வடக்குக் கிழக்கு உள்ளிட்ட இலங்கைத் தீவில்

வேகமாகப் பரவும் கொவிட் 19- தற்காலிக வைத்தியசாலைகள் அமைக்கப்படுகின்றன

பொது முடக்கம் அறிவிக்கப்படலாம் என்கிறார் அமைச்சர் சுதர்சினி
பதிப்பு: 2021 மே 07 22:34
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: மே 09 00:17
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lka
#coronavirus
இலங்கையின் அனைத்து மாவட்டங்களில் கட்டுக்கடங்காமல் பரவி வரும் கொவிட்- 19 நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கு அதி தீவிர நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்து வரும் நிலையில் இராணுவத்தைப் பயன்படுத்தி கொவிட் சிகிச்சைக்கான புதிய வைத்திய நிலையங்களையும் இலங்கை அரசாங்கம் உருவாக்கி வருகிறது. திருமண வைபவங்கள், விருந்து உபசாரங்கள் மற்றும் ஒன்று கூடல் நிகழ்வுகளை வீடுகளிலோ அல்லது மண்டபங்களிலோ நடத்துவதற்கு எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு இலங்கை அரசாங்கம் தடை விதித்துள்ளதாக இலங்கை இராணுவத் தளபதியும் கொவிட் -19 பரவலைத் தடுக்கும் செயல்பாட்டு மையத்தின் தலைவருமான லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
 
இலங்கையில் கொரோனா கட்டுப்படுத்தப்படும் வரை பொது மக்கள் தங்கள் அயல் வீடுகளுக்கு செல்வதை கூட தற்காலிகமாக தவிர்க்குமாறு வேண்டிக்கொள்வதாக இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா மேலும் தெரிவித்துள்ளார்.

மேலும் இலங்கையில் தினம் தினம் புதிய கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டு வரும் நிலையில் தற்போது இரண்டாயிரத்தை அண்மித்த அளவு அவர்களின் எண்ணிக்கை நாளாந்தம் காணப்படுவதாக சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இச்சூழ்நிலையில் இலங்கை சுகாதார கட்டமைப்பினால் குறித்த எண்ணிக்கையினரைச் சமாளிக்க முடியாதுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறான தருணத்தில் இலங்கை முழுதையும் ஏழு நாட்களுக்கு முற்றாக முடக்குவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் துரிதமாக மேற்கொள்ளவேண்டும் என இலங்கை பொது சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் றோகண தென்னிலங்கை ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

நாடு மிக மோசமான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. புத்தாண்டுத் தினத்திற்கு முன்னர் இலங்கையில் தினமும் சுமார் 250 கொரோனா தொற்றாளர்கள் மட்டுமே அடையாளம் காணப்பட்டனர். ஆனால் கடந்த 27ஆம் திகதியில் இருந்து இத்தொகை தினமும் ஆயிரத்திற்கும் அதிக எண்ணிக்கையில் அதிகரித்து வருகிறது" என அவர் இலங்கைச் சிங்கள ஊடகங்களுக்கு வெள்ளிக்கிழமை தகவல் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான சூழ்நிலையில் இலங்கை ஒற்றையாட்சி அரசின் கல்வி அமைச்சர் ஜீ. எல். பீரிஸ் கொவிட் தொற்றுக் காரணமாக நாட்டில் உள்ள பாடசாலைகள் அனைத்தும் மறு அறிவித்தல் வரை தொடர்ந்து மூடப்பட்டிருக்கும் எனும் அறிவித்தலை வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ளார்.

இலங்கையின் மேல், வட மேல், சப்ரகமுவ ,தென் மற்றும் கிழக்கு மாகாணங்களில் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை கடந்த சில நாட்களாக சடுதியாக அதிகரித்துள்ளது. மேலும் இப்பகுதிகளில் சில கொரோனா மரணங்களும் சம்பவித்துள்ளதென தெரிவிக்கப்படுகிறது.

இச்சூழ்நிலையில் வட மாகாணத்திலும் கொரோனா நோய் தொற்று மிக வேகமாகப் பரவி வரும் நிலையில் யாழ்ப்பாண மாவட்டத்தில் இது உச்ச நிலையை அடைந்துள்ளதாக வட மாகாண சுகாதாரத் திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரி கூர்மைச் செய்தித் தளத்திற்கு தெரிவித்தார்.

மேலும் யாழ் மாவட்டத்தில் கொரோனா நோயாளர்கள் அதிகரித்து வரும் சூழ்நிலையில் யாழ் மக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும் என குறித்த அதிகாரி மேலும் தெரிவித்தார். மேலும் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இதுவரை 21 கொரோனா நோயாளர்கள் மரணமடைந்துள்ளதாக குறித்த சிரேஷ்ட அதிகாரி கூர்மைக்கு மேலும் தெரிவித்தார்.

செவ்வாய்கிழமை (4 ஆம் திகதி) தென்மராட்சிப் பிரதேச செயலகப் பிரிவில் உள்ள கொடிகாமம் வடக்கு மற்றும் கொடிகாமம் மத்தி ஆகிய கிராமசேவையாளர் பிரிவுகளில் கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். இந்தநிலையில் செவ்வாய் இரவில் இருந்து மறு அறிவித்தல் வரும் வரை குறித்த இரண்டு கிராமசேவையாளர்கள் பிரிவுகளும் முடக்கப்பட்டுள்ளது.

