அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மீது குற்றச்சாட்டு

பெண் உறுப்பினரைக் கடத்தியும் வெகுமதிகள் வழங்கப்பட்டும் அச்சுறுத்தியும் கைப்பற்றப்பட்ட மாந்தை மேற்கு பிரதேச சபை

அநீதியான செயலென்று சபை உறுப்பினர்கள் பலர் கண்டனம்
பதிப்பு: 2021 மே 21 20:58
புலம்: மன்னார், ஈழம்
புதுப்பிப்பு: மே 22 21:29
main photo main photo main photo main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lka
#tamil
வட மாகாணம் மன்னார் மாவட்டம் மாந்தை மேற்கு பிரதேச சபையின் புதிய தவிசாளராக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இராமநாதன் வவுனியன் ஆதி அருணாசலம் தெரிவாகியுள்ளார். இவ்வாறான நிலையில் மாந்தை மேற்குப் பிரதேச சபையின் நிர்வாகத்தை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி மீண்டும் கைப்பற்றியுள்ளது. எனினும் குறித்த தவிசாளர் தெரிவில் மாந்தை மேற்கு பிரதேச சபையின் பெண் உறுப்பினர் ஒருவரைக் கடத்தியும், சபையின் உறுப்பினர்கள் சிலருக்கு பண வெகுமதிகள் வழங்கியும், சில உறுப்பினர்களுக்கு அச்சுறுத்தல்கள் விடுத்தும் ஜனநாயகத்திற்கு முரணாக, அநீதியான முறையில் குறித்த பிரதேச சபை நிர்வாகம் கைப்பற்றப்பட்டிருப்பதாக பிரதேச சபையின் எதிர்கட்சி உறுப்பினர்கள் கூர்மை செய்தித் தளத்திற்கு தெரிவித்தனர்.
 

மாந்தை மேற்கு பிரதேச சபையின் புதிய தவிசாளர் தெரிவில் இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி சார்பில் நிறுத்தப்பட்ட ஆதி அருணாசலத்திற்கு ஆதரவு வழங்காத ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த மாந்தை மேற்கு பிரதேச சபையின் முஸ்லிம் பெண் உறுப்பினர் ஒருவர், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியினராலும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்த சபையின் பிரதித் தவிசாளராலும் அச்சுறுத்தலுக்கும் அவமரியாதைக்கும் உள்ளாக்கப்பட்டதாகவும் பிரதேச சபை உறுப்பினர்கள் கூறுகின்றனர்.

கடந்த 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத்தேர்தலில் மாந்தை மேற்கு பிரதேச சபையின் வெள்ளாங்குளம், இலுப்பைக்கடவை, பெரியமடு, விடத்தல்தீவு, நெடுங்கண்டல், ஆட்காட்டிவெளி, அடம்பன், வட்டக்கண்டல், மடு, இரணை இலுப்பைக்குளம், காக்கையன்குளம் ஆகிய 11 வட்டாரங்களில் 7 வட்டாரங்களில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது.

இந்தநிலையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி மாந்தை மேற்கு பிரதேச சபையின் நிருவாகத்தை கைப்பற்றியது. அத்துடன் அக்கட்சியின் அடம்பன் வட்டாரப் பிரதேச சபை உறுப்பினர் ஆசிர்வாதம் சந்தியோகு, மாந்தை மேற்கு பிரதேச சபையின் தவிசாளராக அச்சமயம் நியமிக்கப்பட்டார்.

அத்துடன் குறித்த மாந்தை மேற்கு பிரதேச சபையின் பிரதித்தவிசாளராக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பிரதேச சபை உறுப்பினர் முகம்மது ஹனிபா முகம்மது தௌபீக், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியினரின் முழுமையான ஆதரவுடன் தெரிவாகினார்.

இந்த நிலையில் கடந்த ஏப்பிரல் மாதம் 25ஆம் திகதி மாந்தை மேற்கு பிரதேச சபைத் தவிசாளர் ஆசிர்வாதம் சந்தியோகு மரணமடைந்தார். இதைதொடர்ந்து குறித்த பிரதேச சபையின் பிரதி தவிசாளர் முகம்மது தௌபீக் பிரதேச சபை நிருவாகத்தை கடந்த 24 நாட்களாக முன்னெடுத்திருந்தார்.

