இலங்கை ஒற்றையாட்சி அரசின் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு பொலிஸாரால் கைதான

ரிஷாட் பதியுதீன் 90 நாட்கள் தடுப்புக் காவல் விசாரணையில்

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பாக மேலும் பலர் கைது செய்யப்படுவர் எனவும் பொலிஸார் கூறுகின்றனர்
பதிப்பு: 2021 ஏப். 26 23:31
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: ஏப். 27 00:13
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lka
#gotabayarajapaksa
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் பயங்கரவாதத் தடுப்புப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுத் 90 நாட்கள் தடுப்புக் காவல் விசாரணைக்கு உட்படுத்தப்படுகின்றமை நாடாளுமன்ற சிறப்புரிமை மீறல் என்று எதிர்க்கட்சி குற்றம் சுமத்தியுள்ளது. உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பாக அவருக்கு எந்தவிதமான தொடர்புகளும் இல்லையெனக் கூறி 2019 ஆம் ஆண்டு டிசம்பர மாதம் இலங்கைப் பொலிஸ் திணைக்களத்தினால் நீதிமன்றத்தில் வாக்குமூலம் வழங்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட ஒருவர் எவ்வாறு மீண்டும் கைது செய்யப்பட முடியுமெனவும் அதுவும் நீதிமன்ற உத்தரவின்றி கைது செய்ய முடியுமெனவும் ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் ஹர்ஷா டி சில்வா கேள்வி எழுப்பியுள்ளார்.
 
அதேவேளை, ரிஷாட் பதியுதீன் கைது செய்யப்பட்டமை தொடர்பாக நாடாளுமன்ற சபாநாயகருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் இலங்கைத் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுதல் விடுக்கும் செயற்பாடுகளோடு ரிஷாட் பதியுதீனுக்கும் அவருடைய சகோதரர் றியாத் பதியுதீனுக்கும் தொடர்புள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோகண தெரிவித்துள்ளார்.

தாக்குதலுடன் தொடர்புடைய மேலும் பலர் கைது செய்யப்படவுள்ளதாகவும் அஜித் ரோகண மேலும் கூறினார்.

இதேவேளை, ரிஷாட் பதியுதீன் நேற்று ஞாயிற்றுக்கிழமை முதல் 90 நாட்கள் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ளார். இதனை இலங்கை ஒற்றையாட்சி அரசின் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விசாரணைகளின் அடிப்படையில், உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பான மேலும் பல சந்தேக நபர்கள் கைது செய்யப்படுவர் என்றும் அவர்கள் மீதும் துரித விசாரணை நடத்தப்படுமெனவும் பொலிஸார் கூறியுள்ளனர்.