மன்னார் பேசாலைக்கு அருகிலுள்ள தமிழ் பேசும் கிராமத்தைச் சேர்ந்த

செல்வந்தர் ஒருவர் வில்லாம்பெருக்கு என்ற வனப்பகுதியை அழிப்பதாக முறைப்பாடு

உயிரியலாளர்களோ சூழலியலாளர்களோ கவனம் செலுத்தவில்லையென ஒலைத்தொடுவாய் தமிழ் மக்கள் விசனம்
பதிப்பு: 2021 மே 25 19:45
புலம்: மன்னார், ஈழம்
புதுப்பிப்பு: மே 25 20:13
main photo main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lka
#tamil
வட மாகாணம் மன்னார் மாவட்டம் மன்னார் தீவில் அமைந்துள்ள ஒலைத்தொடுவாய் வில்லாம்பெருக்கு எனும் புதர்களும் பனை மரங்களும் அடர்ந்த வனப்பகுதி, செல்வந்த தொழில் அதிபர் ஒருவரினால் கடந்த ஒரு வருடமாக சட்டவிரோதமாக அழிக்கப்பட்டுவரும் நிலையில், உயிரியலாளர்களோ சூழலியலாளர்களோ அதையிட்டுக் கவனம் செலுத்தாதவில்லையென விசனம் தெரிவிக்கப்படுகின்றது. அத்தோடு பிரதேச அரசியல்வாதிகளும் மன்னார் மாவட்டத்தைப் பிரதிநிதிப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களும் குறித்த செல்வந்தரின் சட்டவிரோத காடழிப்புத் தொடர்பாக மௌனமாக உள்ளதாக ஒலைத்தொடுவாய் தமிழ் கிராமத்தைச் சேர்ந்த முக்கியஸ்தர்கள் கூர்மைச் செய்தித் தளத்திற்குக் கவலை வெளியிட்டனர்.
 
யாழ் மறை மாவட்டத்தில் இருந்து பிரிந்து மன்னார் தனியானதொரு மறை மாவட்டமாக 1981 ஆம் ஆண்டு முதல் இயங்கத் தொடங்கிய நிலையில் குறித்த வில்லாம்பெருக்கு காடு மன்னார் மறை மாவட்ட ஆயரின் பொறுப்பில் வந்ததாகவும் அதற்கான ஆவணங்கள் அனைத்தும் மன்னார் ஆயர் இல்லத்தில் தறபோதும் உள்ளதாகவும் அநதோணி சகாயம் தெரிவித்தார்

வில்லாம்பெருக்கு காட்டை அனுமதியின்றி அழித்து வரும் குறித்த செல்வந்தர். மன்னார் மாவட்டத்தில் பேசாலைக்கு அருகாமையில் உள்ள தமிழ் பேசும் மக்கள் வாழும் கிராம் ஒன்றைப் பூர்விகமாகக் கொண்டவரெனத் தெரிவிக்கும் ஒலைத்தொடுவாய் கிராம முக்கியஸ்தர்கள், மேற்படி செல்வந்தருக்கு பல நூற்றுக்கணக்கான ஏக்கர் தென்னந்தோப்புகளும் பனந்தோப்புகளும் ஏலவே சொந்தமாகவுள்ளதெனவும் மன்னார் மாவட்டத்தின் பல இடங்களிலும் பெறுமதியான குடிநிலக்காணிகளும் இவருக்கு உரிமையாகவுள்ளதாகவும் கூறுகின்றனர்.

இந்தவொரு நிலையில் வில்லாம்பெருக்கு காட்டையும் தனக்குச் சொந்தமானதென உரிமை கோரி குறித்த காட்டின் பெரும் பகுதியை இவர் அழித்துள்ளதாகவும், ஒலைத்தொடுவாய் கிராமத்தின் மேற்படி முக்கியஸ்தர்கள் கூர்மைச் செய்தித்தளத்திற்கு தெரிவித்தனர்.

மன்னார் மாவட்டத்தில், மன்னார் தீவானது சுமார் 143 சதுர கிலோமீற்றர் நிலப்பரப்பைக் கொண்டதாகும். மேலும் நிர்வாக ரீதியில், மன்னார் பிரதேச செயலகப் பிரிவிற்குள்ளேயே மன்னார் தீவு உள்ளடங்குகிறது. மன்னார் பிரதேசச் செயலகப் பிரிவிற்குட்பட்ட ஓலைத்தொடுவாய் எனும் கிராமசேவையாளர் பகுதியிலேயே குறித்த வில்லாம்பெருக்கு எனும் சுமார் 1800 ஏக்கருக்கும் அதிக நிலப் பரப்புடைய இக் காடு அமைந்துள்ளது.

