இலங்கைக் கடற்பரப்புக்குள்

கைதான இந்திய மீனவர்கள் கொரானா அச்சத்தினால் விடுதலை

70 மில்லியன் ரூபா கஞ்சா பொதிகள் தீயிட்டு அழிப்பு
பதிப்பு: 2021 மே 10 13:10
புலம்: மன்னார், ஈழம்
புதுப்பிப்பு: மே 11 20:28
main photo main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lka
#indianocean
#region
இலங்கையில் கொரோனா நோய்த்தொற்றினால் தினமும் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அயல் நாடான இந்தியாவிலும் கொரோனாவின் அதீத பரவல் காரணமாக தினமும் பல்லாயிரக்கணக்கான மக்கள் பலியாகி வருகின்றனர். இந்த நிலையில், ஏலவே கொரோனாவின் அதி உச்சக்கட்ட பீதியில் இருக்கும் இலங்கை அரசாங்கம் இந்தியாவில் இருந்து கடல் வழியாக நிகழும் ஊடுருவல்களைக் கட்டுப்படுத்த தனது கடற்படையினரைத் தீவிரமாக ஈடுபடுத்தி வருகின்றது.
 
கொரோனா தொற்றுடன் கடல் வழியாக இலங்கைக்குள் ஊடுருபவர்களைத் தடுப்பதற்கு இலங்கைக் கடற்படையினர் இலங்கையின் வட மேல் மற்றும் வடக்கு மாகாணங்களின் கடற்பரப்பு மற்றும் இப்பகுதிகளின் கரையோரப் பகுதிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகளை அதிகரித்துள்ளனர்.

இலங்கை இந்தியக் கடல் எல்லை இலங்கை கடற்படையினரால் 24 மணித்தியாலங்களும் தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது.

இ்வ்வாறானதொரு நிலையில் இலங்கையின் தலைமன்னார் கடற்பரப்பில் கடந்த வியாழக்கிழமை பகல் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டிருந்த இந்திய மீனவர்களின் இழுவைப்படகுகளை அப்பகுதியில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் சுற்றிவளைத்தனர். பின்னர் இந்திய மீனவர்களின் படகுகள் இலங்கை கடற்படையினரால் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. எனினும் இலங்கைக் கடல் எல்லைக்குள் அத்துமீறிய குற்றச்சாட்டில் சட்ட நடவடிக்கைகாக பொலிஸாரிடம் கையளிக்காமல் கொரோனா பீதி காரணமாக அவர்கள் விடுவிக்கப்பட்டார்கள்.

அதேவேளை வடமேல் மாகாணத்தின் கல்பிட்டி குதிரைமலை கடற்பகுதியில் பயணித்த இந்திய மீன்பிடிப்படகில் இருந்து சுமார் 70 மில்லியன் ரூபா பெருமதியான கஞ்சா போதைவஸ்துகளைக் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இலங்கை கடற்படையினர் கைப்பற்றியிருந்தனர்.

ஆழ் கடற்பகுதியில் அத்துமீறிய குறித்த இந்திய இழுவைப் படகை இலங்கை கடற்படையினர் சோதனையிட்ட சமயம் குறித்த படகில் ஏழு இந்திய மீனவர்கள் இருந்ததுடன் அப்படகிலிருந்து 118 பைகளில் பொதி செய்யப்பட்ட 235 கிலோ கிராம் நிறையுடய கஞ்சா போதைவஸ்தினையும் இலங்கை கடற்படையினர் கைப்பற்றியிருந்தனர்.

பின்னர் இந்திய மீனவர்களையும் அவர்களின் படகு மற்றும் கஞ்சாப் பொதிகளைப் புகைப்படமும் காணொளியும் எடுத்த இலங்கை கடற்படையினர், கைப்பற்றிய கஞ்சா போதைவஸ்துப் பொதிகளை தீயிட்டு அழித்துள்ளனர்.

எனினும் இலங்கைகுள் கஞ்சாவினை எடுத்து வந்த இந்திய மீனவர்களையும் எழுவரையும் இலங்கையில் எவ்விதச் சட்ட நடவடிக்கைகளுக்கும் உட்படுத்தாது கொரோனா தொற்றின் அச்சம் காரணமாக இலங்கை கடற்படையினர் விடுவித்துள்ளனர்.