாபய ராஜபக்சவுக்கு ஆதரவான இராணுவத்தைச் சேர்ந்தவர்கள் நியமிக்கப்படுவதாகவும் குற்றம் சுமத்தப்பட்டது.

முடிவுகள் இன்றி கூட்டம் நிறைவடைந்துள்ள நிலையில் கொழும்பில் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட விமல் வீரவன்ச. மக்கள் ஆணையை இந்த அரசு மீறினால் ஆட்சி கவிழ்க்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தார்.

இதேவேளை மற்றுமொரு கூட்டம் நடைபெறவுள்ளதாகவும் முரண்பாடுகளுக்கு தீர்வு எட்டப்படுமெனவும் அமைச்சர் மகிந்தானந்த அழுத்தகமகே தெரிவித்துள்ளார்.

ஆனாலும் கூட்டத்தில் இன்று விவாதிக்கப்பட்ட விடயங்கள் எதுவும் ஸ்ரீலங்கா பொதுஜனப் பெரமுனக் கட்சியால் அதிகாரபூர்வமாக ஊடகங்களுக்கு எதுவும் அறிவிக்கப்படவில்லை.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் கலந்துகொள்ளவில்லை. ஆனால் உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பாக மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு குற்றம் சுமத்தியுள்ளமை தொடர்பாக உறுப்பினர்கள் சிலர் எடுத்துக்கூறி வாக்குவாதப்பட்டதாகவும் உள்ளகத் தகவல்கள் கூறுகின்றன.