மன்னார் தீவில் உள்ள குறித்த வில்லாம்பெருக்கு காடானது, பல்லாயிரக்கணக்கான பனை மரங்களும் வடலிகளும் செழித்தோங்கி அடர்த்தியாக வளர்ந்து காணப்படும் பெரும் நிலப்பரப்பாகும். அத்துடன் ஆயிரக்கணக்கான நாவல் மற்றும் வேம்பு மரங்களும் பாலை, இலந்தை, சிலுந்தி, இத்தி, துவரை, கீரி, பசரி, வியாயை , உடை , முந்திரி ஆகிய பயன் தரும் மரங்களும் அடர்ந்து வளர்ந்து பின்னிப்பிணைந்து காணப்படும் மந்துக் காடாகும். மேலும் இக்காட்டிற்குல் உட்புகும் நபர்கள் இலகுவில் வெளிவரமுடியாத ஒரு அடர்ந்த காடாகும்.

அத்துடன் மன்னார் தீவில் உள்ள 1800 ஏக்கர் விஸ்தீரணமுடைய இக் காட்டில் புள்ளி மான்களும், பல நூற்றுக்கணக்கான மந்திகளும், நரி இனங்களும் நூற்றுக்கணக்கான மயில்கள், ஆந்தைகள், வௌவ்வால்கள் மற்றும் ஏனைய பறவை இனங்கள் வாழும் நிலையிலேயே குறித்த காடு சட்டவிரோதமாக அழிக்கப்பட்டு வருவதாகத் ஓலைத்தொடுவாய் மக்களால் கடும் விசனம் தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் மன்னார் தீவின் இயற்கைச் சமநிலையை குறித்த வில்லாம்பெருக்கு காடே பேணிவரும் நிலையில் இக்காடழிப்பினால் இயற்கைச் சுற்றாடலுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக ஒலைத்தொடுவாய் மக்கள் கூர்மைக்கு செய்தித் தளத்திற்கு தெரிவிக்கின்றனர்.

குறித்த காடழிப்பினால் இயற்கையான தமது புகழிடங்களை இழந்துள்ள மான்கள் ஓலைத்தொடுவாய், கரிசல் கிராமங்களுக்கு நுழைவதால் அவை சமுக விரோதிகளினால் இலகுவாக இறைச்சிக்காக பிடிக்கப்படுவதுடன் கட்டாக்காலி நாய்களால் தினமும் கொல்லப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த வில்லாம்பெருக்கு காட்டிற்கு அருகாமையில் உள்ள கிராமங்களான பெரிய கரிசல், சின்னக்கரிசல், புதுக்குடியிருப்பு சிறுதோப்பு மற்றும் பேசாலை பகுதிகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான ஏழைக் குடும்பங்கள் குறித்த காட்டில் இருந்து கிடைக்கபெற்ற விறகு மற்றும் பனை விளைப்பொருட்கள் மூலம் பெற்ற வருமானங்களையே நீண்ட காலமாக தமது வாழ்வாதாரமாகக் கொண்டிருந்தனர்.

இந்த சூழ்நிலையில் வில்லாம்பெருக்கு காடு அழிக்கப்பட்டு வருவதினால் மேற்படிக் கிராமங்களைச் சேர்ந்த குறித்த ஏழைக்குடும்பங்கள் தமது வாழ்வாதாரத்தை முற்றாக இழந்துள்ளதாகக் குற்றம் சாட்டப்படுகின்றது.

மன்னார் மாவட்டத்தில் வசிக்கும் மக்களில் பெருமளவானோர், மன்னார் தீவிற்குள்ளேயே இவ்விதமான பெரும் அளவுடைய நிலப்பரப்பில் மிருங்கள் பல வாழும் அடர்ந்த வனப்பகுதியொன்று உள்ளது என்பதை, இன்றுவரை அறிந்திராத நிலையில், குறித்த செல்வந்தர் எவ்வித சந்தடியுமின்றி குறித்த வில்லாம்பெருக்கு காட்டை துவம்சம் செய்துள்ளதாக ஒலைத்தொடுவாய் மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

இதேசமயம் மன்னார் தீவின் ஒலைத்தொடுவாய் கிராமத்தில் உள்ள வில்லாம்பெருக்கு காடு இலங்கை திருச்சபையின் மன்னார் மறை மாவட்ட ஆயர் இல்லத்திற்கு சொந்தமான இடம் என மன்னார் பிரதேச சபையின் முன்னாள் பிரதித் தவிசாளரும் சிவில் அமைப்புகளின் பிரதிநிதியுமான மன்னார் சின்னக்கரிசலைச் சேர்ந்த அந்தோணி சகாயம் கூர்மைச் செய்தித் தளத்திற்கு தெரிவித்தார்.

