கடும் புயலினால் வடமாகாணம்

கிளிநொச்சி, மன்னார் மாவட்டங்களில் விவசாயிகள், மீனவர் பாதிப்பு

சேத விபரங்கள் திரட்டப்படுகின்றன
பதிப்பு: 2021 மே 29 19:48
புலம்: கிளிநொச்சி, ஈழம்
புதுப்பிப்பு: மே 30 19:31
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
வட மாகாணத்தின் கிளிநொச்சி மற்றும் மன்னார் மாவட்டங்களில் கடந்த திங்கள் மற்றும் செவ்வாய் ஆகிய தினங்களில் ஏற்பட்ட யாஸ் புயல் தாக்கத்தினால் தோட்டச் செய்கையாளர்களும் மீனவர்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கிளிநொச்சி மாவட்டத்தில் விவசாயிகளும் மன்னார் மாவட்டத்தில் மீனவர்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக அம் மாவட்டங்களின் செயலக அதிகாரிகள் கூர்மைச் செய்தித் தளத்திற்கு தெரிவித்தனர்.
 
கிளிநொச்சி மாவட்டத்தில் பூநகரி பிரதேச செயலகப் பிரிவில் உள்ள முழங்காவில் கிராமத்தில் மேற்படி யாஸ் புயல் காற்றினால் தோட்டச் செய்கையாளர்களுக்கும் விவசாயிகளுக்கும் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாக முழங்காவில் விநாயகர் விவசாயக் கூட்டுறவு அமைப்பின் பொது முகாமையாளர் முருகேசுப்பிள்ளை முரளிதரன் கூர்மைச் செய்தித் தளத்திற்கு தெரிவித்தார்.

கிளிநொச்சி மாவட்டத்தில் முழங்காவில் மற்றும் முட்கொம்பன் ஆகிய பகுதிகளிளேயே பழச்செய்கை மற்றும் தோட்டச் செய்கையில் ஈடுபடுபவர்கள் அதிகம் உள்ள நிலையில் கடந்த திங்கள் மற்றும் செவ்வாய் ஆகிய தினங்களில் யாஸ் புயல் காரணமாக ஏற்பட்ட கடும் சுழல் காற்றினால் இப்பகுதிகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான தோட்டச் செய்கையாளர்களும் பழச் செய்கையாளர்களும் மிகப் பெரும் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளதாகப் பொது முகாமையாளர் முருகேசுப்பிள்ளை முரளிதரன் கூர்மைக்கு மேலும் தெரிவித்தார்.

கடந்த திங்கள் மற்றும் செவ்வாய் தினங்களில் வீசிய சுழல் காற்றினால் முழங்காவில் பகுதி மக்களால் மேற்கொள்ளப்பட்ட சுமார் 30 ஏக்கர் வாழைச் செய்கையும் சுமார் 10 ஏக்கர் அளவிலான பப்பாசிப் பழச்செய்கையும் முற்றாக அழிந்துள்ளது. அத்துடன் நூற்றுக்கணக்கான தென்னை மா பலா பாக்கு ஆகிய பயன்தரும் நிலையில் காணப்பட்ட நீண்ட காலப் பயிர்களும் பெரும் அழிவுக்கு உட்பட்டுள்ளதாக முருகேசுப்பிள்ளை முரளிதரன் கூர்மைக்கு மேலும் தெரிவித்தார்.

அத்துடன் பூநகரி பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட முழங்காவில் பிரதேசத்தில் தோட்டச் செய்கை உட்பட விவசாய செய்கைகளில் ஈடுபட்டு, யாஸ் புயல் காற்றினால் பாதிப்புக்கு உள்ளாகியோர்களின் விபரங்களை முழங்காவில் விநாயகர் விவசாயக் கூட்டுறவு அமைப்பு தற்பொது திரட்டி வருவதாகவும் பொது முகாமையாளர் மேலும் தெரிவித்தார்.

அத்துடன் முழங்காவில் பகுதியில் பாதிப்பிற்கு உள்ளான தோட்டச் செய்கையாளர்கள் மற்றும் விவசாயிகளின் விபரங்கள் முழுமையாக கிடைத்தவுடன் அவ் விபரங்கள் கிளிநொச்சி மாவட்ட அநர்த்த முகாமைத்துவப் பிரிவு அதிகாரிகளுக்கும் விவசாய விரிவாக்கத் திணைக்களம் மற்றும் கமத்தொழில் அபிவிருத்தி திணைக்களத்திற்கும் அனுப்பி வைக்கப்படவுள்ளதாக பொது முகாமையாளர் முருகேசுப்பிள்ளை முரளிதரன் கூர்மைச் செய்தித் தளத்திற்கு மேலும் தெரிவித்தார்.

இதேவேளை மன்னார் மாவட்டத்தில் கடந்த திங்கள் மற்றும் செவ்வாய் ஆகிய தினங்களில் வீசிய யாஸ் புயல் காற்றினால் 16 குடும்பங்களைச் சேர்ந்த 59 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் மன்னார் மாவட்டத்தில் 13 வீடுகளும் 2 கடைகளும் குறித்த காற்றினால் சேதமடைந்துள்ளதாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ. ஸ்ரன்லி டி மெல் கூர்மைச் செய்தித்தளத்திற்குத் தெரிவித்தார்.

மன்னார் மாவட்டத்தில் மாந்தை மேற்கு பிரதேச செயலகப் பிரிவிற்கு உட்பட்ட பெரியமடு கிராமசேவையாளர் பிரிவில் 3 ஏக்கர் பரப்பளவில் பப்பாசி பழச்செய்கையும் வெள்ளாங்குளம் கிராமசேவையாளர் பிரிவில் 5 ஏக்கர் பரப்பளவில் வாழைச் செய்கையும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக மன்னார் அரசாங்க அதிபர் திருமதி ஏ. ஸ்ரன்லி டி மெல் கூர்மைக்கு மேலும் தெரிவித்தார்.

மன்னார் மாவட்டத்தில் யாஸ் புயல் காற்றின் தாக்கத்தினால் கடந்த செவ்வாய் மாலை சில மீனவக் கிராமங்களில் கடல் நீர் உட்புகுந்ததுடன் மீனவர்களின் படகுகளும் மீன்பிடி வலைகளும் கடலில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது.

அத்துடன் மீனவர்களின் வாடிகளும் பாதிப்படைந்துள்ளதாக மீனவர்கள் கூர்மைச் செய்தித் தளத்திற்குத் தெரிவித்தனர்.