இச்சூழ்நிலையில் மாந்தை மேற்கு பிரதேச சபைக்கு புதிய தவிசாளர் தெரிவு செய்யும் நிகழ்வு கடந்த 19ஆம் திகதி புதன்கிழமை காலை 10.30. மணியளவில் வட மாகாண உள்ளூராட்சித் திணைக்கள ஆணையாளர் பற்றீக் நிரஞ்சன் தலைமையில் மாந்தை மேற்கு பிரதேச சபையின் மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

குறித்த தவிசாளர் தெரிவிற்கு, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் இரணை இலுப்பைக்குளம் வட்டாரப் பிரதேச சபை உறுப்பினர் இராமநாதன் வவுனியன் ஆதி அருணாசலம் மற்றும் தமிழர் விடுதலைக் கூட்டணிப் பிரதேச சபை உறுப்பினர் விக்னராஜா கையிலைநாதன் ஆகியோர் பரிந்துரைக்கப்பட்டனர்.

குறித்த தவிசாளர் தெரிவில் 12 வாக்குகளைப் பெற்று மாந்தை மேற்கு பிரதேச சபையின் தவிசாளராக இராமநாதன் வவுனியான் ஆதி அருணாசலம் தெரிவானார்.

மாந்தை மேற்கு பிரதேச சபையில் 24 உறுப்பினர்கள் அங்கம் வகிக்கின்றனர். இவர்களில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பெண் பிரதேச சபை உறுப்பினர் நெசவுநாதன் தவமலர் (கடத்தப்பட்டவர்) மற்றும் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றியடைந்த பிரதேச சபை உறுப்பினர் தங்கவேலு பகிரதன் ஆகிய இரண்டு உறுப்பினர்கள் கடந்த புதன்கிழமை இடம்பெற்ற தவிசாளர் தெரிவிற்கு பிரசன்னமாகவில்லை.

மிகுதியான 22 உறுப்பினர்களும் தவிசாளர் தெரிவிற்கான அமர்வில் கலந்துகொண்டனர். இந்த நிலையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 10 உறுப்பினர்களும், சபையின் பிரதித் தவிசாளரான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த எம். எச். முகம்மது தௌபீக் மற்றும் கஜேந்திரக்குமார் பொன்னம்பலத்தின் கட்சியான அகில இலங்கை தமிழ் காங்கிரஸைச் சேர்ந்த உறுப்பினரான இராசதுரை ராஜேந்திரன் அடங்கலாக மொத்தமாக 12 உறுப்பினர்கள் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் ஆதி அருணாசலத்திற்கு தவிசாளர் தெரிவில் வாக்களித்தனர்.

அத்துடன் தவிசாளர் தெரிவில் நிறுத்தப்பட்ட தமிழர் விடுதலைக் கூட்டணி பிரதேச சபை உறுப்பினர் வி. கைலநாதனுக்கு தமிழர் விடுதலை கூட்டணி உறுப்பினர்கள் இருவரும் (வி. கயிலைநாதன் அடங்கலாக) இலங்கை தமிழ் தமிழரசுக் கட்சியின் உறுப்பினர்கள் ஐவரும், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பெண் உறுப்பினரான நஸ்ருதீன் றம்சியா மற்றும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதேச சபை உறுப்பினர் அப்துல் அஸீஸ் முகம்மது சில்ஜி என 9 உறுப்பினர்கள் வாக்களித்தனர்.

எனினும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிரிதொரு உறுப்பினரான பக்கீர் மொகிதீன் முகம்மது லாபீர், குறித்த தவிசாளர் தெரிவில் நடுநிலமை வகித்தார்.

இவ்வாறான சூழ்நிலையில் மாந்தை மேற்கு பிரதேச சபை நிருவாகத்தை மீண்டும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி கைப்பற்றிவிடக் கூடாது எனும் பெரும் முனைப்புடன் செயல்பட்ட பிரதேச சபை உறுப்பினர் பாலசுப்பரமணியம் பிரபா நந்தன் (இலங்கை அரசினால் புனர்வாழ்வு பெற்ற புலிகள் அமைப்பின் முன்னாள் போராளி) தவிசாளர் தெரிவின் இறுதியில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியிடம் சரணாகதியடைந்து அக்கட்சியின் ஆதி அருணாசலத்திற்கு ஆதரவாக வாக்களித்தார்.