குறித்த இரண்டு கிராமசேவையாளர் பிரிவுகளில் வதியும் மக்கள் வேறு பகுதிகளுக்கு செல்வதற்கும் வெளியார் இக்கிராமங்களுக்கும் நுழைவதற்கும் யாழ்ப்பாண சுகாதார அதிகாரிகளினால் மறு அறிவித்தல் வரை தடை விதிக்கப்பட்டுள்ளது.

வட மாகாணத்தின் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள மாங்குளம் வைத்தியசாலையின் வைத்தியர் உட்பட 12 ஊழியர்களுக்கு கடந்த சில தினங்களுக்கு முன்னர் கொவிட்-9 தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் மேற்படி வைத்தியசாலையின் செயல்பாடுகள் கடந்த நான்காம் திகதி செவ்வாய் மாலை தொடக்கம் மறு அறிவித்தல் வரும் வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

இதேசமயம் மன்னார் மாவட்டத்தில் இம் மாதம் முதலாம் திகதியில் இருந்து ஏழாம் திகதி வரை 28 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதாக மன்னார் மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் வினோதன் தர்மராஜன் கூர்மைச் செய்தித் தளத்திற்கு தெரிவித்தார். குறித்த 28 தொற்றாளர்களில் ஒருவர் மன்னார் பகுதியில் உள்ள பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் இலங்கையின் காலி மாவட்டம் அம்பலாங்கொடையைச் சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர் எனத் தெரிவித்த சுகாதாரப் பணிப்பாளர் தொற்றாளர்களில் இன்னுமொருவர் மன்னாரில் கடமை புரியும் பதுளை மாவட்டத்தைச் சேர்ந்த கடற்படை உத்தியோகத்தர் என மேலும் தெரிவித்தார். மிகுதியானவர்களில் அரச ஊழியர்கள் மற்றும் வர்த்தகர்கள் சிறு வியாபாரிகள் அடங்குவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

மேலும் மன்னார் மாவட்டத்தில் கொவிட் பரவலைத் தடுக்கும் நோக்கில் சுகாதார அதிகாரிகளுடன் பொலிஸாரும் களத்தில் இறங்கியுள்ள நிலையில் தினமும் மன்னார் நகரப் பகுதியில் பொலிஸார் விசேட சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதன் அடிப்படையில் மன்னார் பசார் பகுதியில் முகக் கவசம் அணியாதவர்கள் மற்றும் சமூக இடைவெளியைப் பின்பற்றாதவர்கள் மற்றும் சுகாதார விதிமுறைகளை மீறிய, பலர் பொலிஸாரின் சட்ட நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்

இது இவ்விதம் இருக்க இலங்கையில் முன்னொருபோதும் இல்லாத வகையில் கடந்த 7 நாட்களில் மட்டும் சுமார் 11 ஆயிரம் புதிய கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என இலங்கை சுகாதார அமைச்சு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இச்சூழ்நிலையில் இலங்கை வைத்தியாலைகளில் உள்ள கொரோனா சிகிச்சை மையங்களில் பாரிய இடநெருக்கடி ஏற்பட்டுள்ளதாக அவ் அதிகாரிகள் மேலும் தெரிவிக்கின்றனர். இந்த நிலையில் இலங்கை இராணுவத்தின் உதவியோடு நாடு முழுதும் கொவிட் நோய்க்கான புதிய சிகிச்சை நிலையங்கள் ஆரம்பிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

கொவிட்-19 நோய் பரவலைத் தடுக்கும் முகமாக இலங்கையின் தெகிவளை மிருக காட்சிசாலை, பின்னவல யானைகள் சரணாலயம், மற்றும் முக்கிய தாவரவியல் பூங்காக்களும், வன விலங்குகளை தரிசிக்கும் முகாம்கள் அனைத்தும் மறு அறிவுறுத்தல் வரும் வரை மூடப்பட்டுள்ளது. அத்துடன் களியாட்டம் மற்றும் சூதாட்ட விடுதிகள் ஆகியவற்றை மூடுவதற்கும் இலங்கை அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.

இந்தியா முழுதும் கொவிட்- 9 மிக வேகமாகப் பரவி அங்கு பெரும் எண்ணிக்கையானோர் உயிரிழந்து வரும் நிலையில் அதில் இருந்து தப்புவதற்காக இந்திய அகதி முகாம்களில் வசிக்கும் இலங்கை தமிழ் குடும்பங்களும் இந்திய நாட்டவர்களும் கடல் வழியாக இலங்கைக்குள் நுழைய முற்பட்டு பின்னர் அவர்கள் இலங்கை கடற்படையினால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ள செய்திகள் வெளிவந்துள்ளன.

இதேவேளை, நோய்த் தாக்கம் அதிகரித்து வருவதால் பொது முடக்கம் அறிவிக்கப்படலாமென கொவிட் நடவடிக்கைகளுக்குப் பொறுப்பான அமைச்சர் சுதர்சினி ஜெயராஜ் பெர்ணாண்டோபுள்ளே நேற்று வெள்ளிக்கிழமை கொழும்பில் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.