இலங்கைத் தீவில்

கொரோனா பரவலைத் தடுக்க அரசாங்கம் தவறியுள்ளது- ராஜபக்சவுக்கு ஆதரவான பௌத்த தேரர்கள் குற்றச்சாட்டு

நாளுக்கு நாள் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்படுவதாகவும் தெரிவிப்பு
பதிப்பு: 2021 மே 31 15:32
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: ஜூன் 02 23:31
main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lka
#gotabayarajapaksa
இலங்கைத் தீவில் வேகமாகப் பரவி வரும் கொரோனாவின் மூன்றாவது அலையை கட்டுப்படுத்துவதற்கு சுகாதாரத் துறையினர் வழங்கிய அறிவுறுத்தல்களை அலட்சியம் செய்ததுடன் உரிய நேரத்தில் தேவையான நடவடிக்கைகளை இலங்கை அரசாங்கம் எடுக்கத் தவறியதால் நாடளாவிய ரீதியில் தினமும் ஆயிரக்கணக்கான புதிய தொற்றாளர்கள் அடையாளம் காணப்படுவதுடன் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் நாளாந்தம் அதிகரிப்பதாக பௌத்த தேரர்களான முருத்தெட்டுவ ஆனந்த தேரர் மற்றும் அக்மீமன தயாரத்ன தேரர் ஆகியோர் குற்றம் சாட்டியுள்ளனர்.
 
தமிழர் தாயகமான வடக்கு கிழக்கு மாகாணங்கள் உட்பட இலங்கையின் அனைத்து மாகாணங்களிலும் உள்ள 25 மாவட்டங்களிலும் கொவிட்-19 நோய் தொற்று வேகமாக பரவி வருகிறது. கொவிட் சிகிச்சை மையங்களில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளாந்தம் அதிகரித்து செல்கிறது.

நாடளாவியரீதியில் தினமும் கொவிட் மரணங்கள் சம்பவிக்கின்றது. இலங்கை அரசாங்கம் பயணத் தடைச் சட்டங்களை அமுல்படுத்தி கொவிட் -19 நோய் தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கு பல பிராயத்தனங்களை மேற்கொண்டும் கொவிட் நோய் தொற்று கட்டுக்கடங்காமல் பரவி வருகின்றது.

இவ்வாறான சூழ்நிலையில் இலங்கை தீவின் ஆளும் தரப்பான பொதுஜன பெரமுன கட்சியின் அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டு வருவதற்காகப் பெரும் பங்களிப்புச் செய்த பௌத்த தேரர்களில் ஒருவரான முருத்தெட்டுவ ஆனந்த தேரர், இலங்கை அரசாங்கத்தின் கொவிட் -19 நோய் தடுப்பு நடவடிக்கைகளில் நிலவும் பாரிய குறைபாடுகள் மற்றும் வினைத் திறனற்ற செயல்பாடுகள் குறித்து தென்னிலங்கை ஊடகங்கள் வாயிலாகத் தனது கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசாங்கத்தின் கொவிட்-19 தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் தொடர்பில் அரசாங்கத்திற்கு ஆலோசனைகள் வழங்கும் நபர்கள் இது தொடர்பில் எவ்வித தேர்ச்சியும் அனுபவங்களும் அற்றவர்கள்.

இவ்வாறானவர்களின் ஆலோசனை பேரில் நடைபெறும் தடுப்பூசி வழங்கும் செயற்திட்டத்தினால் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது. இவர்களின் ஆலோசனையின் அடிப்படையில் தடுப்பூசிகளை கட்டம் கட்டமாக சிறிய அளவில் பெற்று அதனை மக்களுக்கு செலுத்துவதால் பொது மக்களுக்கு அரசின் மீது ஆத்திரமும் கோபமும் ஏற்பட்டுள்ளது. மேலும் இவ்வாறான நடவடிக்கை காரணமாக மக்கள் அரசாங்கத்தின் மீது வெறுப்படையும் நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அரசின் மீது மக்கள் வெறுப்படையும் நிலை ஏற்பட்டதிற்கு அரசிற்கு ஆலோசனை வழங்குபவர்களே பொறுப்பேற்க வேண்டும்.