மேற்படி செல்வந்தர் ஒலைத்தொடுவாய் வில்லாம்பெருக்குக் காட்டை அழித்து வந்த நிலையில், மன்னார் ஆயர் இல்லத்தினரின் தலையீட்டினால் குறித்த காடு அழிப்பு நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அந்தோணி சகாயம் கூர்மை செய்தித் தளத்திற்கு மேலும் குறிப்பிட்டார்.

எனினும் இந்த காடழிப்பு தொடர்பான செய்தி மன்னார் ஆயர் இல்லத்திற்கு கிட்டுவதற்கு முன்னதாகவே வில்லாம்பெருக்கு காட்டின் பெரும் பகுதியை கனரக டோசர் இயந்திரங்களின் உதவியுடன் குறித்த செல்வந்தரும் அவரின் சகபாடிகளும் அழித்துவிட்டதாகக் அந்தோணி சகாயம் குற்றம் சாட்டுகிறார்.

அத்துடன் அந்தோணி சகாயம் இது தொடர்பாக மேலும் தெரிவித்ததாவது. பேசாலைக்கு அருகாமையில் உள்ள வியாயடிப்பண்ணை மற்றும் தண்ணீத்தாழைத் தொடுவாய் ஆகிய பகுதிகளில் கடந்த 400 வருடங்களுக்கு முன்னர் "தற்குருஸ்" எனும் பெயர்பட்டத்தைக் கொண்ட பராம்பரிய தமிழ் குடும்பங்கள் வாழ்ந்து வந்தனர்.

இந்தநிலையில் அவர்கள் தமது வாழ்விடங்களுக்கு அருகில் உள்ள குறித்த வில்லாம்பெருக்கு பகுதியை ஆண்டாண்டு காலமாக பராமரித்து அதனை ஆட்சிசெய்து அங்கிருந்த பனந்தோப்புகளை மையப்படுத்தி தமது வாழ்வாதரங்களையும் அமைத்து கொண்டனர். அத்துடன் மந்தை வளர்ப்பு மற்றும் தோட்டச் செய்கைகளையும் குறித்த தமிழ் குடும்பங்கள் வில்லாம்பெருக்கு பகுதியில் மேற்கொண்டுள்ளனர்.

இவ்வாறான சூழ்நிலையில் சுமார் நூற்றியம்பது வருடங்களுக்கு முன்னர் வியாயடிப்பண்ணை மற்றும் தண்ணீத்தாழை பகுதி மக்களுக்கி டையில் பரவிய கொள்ளை நோய்( வாந்திபேதி) காரணமாக இப்பகுதியில் வாழ்ந்த தமிழ் குடும்பங்கள் தாம் வாழ்ந்த வாழ்விடங்களைக் கைவிட்டு வேறு பகுதிகளுக்கு இடம்பெயர்ந்தனர்.

இச்சந்தர்பத்தில் குறித்த தமிழ் குடும்பங்கள் தாம் பல தசாப்தங்களாகப் பராமரித்து ஆண்டனுபவித்த வில்லாம்பெருக்குப் பகுதியை அச்சமயம் மன்னார் கத்தோலிக்க பங்குகளுக்கும், குருமாருக்கும் பொறுப்பாக இருந்த யாழ்ப்பாணம் மேற்றிராணியாருக்கு எழுத்தாவணங்கள் மூலம் கையளித்துள்ளனர்.

பின்னர் யாழ் மறை மாவட்டத்தில் இருந்து பிரிந்து மன்னார் தனியானதொரு மறை மாவட்டமாக 1981 ஆம் ஆண்டு முதல் இயங்கத் தொடங்கிய நிலையில் குறித்த வில்லாம்பெருக்கு காடு மன்னார் மறை மாவட்ட ஆயரின் பொறுப்பில் வந்ததாகவும் அதற்கான ஆவணங்கள் அனைத்தும் மன்னார் ஆயர் இல்லத்தில் தறபோதும் உள்ளதாகவும் அநதோணி சகாயம் தெரிவித்தார்.

வில்லாம்பெருக்கு காட்டை அழித்தவர்கள் அது தமக்கு சொந்தமானதென தெரிவிக்கின்றனர். அத்துடன் அதற்கான ஆவணங்கள் உள்ளதாகவும் தெரிவிக்கின்றனர். இந்த நிலையில் மன்னார் ஆயர் இல்லத்தை சேர்ந்த குருமார்கள் இது தொடர்பாக உரிய தரப்பினரிடம் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகவும் அநதோணி சகாயம் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை இலங்கை ஒற்றையாட்சி அரசின் நில அளவைத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள மன்னார் மாவட்டம் தொடர்பான பல வரை படங்களில், வில்லாம்பெருக்கு பற்றி குறிப்பிடப்பட்டுள்ளதுடன் அது வனப்பகுதி எனவும் குறித்த வரைப்படங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.