மாந்தை மேற்கு பிரதேச சபையில் ஆட்காட்டிவெளி வட்டாரத்தின் உறுப்பினராக பாலசுப்பரமணியம் பிரபா நந்தன் செயற்பட்டு வருகிறார். அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இவர் கடந்த சில மாதங்களாக தனது கட்சியின் தலைவர் ரிஷாத் பதியூதீனுடன் முரண்பட்டு வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தானுடன் இணைந்து செயல்பட்டு வந்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தானுடன் செயற்பட்ட காலப்பகுதியில் தனது கட்சியான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சிக்கு எதிராகச் செயல்பட்டு வந்ததுடன் அக்கட்சியை கடுமையாக விமர்சித்தும் வந்தார். இவ்வாறான சூழ்நிலையில் மாந்தை பிரதேச சபையின் தவிசாளர் தெரிவில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த உறுப்பினர் எவரேனும் தவிசாளராக மீண்டும் நியமிக்கப்பட்டு விடக்கூடாதெனும் கோணத்தில், சபையில் அங்கம் வகிக்கும் தமிழ் கட்சிகள் அனைத்தையும் ஒன்று திரட்டி அக்கட்சியில் உள்ள தமிழ் உறுப்பினர் ஒருவரை மாந்தை மேற்கு பிரதேச சபைத் தவிசாளராக தெரிவு செய்வதற்கான பல்வேறு முயற்சிகளையும் கடும் பிராயத்தனங்களையும் அவர் இரவு பகலாக மேற்கொண்டிருந்தார்.

இதன் அடிப்படையில் இவரின் உந்துதல் காரணமாக மாந்தை மேற்கு பிரதேச சபையில் அங்கம் வகிக்கும் இலங்கை தமிழரசுக் கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் ஆகிய தமிழ் தேசிய கட்சிகளும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி ஆகிய கட்சிகளைச் சேர்ந்த பிரதேச சபை உறுப்பினர்கள் அனைவரும் இணைந்து தவிசாளர் தெரிவில் தமிழர் விடுதலை கூட்டணியை சேர்ந்த விக்னராஜா கையிலைநாதனைத் தவிசாளராக தெரிவு செய்வதற்கு தீரமானித்திருந்தனர்.

இதற்கான முயற்சிகள் அனைத்தும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி உறுப்பினராக இருந்து பின்னர் அக் கட்சியுடன் முரண்பட்ட பாலசுப்பிரமணியம் பிரபாநந்தன் தலைமையில் நடைபெற்றது. பிரதேச சபை உறுப்பினர் பிரபா நந்தன் தவிசாளர் தெரிவில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியை தோற்கடிப்பதற்கு பல வியூகங்களை வகுத்து அது தொடர்பில் தினமும் மாந்தை மேற்கு பிரதேச சபையில் அங்கம் வகிக்கும் தமிழ் கட்சிகளின் பிரதேச சபை உறுப்பினர்களுடன் தொலைபேசியில் உரையாடியதுடன் சில பிரதேச உறுப்பினர்களை நேரில் சந்தித்துக் கலந்துரையாடினார்.

இந்த சூழ்நிலையில் மாந்தை மேற்கு பிரதேச சபைக்கு தமிழர் விடுதலைக் கூட்டணியின் உறுப்பினர் விக்னராஜா கையிலைநாதனை தவிசாளர் பதவிக்கு தெரிவு செய்வதற்கு சதா மும்முரமாகச் செயல்பட்ட பாலசுப்பரமணியம் பிரபா நந்தன் இறுதியில் தனது நண்பரான பிரதேச சபை உறுப்பினரான விக்னராஜா கையிலைநாதனை நட்டாற்றில் கைவிட்டு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியில் மீண்டும் சங்கமமாகி கடந்த புதன்கிழமை நடைபெற்ற தவிசாளர் தெரிவின் இறுதி நிமிடத்தில் அக் கட்சிக்கு வாக்களித்து ரிஷாத் பதியூதீன் மீதான தனது ராஜ விஸ்வாசத்தை நிரூபித்துள்ளார்.

இதேவேளை மாந்தை மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் தெரிவில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் சார்பில் நிறுத்தப்பட்ட பிரதேச சபை உறுப்பினர் ஆதி அருணாசலத்திற்கு ஆதரவு வழங்காத மக்கள் பிரதிநிதியான தன்னை சக பிரதேச சபை உறுப்பினர்களுக்கு முன்னிலையில் பல பேர் பார்த்திருக்க, முன்னாள் வட மாகாண சபை உறுப்பினரும் முன்னாள் அமைச்சரான ரிஷாத் பதியூதீனின் சகோதரருமான றிப்ஹான் பதியூதீன் மற்றும் மன்னார் பிரதேச சபையின் தவிசாளர் முகம்மட் முஜாகித்தும் தகாத வார்த்தைகளினால் ஏசி அச்சுறுத்தியதாகவும், அவமரியாதை செய்ததாகவும் மாந்தை மேற்கு பிரதேச சபையின் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி முஸ்லிம் பெண் உறுப்பினரான மன்னார் காக்கையன்குளத்தைச் சேர்ந்த திருமதி நஸ்ருதீன் றம்சியா கூர்மைச் செய்தித் தளத்திற்கு தெரிவித்தார்.

