வடமாகாணம்

யாழ்ப்பாணத்தில் அதிகரிக்கும் கொவிட்-19. மரணிப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் உயர்வு

தடுப்பூசி போடும் நடவடிக்கைகளும் ஆரம்பம்
பதிப்பு: 2021 மே 31 20:29
புலம்: யாழ்ப்பாணம், ஈழம்
புதுப்பிப்பு: ஜூன் 02 23:26
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lka
#tamil
தமிழர் தாயகமான வட மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலும் கொவிட் - 19 நோய் தொற்றாளர்கள் தினமும் அடையாளம் காணப்படும் நிலையில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் அடையாளம் காணப்படும் தொற்றாளர்களின் எண்ணிக்கை தினமும் உயர்வடைவதுடன் கொரோனாவில் மரணமடைபவர்களின் தொகையும் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் இலங்கை அரசாங்கத்தினால் யாழ்ப்பாணம் மாவட்டத்திற்கு அனுப்பிவைக்கப்பட்ட கொவிட் தடுப்பூசிகளை பொது மக்களுக்கு செலுத்தும் பணிகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆரம்பிக்கப்பட்ட நிலையில் அன்றைய தினமே 2948 தடுப்பூசிகள் பொது மக்களுக்குச் செலுத்தப்பட்டதாக வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஏ. கேதிஸ்வரன் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
 
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பதினொரு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள் இயங்கி வருகிறது. இந்ந நிலையில் குறித்த பிரிவுகளில் உள்ள கிராமசேவையாளர் பகுதிகளில் கொவிட்-19 தொற்றாளர்கள் அதிகம் அடையாளம் காணப்பட்ட பிரதேசங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு அப்பகுதி மக்களுக்கு குறித்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் கடந்த ஞாயிறு காலை 8 மணிதொடக்கம் முன்னெடுக்கப்பட்டதாக வட மாகாண சுகாதாரப் பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.

மேலும் குறித்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உள்ள மாவட்ட சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் அமைக்கபட்ட 12 நிலையங்களில் முன்னெடுக்கப்பட்டதாகவும் குறித்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் திங்கள் தொடக்கம் தொடர்சியாக முன்னெடுக்கப்படும் எனவும் வட மாகாண சுகாதாரப் பணிப்பாளர் டொக்டர் ஏ. கேதிஸ்வரன் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை இலங்கை அரசாங்கத்தினால் யாழ்ப்பாணம் மாவட்டத்திற்கு அனுப்பிவைக்கப்பட்ட 50 ஆயிரம் கொவிட் தடுப்பூசிகளை வட மாகாண சுகாதார அதிகாரிகளிடம் கையளிக்கும் வைபவம் யாழ் போதனா வைத்தியசாலையில் கடந்த ஞாயிறு காலை நடைபெற்றது. குறித்த நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் வட மாகாண ஆளுநர் திருமதி பி. எம். எஸ். சார்ள்ஸ் மற்றும் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஏ. கேதிஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதேவேளை யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கடந்த ஞாயிறு ஆரம்பிக்கப்பட்ட கொவிட் தடுப்பூசிகள் செலுத்தும் பணிகளைப் பார்வையிடுவதற்காக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ யாழ் வருகை தந்தார். யாழ் நகரில் கொவிட் தடுப்பூசிகள் செலுத்தும் மையங்களுக்கு சென்று அவர் தடுப்பூசிகள் செலுத்தும் பணிகளைப் பார்வையிட்டார்.