மன்னார் மந்தை பிரதேச சபையின் தவிசாளர் தெரிவு விவகாரம்

றிஷாட் பதியுதீன் ஆதரவாளர்கள் மீது பொலிஸார் விசாரணை

பெண் உறுப்பினர் கடத்தப்பட்டமை குறித்து முறைப்பாடு
பதிப்பு: 2021 மே 22 19:42
புலம்: மன்னார், ஈழம்
புதுப்பிப்பு: மே 24 21:09
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lka
#tamil
முன்னாள் வட மாகாண சபை உறுப்பினரும் முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியூதீனின் இளைய சகோதரருமான ரிப்ஹான் பதியூதீன் மன்னார் பிரதேச சபையின் தவிசாளர் முகம்மது முஜாஹித் மற்றும் மாந்தை பிரதேச சபையின் பிரதித் தவிசாளர் முகம்மது ஹனிபா முகம்மது தௌபீக் உட்பட நால்வருக்கு எதிராக மன்னார் அடம்பன் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மாந்தை பிரதேச சபையின் அங்கம் வகிக்கும் பெண் உறுப்பினர் ஒருவர் நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் அடம்பன் பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் பொலிஸார் புலன் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக கூர்மைச் செய்தி தளத்திற்கு தகவல் கிடைத்துள்ளது.
 
மாந்தை மேற்கு பிரதேச சபையின் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பெண் உறுப்பினரான மன்னார் மாவட்டம் காக்கையன்குளம் இரணை இழுப்பைக்குளத்தைச் சேர்ந்த திருமதி நஸ்ருதீன் றம்சியா என்பவர் வெள்ளி மாலை அடம்பன் பொலிஸ் நிலையத்தின் குற்றத் தடுப்பு பிரிவில் பதிவு செய்த முறைப்பாட்டுக்கு அமையவே மேற்படி விசாரணைகளை அடம்பன் பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

மாந்தை பிரதேச சபையின் தவிசாளர் பதவிக்கான தெரிவு கடந்த 19ஆம் திகதி நடைபெற்றது. இச்சமயம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் தவிசாளர் பதவிக்கு போட்டியிட்டிருந்தார்.

இந்த நிலையில் மாந்தை மேற்கு பிரதேச சபையின் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பெண் உறுப்பினரான மன்னார் மாவட்டம் இரணை இலுப்பைக்குளம் விளாத்திகுளத்தைச் சேர்ந்த திருமதி நெசவுநாதன் தவமலர் குறித்த பிரதேச சபை தவிசாளர் தெரிவிற்கான அமர்விற்கு வருகை தரவில்லை. பின்னர் குறித்த பெண் பிரதேச சபை உறுப்பினர் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியினராலும் மாந்தை மேற்கு பிரதேச சபையின் பிரதித் தவிசாளராலும் கடத்தப்பட்டதாக செய்திகள் வெளிவந்திருந்தது.

இந்த சூழ்நிலையில் மாந்தை பிரதேச சபை உறுப்பினர் நஸ்ருதீன் றம்சியா தனது கட்சியை சேர்ந்த சக பெண் பிரதேச சபை உறுப்பினர் திருமதி நெசவுநாதன் தவமலர், தவிசாளர் தெரிவில் கலந்து கொண்டு வாக்களிக்க கூடாதெனும் நோக்கில் கடத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தொடர்பான தகவல்கள் எதுவும் தெரியாதுள்ளதாகவும் கடந்த 19ஆம் திகதி நடைபெற்ற மாந்தை மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் தெரிவின் பொழுது பிராஸ்தாபித்ததுடன் இது தொடர்பாக தனது கடுமையான கண்டனத்தையும் தெரிவித்திருந்தார்.

பின்னர் பிரதேச சபை உறுப்பினர் திருமதி நஸ்ருதீன் றம்சியா அச்சமயம் ஊடகங்களுக்கும் பேட்டியளித்திருந்தார்.

இச்சூழ்நிலையில் மாந்தை பிரதேச சபை அலுவலகக் கட்டிடத்தில் முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் றிப்ஹான் பதியூதீன் மன்னார் பிரதேச சபையின் தவிசாளர் முகம்மது முஜாஹித் மற்றும் தனது கட்சியை சேர்ந்த மாந்தை பிரதேச சபையின் பிரதி தவிசாளர் முகம்மது ஹனிபா முகம்மது தௌபீக் உட்பட அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியினர் குறித்த பிரதேச சபை பெண் உறுப்பினரான நஸ்ருதீன் றம்சியாவினை கடுமையாக அச்சுருத்தியதாகவும் அவரை சக உறுப்பினர்களுக்கும் ஏனையவர்களுக்கும் மத்தியில் மிக மோசமான தரக்குறைவான வார்த்தைகளினால் ஏசித் திட்டியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்தநிலையில் குறித்த பெண் உறுப்பினர் தனக்கு நிகழ்ந்த அவலம் குறித்து மாந்தை மேற்கு பிரதேச சபையின் புதிய தவிசாளர் இராமநாதன் வவுனியன் ஆதி அருணாசலத்தின் கவனத்திற்கு கொண்டு வந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில் மாந்தை மேற்கு பிரதேச சபை தவிசாளரின் அறிவுருத்தலின் பிரகாரம் குறித்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் பிரதேச சபை உறுப்பினர் திருமதி நஸ்ருதீன் றம்சியா வெள்ளி பிற்பகல் அடம்பன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளாதாக தெரிவிக்கப்படுகிறது.

இதையடுத்து அடம்பன் பொலிஸார் முன்னாள் வட மாகாண சபை உறுப்பினரும் முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியூதீனின் இளைய சகோதரருமான ரிப்ஹான் பதியூதீன் மன்னார் பிரதேச சபையின் தவிசாளர் முகம்மது முஜாஹித் மற்றும் மாந்தை பிரதேச சபையின் பிரதித் தவிசாளர் முகம்மது ஹனிபா முகம்மது தௌபீக் மற்றும் மாந்தை மேற்கு பிரதேச சபையின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் ஒருவருக்கு எதிராக புலன் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த பெண் பிரதேச சபை உறுப்பினர் குறித்த சம்பவம் தொடர்பாக இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவிலும் மன்னார் மாவட்ட மாதர் சங்கத்திலும் முறையிடவுள்ளதாக அவரின் குடும்பத்தினர் கூர்மைச் செய்தித் தளத்திற்கு தெரிவித்தனர்.