இலங்கை ஒற்றையாட்சி அரசின் தொல்லியலும் இராணுவமும்

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை முடக்கும் அதேவேளை குருந்தூர் மலையை ஆக்கிரமிக்கும் முனைப்பு

கண்டிக்கிறார் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன்
பதிப்பு: 2021 மே 13 22:45
புலம்: மன்னார், ஈழம்
புதுப்பிப்பு: மே 14 11:34
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
தமிழ் இன அழிப்பின் அழியா அடையாளமான முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளை ஈழத்தமிழர்கள் நினைவுகூருவதற்கு இலங்கை ஒற்றையாட்சி அரசு தனது பொறிமுறைகளூடாகவும் இராணுவத்தின் ஊடாகவும் தடைவிதித்துள்ளது. இந்த நிலையில் கொவிட் -19 விதிகளையும், நடைமுறைகளையும் பேணி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளை நடாத்தினாலும், அது தொடர்புடையவர்கள் கைது செய்யப்படுவார்கள் என இலங்கை இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார். இவ்வாறான சூழ்நிலையில் இலங்கையின் தமிழர் பகுதியான முல்லைத்தீவு மாவட்டம் குருந்தூர் மலைப்பகுதியில் கடந்த செவ்வாய் அன்று இலங்கை தொல்பொருள் திணைக்களத்தின் முழு ஆதரவோடு கொவிட் -19 விதிமுறைகள் மீறப்பட்டு பௌத்த விகாரை நிர்மாணிப்பதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
 
இலங்கைத் தீவின் அனைத்துப் பகுதிகளிலும் கொரோனா தொற்று தீவிரமாக பரவி தினம் தினம் மனித உயிர்களைக் அது காவுகொண்டு வருவதை கூட பொருட்படுத்தாத இலங்கை அரசாங்கம் அதன் தொல்பொருள் திணைக்களத்தின் வழிகாட்டலுடன் இராணுவத்தின் துணையுடன் முப்பதிற்கும் அதிகமான தென்னிலங்கைப் பௌத்த பிக்குகளை அழைத்து வந்து தமிழர் தாயகமான வட மாகாணம் முல்லைத்தீவு மாவட்டத்தில் தண்ணீர்முறிப்பு குமுழமுனை தமிழ் கிராமத்தின் அருகில் உள்ள குருந்தூர்மலையில் தமிழ் மக்களால் ஆண்டாண்டு காலமாக வழிபட்டு வந்த ஆதி சிவன் ஐயனார் ஆலயம் அமைந்துள்ள பகுதியில் பௌத்த விகாரை அமைக்கும் ஆரம்ப செயற்பாடுகளை பெரும் முனைப்புடன் தடல்புடலான ஏற்பாடுகளுக்கு மத்தியில் நடாத்தி முடித்துள்ளது.

இலங்கையில் கொவிட் -19 தொடர்பாக நடைமுறைப்படுத்தப்பட்ட விதிமுறைகள் யாவற்றையும் மீறி குருந்தூர் மலைப்பகுதியில் மேற்படி பௌத்த விகாரை அமைப்பதற்கான ஆரம்ப கட்டப் பணிகளும், மத அனுஷ்டானங்களும் இவ்விதம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இலங்கைத் தொல்பொருள் திணைக்களத்தின் முழுமையான அனுசரனையிலும் இராணுவத்தினரின் பாதுகாப்புடனும் மேற்படி விகாரை அமைக்கும் ஆரம்ப பணிகள் கடந்த திங்கள் இரவு பிரித் ஓதலுடன் ஆரம்பித்து செவ்வாய்கிழமை பிற்பகல் முடிவுக்கு வந்துள்ளது.

தென் இலங்கையில் இருந்து அழைத்துவரப்பட்ட பௌத்த பிக்குகள், இலங்கை இராணுவத்தின் சிரேஷ்ட உயர் அதிகாரிகள், தொல்லியல் திணைக்களத்தின் உத்தியோகத்தர்கள் மற்றும் முல்லைத்தீவு மணலாற்றுப்பகுதியில் இருந்து பெருமளவு வருகை தந்த சிங்கள மக்கள் ஆகியோர் கொவிட்-19 சட்டதிட்டங்களை மீறி பெரும் எண்ணிக்கையில் குருந்தூர் மலைப்பகுதியில் ஒன்று திரண்டு அங்கு நிரந்தர பௌத்த விகாரையொன்றை அமைக்கும் ஆரம்பப் பணிகளை கடந்த செவ்வாய் கிழமை நிறைவேற்றியுள்ளனர்.

சிவசக்தி ஆனந்தன்
சிவசக்தி ஆனந்தன்
இவ்வாறான சூழ்நிலையில் தமிழர் தாயகப் பகுதியில் இலங்கை அரசாங்கத்தினால் மேற்கொள்ளபட்டுள்ள குறித்த அடாவடித்தனமான செயல்பாடுகளை வன்மையாக கண்டிப்பதாக ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் (ஈ.பி.ஆர்.எல்.எப்) வன்னி மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஏ. சிவசக்தி ஆனந்தன் கூர்மைச் செய்தித் தளத்திற்கு தெரிவித்தார்.

இலங்கை தொல்லியல் திணைக்களம் முற்று முழுதாக சிங்கள பௌத்த பேரினவாதத்தை கையில் எடுத்து ஏனைய மதங்களின் தொல்லியல் சான்றுகளை அழித்தொழித்து அங்கு விகாரைகளை அமைத்து வருவதை அனுமதிக்க முடியாது என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.சிவசக்தி ஆனந்தன் மேலும் தெரிவித்தார்.

இலங்கை தொல்பொருள் திணைக்களம் தீவில் பாரம்பரியமாகவும் பரம்பரை பரம்பரையாகவும் தமிழர்கள் வாழ்ந்த பகுதிகளில் அவர்களின் கலாச்சாரம், மதப்பண்பாடு, மத வழிபாடுகள் தொடர்பான அடையாளங்களை இலாகவமாக அழித்து அப்பகுதிகளைப் பௌத்த பூமியாக சித்தரிக்க முற்படுகின்றனர் எனவும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் கூர்மைக்கு மேலும் தெரிவித்தார்.

இலங்கையில் யுத்தம் மும்முரமாக இடம்பெற்றவேளை வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ள தமிழர்கள் பாராம்பரியத்தை பரைசாற்றும் இடங்களை பௌத்தர்களின் தளம் என தென்னிலங்கையில் இருந்தவாறு கூறிவந்த இலங்கை தொல்லியல் திணைக்களம் தற்போது யுத்தம் இல்லாத நிலையில் தமிழர் பகுதிகளில் தடாலடியாக நுழைந்து அங்குள்ள தமிழர் மரபுச் சின்னங்களையும் அடையாளங்களையும் இராணுவத்தின் துணையுடன் அழித்தொழித்து பௌத்தர்களின் பூமியாக அதனை அடையாளப்படுத்துவதற்கு பகிரதப் பிராயத்தனத்தை மேற்கொள்கின்றனர் எனத் தெரிவித்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் முல்லைத்தீவு குருந்தூர் மலைப்பகுதியில் கடந்த செவ்வாய் அன்று நிகழ்ந்த பௌத்த விகாரை ஆரம்பிப்பது தொடர்பான நிகழ்வுகள் குறித்து கூர்மைச் செய்தித் தளத்திற்கு மேலும் பல விடயங்களைத் தெரிவித்தார்.