பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் கைதான

றிஷாத் பதியூதீன் விடுவிக்கப்பட வேண்டுமென வலியுறுத்தி கண்டனப் பிரேரணைகள்

உள்ளூராட்சி சபைகளில் தீர்மானம் நிறைவேற்றம்
பதிப்பு: 2021 மே 27 19:12
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: மே 28 20:16
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
இலங்கையின் முன்னாள் அமைச்சர் றிஷாத் பதியூதீன் மற்றும் அவரின் சகோதரர் றியாஜ் பதியூதீன் ஆகியோர் பயங்கரவாதத் தடைச்சட்டத்தில் கைதாகி கடந்த திங்கள்கிழமை 24ஆம் திகதியுடன் ஒரு மாதம் கழிந்துள்ள நிலையில் இலங்கையில் உள்ள பல உள்ளூராட்சி சபைகளில் றிஷாத் பதியூதீனின் கைது தொடர்பில் பல கண்டனப்பிரேரணைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இலங்கை பயங்கரவாதத் தடுப்பு பொலிஸ் பிரிவினரால் றிஷாத் பதியூதீனும் அவருடை சகோதரர் றியாஜ் பதியூதீனும் உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கடந்த ஏப்பிரல் 24ஆம் திகதி அதிகாலை கொழும்பில் உள்ள அவர்களின் வீடுகளில் வைத்துக் கைது செய்யப்பட்டு தற்பொழுது தொடர்சியான விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.
 
இந்தநிலையில் இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களில் செயல்படும் நகர சபை மற்றும் பிரதேச சபைகளின் மாதாந்த அமர்வுகளில் முன்னாள் அமைச்சர் றிஷாத் பதியூதீனின் கைது தொடர்பாகக் கண்டனத் தீரமானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.

வவுனியா நகர சபை, முல்லைத்தீவு கரைத்துறைப்பற்று பிரதேச சபை, கிண்ணியா நகர சபை, கிண்ணியா பிரதேச சபை உட்பட பல உள்ளூராட்சி மன்றங்களில் இவ்விதம் முன்னாள் அமைச்சர் மற்றும் அவர் சகோதரரின் கைது தொடர்பில் கண்டனத் தீரமானங்கள் முன்வைக்கப்பட்டு அவை நிறைவேற்றப்பட்டுள்ளன.

இதேவேளை முன்னாள் அமைச்சர் றிஷாத் பதியூதீனும் அவர் சகோதரர் றியாஜ் பதியூதீனும் இலங்கை உயர் நீதிமன்றில் தமது கைதிற்கு எதிராக அடிப்படை மனித உரிமை வழக்குகளைத் தாக்கல் செய்துள்ளனர். சட்டவிரோதமாகக் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், தம்மை விடுதலை செய்ய உத்தரவிடப்படல் வேண்டும் எனவும் கோரி இலங்கை உயர் நீதிமன்றில் அடிப்படை மனித உரிமை மீறல் வழக்குகளைத் பதியூதீன் சகோதர்கள் தாக்கல் செய்துள்ளனர்.

இலங்கையின் உயர் நீதிமன்றில் சிரேஷ்ட சட்டத்தரணி கௌரிசங்கரி தவராசாவினால் பதியூதீன் சகோதர்கள் இருவரினதும் மேற்படி மனுக்கள் வெவ்வெறு தினங்களில் தனித்தனியாகத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இலங்கை அரசியல் அமைப்பின் 17 மற்றும் 126 உறுப்புரைக்கு அமைய தாக்கல் செய்யப்பட்ட குறித்த அடிப்படை உரிமை மனுக்களில் உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் தொடர்பில் நியாயமான காரணங்கள் எதுவுமின்றி தாம் பயங்கரவாத தடை சட்டத்தில் கைதாகி தடுத்து வைக்கப்பட்டுள்ளமை சட்டவிரோதம் என உயர் நீதிமன்றம் உத்தரவிடல் வேண்டும் என மனுதாரர்களான பதியூதீன் சகோதர்கள் தமது மனுவில் குறிபிட்டுள்ளனர்.

மேலும் முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான றிஷாத் பதியூதீன் கடந்த மே மாதம் 18ஆம் திகதியன்றும் றியாஜ் பதியூதீன் கடந்த மே மாதம் 19ஆம் திகதியன்றும் தமது அடிப்படை உரிமை மனுக்களை கொழும்பில் உள்ள இலங்கை உயர் நீதிமன்றில் சிரேஷ்ட சட்டத்தரணி கௌரி சங்கரி தவராசா ஊடாகத் தாக்கல் செய்துள்ளனர்.

குறித்த மனுக்களில் தமது சட்டவிரோதக் கைதின் மூலம் தமது அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகவும் இதனால் பிரதிவாதிகளிடம் இருந்து தமக்கு நஷ்ட ஈடாக தலா 500 கோடி ரூபாவை பெற்றுத்தறுமாறு மனுதாரர்களான பதியூதின் சகோதர்கள் தமது மனுக்களில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இலங்கை பொலிஸ் குற்றத்தடுப்பு (சீ.ஐ.டி) முன்றாம் பிரிவின் பொறுப்பதிகாரி பிரதம இன்ஸ்பெக்டர் ஜீ.டி. குமாரசிங்க, மற்றும் பொலிஸ் குற்றதடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி, பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவின் பணிப்பாளர், குற்றத்தடுப்பு பிரிவின் பிரதிப் பொலிஸ் மா அதிபர் உட்பட இலங்கை பொலிஸ் மா அதிபர் மற்றும் சட்ட மா அதிபர் ஆகியோர் குறித்த மனுக்களின் பிரதிவாதிகளாக பெயர் குறிபிடப்பட்டுள்ளனர்.