எனவே இலங்கை ஜனாதிபதி சுகாதாரத்துறையில் அனுபவம் அற்ற ஆலோசனையாளர்களை கைவிட்டு தடுப்பூசி நடவடிக்கைகளில் அனுபவமும் தேர்ச்சியும் கொண்டவர்களை இணைத்துக் கொள்ளவேண்டும் என கொழும்பு ஊடகங்களுக்கு முருத்தெட்டுவ ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இலங்கையில் கொவிட் நோய் தொற்று அதிகரித்து நாளாந்தம் பொது மக்கள் பலியாகி வரும் நிலையில் இது குறித்து இலங்கை அரசாங்கத்தை சிங்கள ராவய அமைப்பின் முக்கியஸ்தர் அக்மீமன தயாரத்ன தேரர் கடுமையாகச் சாடியுள்ளார். கடந்ந சனிக்கிழமை கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவர் கொவிட் நோய்த் தொற்று தொடர்பில் அரசாங்கத்தின் நடவடிக்கைகள் குறித்து தனது பலத்த ஆட்சேபனைகளைத் தெரிவித்துள்ளார்.

கொரோனாவின் மூன்றாவது அலையில் நாடு சிக்கித் தவிக்கிறது. கொரொனாவின் தாக்கத்தினால் நாட்டில் அதிகளவான மரணங்கள் தினமும் நிகழ்கின்றது. தற்போதைய நாட்டின் நிலைக்கு கொட்டாபய ராஜபக்ஸ தலைமையிலான இன்றைய அரசாங்கம் பொறுப்பு கூறவேண்டும். மேலும் இலங்கையில் கொரோனா நோய்த் தொற்றின் மூன்றாவது அலையின் ஆரம்ப நாட்களில் நாட்டை உடன் முடக்குமாறு நாம் இலங்கை அரசைக் கோரினோம். எனினும் அரசாங்கம் அதனை செயற்படுத்தவில்லை. தற்போது நிலைமைகள் யாவும் கை மீறிச் சென்றுவிட்டது.

இவ்வாறான. நிலையில் தற்போது நாட்டை முடக்குவதில் எந்தப் பயனும் இல்லை. இலங்கையில் நான்கு அல்லது ஐந்து தினங்களுக்கு நாட்டை மூடுகிறார்கள். பின்னர் திறக்கின்றனர். இவ்வாறான நடைமுறையினால் கொவிட் தொற்றுக்கு புதியவர்களும் இலக்காகும் நிலை ஏற்படுகின்றது. இலங்கை அரசாங்கத்தின் பொறுப்பற்ற செயல்பாடுகளினால் இலங்கை முழுதும் நோய்த் தொற்று அதிகரித்துச் செல்கின்றது.

ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ச ஆட்சிக்கு வந்தவுடன் இலங்கை மக்களின் பிரச்சினைகள் யாவும் தீர்ந்துவிடும் எனக் கூறப்பட்டது. எனினும் இன்றுவரை இலங்கையில் அவ்வாறான எதுவும் நடைபெறவில்லை.

நாட்டை வெறுமனே முடக்குவதால் பயன் எதுவும் கிடைக்கப்போவதில்லை. கொழும்பு கெஸ்பாவே பகுதியில் இன்று கொவிட் நோய்த் தொற்று அதிகரித்துள்ளது. அரசியல்வாதி ஒருவரின் பொறுப்பற்ற செயல்பாடினால் இது ஏற்பட்டுள்ளது. குறித்த அரசியல்வாதிக்கு எதிராக இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

நாட்டின் இன்றைய நிலையில் அரசியல்வாதிகள் இதில் தலையீடு செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாதென சிங்கள ராவய அமைப்பின் முக்கியஸ்தர் அக்மீமன தயாரத்ன தேரர் ஊடகவியளார் சந்திப்பில் மேலும் தெரிவித்துள்ளார்.