குறித்த தவிசாளர் தெரிவில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த ஒருவர் வெற்றி பெறவேண்டும் எனும் நோக்கத்தில் ஜனநாயகத்திற்கு முரணாகத் தனது கட்சியின் மாந்தை மேற்கு பிரதேச சபையின் சக பெண் உறுப்பினரான விளாத்திகுளம் மடுவைச் சேர்ந்த நெசவுநாதன் தவமலரை அவரின் வீட்டில் இருந்து கடத்தி சென்றுள்ளனர்.

தவிசாளர் தெரிவிற்கு குறித்த தவமலர் பிரசன்னம் ஆகாத வகையில் மாந்தை பிரதேச சபையின் பிரதி தவிசாளர் எம். எச்.முகம்மது தௌபீகின் உடந்தையுடன் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் றிப்ஹான் பதியூதீன் , மன்னார் பிரதேச சபை தவிசாளர் முகம்மது முஜாஹித் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியினர் குறித்த பெண் பிரதேச சபை உறுப்பினரைக் கடத்தியுள்ளனர்.

அவர் தொலைபேசி செயழிழந்துள்ளது. இன்று அவருக்கு என்ன நடந்துள்ளது என்பது தொடர்பில் எவ்விதத் தகவலும் கிடைக்கவில்லை. இது குறித்து நான் எனது ஆட்சேபனையைத் தெரிவித்த நிலையிலேயே, றிப்ஹான் பதியூதீன் மற்றும் மன்னார் பிரதேச சபையின் தவிசாளர் முஜாகீத் ஆகியோர் தகாத வார்த்தைகளினால் தன்னை ஏசி அச்சுறுத்தியதாக மாந்தை மேற்கு பிரதேச சபையின் பெண் உறுப்பினர் திருமதி நஸ்ருதீன் றம்சியா கூர்மைச் செய்தித் தளத்திற்கு மேலும் தெரிவித்தார்.

இது தொடர்பாக தன்னை அச்சுறுத்தியவர்கள் மீது தான் சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். இதேவேளை கடந்த 19ஆம் திகதி புதன்கிழமை நடைபெற்ற மாந்தை மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் தெரிவு தொடர்பில் அச்சபையின் உறுப்பினரான விக்னராஜா கயிலைநாதன் கூர்மைக்கு பல விடயங்களைக் கூறினார்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி, பிரதேச சபை உறுப்பினர்கள் சிலருக்கு பணம் மற்றும் வரப்பிரசாதங்களை வழங்கியே குறுக்கு வழியில் அநீதியான முறையில் வெற்றியைப் பெற்றுள்ளதாக மாந்தை பிரதேச சபையின் உறுப்பினர் விக்னராஜா கயிலைநாதன் கூர்மைக்கு தெரிவித்தார்.

பெண் பிரதேச உறுப்பினர் ஒருவரின் வீட்டிற்குச் சென்று அவரை பயமுறுத்தி அவரின் வீட்டில் இருந்து பலவந்தமாக அழைத்துச் சென்று புதன்கிழமை நடைபெற்ற தவிசாளர் தெரிவிற்கு குறித்த பிரதேச சபை உறுப்பினர் வருகை தராத வண்ணம் பல தடைகளை ஏற்படுத்தியதுடன் சட்டவிரோதமாக உறுப்பினர்கள் சிலரை மிரட்டி மாந்தை மேற்கு பிரதேச சபையின் நிருவாகத்தை மிகக் கேவலமான முறையில் அடாவடித்தனமாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மீண்டும் கைப்பற்றியுள்ளதென தமிழர் விடுதலைக் கூட்டணியின் பிரதேச சபை உறுப்பினர் விக்னராஜா கயிலைநாதன் கூர்மைக்கு தெரிவித்தார்.

குறித்த தவிசாளர் தெரிவில் அனைத்து தமிழ் கட்சிகளுடன் ஒன்றிணைந்து செயற்பட்ட மாந்தை பிரதேச சபை உறுப்பினர்கள் இருவர் இறுதி நேரத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக வாக்களித்து மாபெரும் நம்பிக்கைத் துரோகத்தை தமிழ் மக்களுக்கு இழைத்துள்ளதாக மாந்தை மேற்கு பிரதேச சபையின் தமிழர் விடுதலைக் கூட்டணியின் பிரதேச சபை உறுப்பினர் விக்னராஜா கயிலைநாதன் கூர்மைக்கு மேலும் தெரிவித்தார்.